ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 19, 2018

அதிகம் படித்தவர்களும் கூட கால்குலேட்டர் இன்று இல்லாமல் எதையும் கணக்கிட முடியவில்லையே…! ஏன்…?


நாம் கால்குலேட்டரை அழுத்தித்தான் எல்லாக் கணக்குகளையும் இயக்குகின்றோம். “மனக் கணக்கு” என்பதெல்லாம் காணாமலே போய்விட்டது.

அன்று பெருக்கல் வாய்ப்பாட்டை எண்ணி அதனைக் கூர்ந்து நினைவு கொண்ட பின் உடனே ஒரு நொடிக்குள் பெருக்கல் போட்டு இதனுடைய கூட்டமைப்பு “இவ்வளவு தான்…!” என்று சிறு குழந்தை கூடச் சொல்லிவிடும்.

ஒரு மூன்றாவது வகுப்பு படித்த பிள்ளை அன்று சொல்லும் இந்தப் பாட நிலையை இன்று B.E. MBA படித்தவர்கள் இதைக் கால்குலேட்டரில் போட்டால்தான் வரும்.

கால்குலேட்டரின் உதவி இல்லை என்றால் சரியான அந்தக் கணக்கு வருவதற்கு முன்னாடி போட்டுப் போட்டுப் பார்த்து மணிக்கணக்காக ஆகிவிடும். இவர்கள் கால்குலேஷன் போட வேண்டும் என்றால் விஞ்ஞானக் கருவி கொண்டு தான் இதைப் பார்க்க முடிகின்றது.

இல்லை என்றால் தப்பாகி விடுகின்றது. அதற்கு வேண்டிய பொறுமையும் இல்லை. சுருக்கமான வழி என்று சொல்லிக் கொண்டு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அந்தக் கருவிகளைத்தான் மெச்சுகின்றோம்.

சிந்தித்துச் செயல்படும் தன் ஞானத்தை மறந்தே செயல்படுகின்றோம். இன்று இதை யாரும் மறுக்க முடியாது.

1.ஞான உணர்வின் நிலை கொண்டு தன் எண்ணத்தால் அதை நுகர்ந்து
2.உணர்வின் தன்மை பிளந்து அறியும் ஆற்றல் மிக்க
3.அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் இன்று மறைந்து விட்டது.

நமது மெய் ஞானிகள் காட்டியது எல்லாமே ஐதீகமாக மாற்றப்பட்டு உட்பொருளை அறிய முடியாதபடி அந்த வித்தின் தன்மைகள் மறைந்து கொண்டே வருகின்றது.

விஞ்ஞான உலகில் மனிதனின் உணர்வுகள் மறைந்து வரும் இக்காலத்தில் இதை யாம் சொன்னால்… “இவர் என்ன இதைக் கூடக் குறையாகச் சொல்கிறார்…! இதெல்லாம் இல்லை என்றால் எப்படி…? என்று கேட்பார்கள்.

அதையெல்லாம் “நாம் உயர்ந்த கண்டுபிடிப்பு” என்று நாம் நினைக்கின்றோம். அந்த ஞானம் தனக்குள் இருக்கிறது அதை எப்படி வளர்த்து மனிதன் நாம் அடுத்த நிலைக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற நிலையே அற்று விட்டது.

ஏனென்றால் நம்முடைய ஆறாவது அறிவை வளர்ச்சியின் பாதையில் “ஏழாவது நிலையாக… ஒளியாகக் கொண்டு செல்ல வேண்டும்…!” என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.