ஞானிகளைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். படிக்கின்றோம்.
ஆனால் அடுத்து மற்ற குறையான உணர்வைத்தான் அதிகமாகப் பேசுகின்றோம்.
உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கின்றோம் என்று வைத்துக்
கொள்வோம். அங்கே வரக்கூடிய குறைகளை நிவர்த்திப்பதற்கும் உற்பத்தியோ மற்ற வேலைகள் எல்லாவற்றையும்
சீராக்குவதற்காகத்தான் தொழில்களில் நாம் அமர்த்துகின்றோம்.
ஆனால் தொழிலில் குறை வந்துவிட்டதென்றால் குறை வந்து கொண்டே இருக்கிறது
என்று சொல்லி அப்படியே விட்டு விட்டால் குறை அப்படியே தான் இருக்குமே தவிர அதைத் தெளிவாக்கி
மறுபடியும் சீர்படுத்த முடியாது.
ஒரு நெசவுத் தொழிலை செய்கிறோம் என்றால் சந்தர்ப்பத்தில் நூல் அறுந்து
போகும். அப்பொழுது நூல் இல்லாமல் வரும். அதை மீண்டும் இணைத்துச் சரிபடுத்த
வேண்டும் அல்லவா. ஆனால்
1.நூல் அறுந்து கொண்டே தான் இருக்கிறது...
2.சரி…! அப்படியே இந்தத் துணியை நெய்வோம் என்று விட்டு விட்டால்
3.அது தரமான துணியாக அது வருமா…?
4.இந்தத் தரத்தைப் பார்ப்போர் நம்மிடம் துணியை வாங்குவார்களா...?
அதை போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் குறை வந்து கொண்டே இருக்கிறது
என்ற நிலைகளில் அதை அப்படியே விட்டு விட்டால் நம் எண்ணத்தின் நிலைகள் எங்கேயும் செல்லுபடி
ஆகாது.
நாம் எங்கு சென்றாலும் நம் மீது வெறுப்பின் தன்மையும் மற்ற நிலைகளும்
வந்துவிடுகிறது. ஆகவே யார் எந்தத் தீமை செய்தாலும் அந்த தீமையிலிருந்து அவர்கள் அகல
வேண்டுமென்று எண்ண வேண்டும். அந்தத் தீமையை நமக்குள் பதிவாக்கிக் கொள்ளக் கூடாது.
தீமை செய்கிறான்... தீமை செய்கிறான்... என்று எண்ணிக் கொண்டு
அல்லது சொல்லிக் கொண்டே இருந்தால் அது நம்மையும் தீமை செய்ய வைக்கும்.
1.அவன் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நாம் அதற்காகத் தியானமிருக்க
வேண்டும்.
2.குறைகளைக் கூறுவதற்குப் பதில் நமக்குள் அந்தக் குறைகளை நீக்கும்
நிலைகளுக்குப் பழக்கம் வர வேண்டும்
3.இதை வழிப்படுத்தி நாம் எல்லோரும் ஒரு குடும்பமான நிலைகளில் இயங்கிப்
4.பிறருக்கு வழிகாட்டியான நிலைகளில் வர வேண்டும்.
அது அல்லாதபடி நாம் மற்றவர்களைப் பற்றியும்... நாட்டில்
நடக்கும் சம்பவங்களைப் பற்றியும்... உலகில் நடக்கும் நிகழ்வுகளையும் பற்றியும்...
மீண்டும் மீண்டும் குறைகளையே பேசிக் கொண்டு
இருந்தோமேயானால் விஷமான உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகி விஷமான சரீரத்தைத்தான் பெறுவோமே
தவிர ஒளிச் சரீரத்தைப் பெறும் தகுதி இல்லை.
இவ்வளவு பெரிய சக்தியைப் பரப்பியும் அதைப் பயனற்ற நிலைகள் ஆக்காதபடி
குறைகளை நிவர்த்திப்பதற்குண்டான முயற்சியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். அதற்குகந்த வார்த்தைகளையும்
சொல்களையும் பயன்படுத்திப் பழக வேண்டும்.
எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் எங்கே சென்றாலும்
எந்த நிமிடம் ஆனாலும்
1.“எனக்கு இவ்வாறு துன்பம் செய்தார்...” என்று அவர்களைக்
குறையாக எண்ணாதபடி
2.“எனக்குத் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது...!” என்று குறையாக
எண்ணாதபடி இந்த எண்ணத்தை மாற்றவேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
4.மெய் ஞானியின் உணர்வலைகளை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் நீங்கள்
ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். (இது முக்கியம்)