ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2018

அகஸ்தியன் மின் கதிர்களை நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான் – அவன் பெற்ற சக்திகளை அவன் சகாக்கள் பெற்றுச் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்

பிறந்த பின் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் அகஸ்தியன் வானை நோக்கிப் பார்க்கின்றான். மின்னல்கள் பல வழியில் தாக்குகின்றது. அதை உற்றுப் பார்த்த அந்தக் குழந்தையோ
1.அந்த மின் கதிர்களின் உணர்வை தனக்குள் நுகர்ந்து அதை அடக்கும் வலிமை பெறுகின்றது.
2.சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்களை நுகருகின்றான்.
3.மின் அணுக்களைப் போன்று தன் உயிரின் அணுக்களை மாற்றும் தன்மை வருகின்றது.

 புழுவை ஒரு குளவி கொட்டினால் அதனின் விஷத் தன்மைகள் பாய்ந்து புழுவின் உணர்வுகள் மாற்றமடைந்து புழுவை வளர்த்த அந்த உயிர் குளவியின் உணர்வை நுகர்ந்து குளவியாக உருமாறுகின்றது.

இதைப் போலத் தான் தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது தாய் உற்றுப் பார்த்த உணர்வின் தன்மை கருவிலே விளைந்து அகஸ்தியன் பிறந்தபின் மின்னல்களையும் சூரியனிலிருந்து வரும் விஷத் தன்மைகளையும் கருக்கிவிட்டுத் தன் உடலிலிருக்கும் அணுக்களை எல்லாம் ஒளிக் கதிர்களாக மாற்றும் நிலை வருகின்றது.

ஒரு மின் மினிப் பூச்சியை எடுத்துக் கொண்டால் அது நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதன் இயக்கத் தொடரில் மின் ஒளிகளை அது தன் உடலிலிருந்து வெளிப்படுத்தும்.

அது போன்று அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களும் நஞ்சை ஒடுக்கி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.

அவன் குழந்தையாகத் தவழ்ந்து வரும் போது அவன் அருகிலே வரும் பாம்பினமோ கொசு இனமோ விஷ வண்டுகளோ மிருகங்களோ யானைகளோ இவன் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைக் கண்டு அஞ்சுகின்றது... ஒடுங்குகிறது... இவனைத் தீண்டுவதில்லை... இவன் அருகிலே வருவதற்கு அஞ்சுகின்றது. அதனுடைய விஷத்தின் வலிமையையும் இழக்கின்றது.

இதை உற்றுப் பார்த்த அன்று வாழ்ந்த மக்கள் இது கடவுளின் பிள்ளை என்று இவரை வணங்கத் தொடங்குகின்றனர்.

குளவி கொட்டியபின் புழுவினுடைய தன்மைகள் மாறி அது குளவியானபின் மீண்டும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல ஒரு கூட்டை அமைத்து தன் இனத்தைப் பெருக்குகின்றது.

அதே போல அகஸ்தியனுக்குள் இருக்கும் உணர்வுகள்
1.நஞ்சை ஒடுக்கிடும் உணர்வின் அறிவை அவனுக்கு ஊட்டி
2.இதன் வழி கொண்டு அவன் அரும் பெரும் சக்திகளை எல்லாம் பெறுகின்றான்.

மிருகங்கள் இவனைத் தாக்குவதில்லை என்ற நிலைகளை அறிந்த பின் அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் போது படைகள் போன்று அவன் பின்னாடி மக்கள் செல்கின்றனர்.
அவன் கடவுளின் அவதாரம் இவன் காட்டு அரசன் என்று அவனைப் போற்றித் துதிக்கும் நிலையும் வணங்கும் நிலையும் அக்காலங்களில் வருகின்றது.

தன் ஐந்தாவது வயதிற்குள் பூமிக்குள் உருவாகும் தாவர இனங்களுக்கு உணவு எவ்வாறு கிடைக்கின்றது…? இது எப்படி விளைகின்றது..? எதன் வழி விளைகின்றது என்று அவன் அறிகின்றான்.

அகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் உணர்வின் தன்மை ஒளியாகச் சூரியன் எவ்வாறு பிறந்ததென்ற உணர்வையும் அறிகின்றான். அவன் கண்ட உண்மையை அக்கால மக்களிடம் வெளிப்படுத்துகின்றான்.

அக்கால மக்கள் அவன் சொல்வதின் உணர்வை அறியாத நிலை வரும் பொழுது அகஸ்தியன் உணர்ச்சியின் தன்மையைக் கூட்டி இயற்கையின் இயக்கத்தை ஜாடையாகக் காட்டி அதன் வலிமையைக் காட்டுகின்றான்.

ஐந்தாவது வயதில் பூமியின் துருவத்தை உற்று நோக்கி அதிலிருந்து வரும் விஷத் தன்மையை நுகர்ந்து அந்த நஞ்சினை வென்றிடும் அணுத் தன்மையைத் தனக்குள் வளர்க்கிறான்.

அகண்ட அண்டத்தின் நிலையும் பிரபஞ்சத்தின் நிலையும் சூரியனின் இயக்கமும் இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எப்படி உருவானது என்ற உண்மை நிலையையும் அவன் உணர்கிறான்.

அணுவின் இயக்கத்தை உணரும் பருவம் பெறுகின்றான். அந்த உண்மையின் இயக்கத்தை அறிந்ததனால் அவனுக்கு அகஸ்தியன் என்ற காரணப் பெயர் வைக்கின்றனர்.

இந்தப் பேருண்மைகள் அனைத்தும் அவனுக்குள் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து தான் கண்டதைத் தன் அருகில் உள்ள மற்ற சகாக்களுக்கும் சொல்கிறான்.

அவனின்று வெளிப்பட்ட உணர்வு இன்றும் புவியில் படர்ந்துள்ளது. அவன் நகர்ந்து சென்ற எல்லைகளிலும் பதிந்துள்ளது.
1.அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
2.அவனுடைய சகாக்கள் அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.அந்த அகஸ்தியனின் உணர்வைக் கவர்ந்தால் நாமும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழலாம்.