ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 22, 2018

விநாயகர் சிலையின் மீது ஏறி உட்கார்ந்த குருநாதர் இறங்க மாட்டேன் என்றார் – நடந்த நிகழ்ச்சி


பட்சிகளாக இருக்கும் தூக்கணாங்குருவி அதற்குக் கை கால் அங்கங்கள் இல்லை என்றாலும் அதனின் ஞானத்தைக் கொண்டு தான் குடி இருப்பதற்காக வேண்டித் தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்கின்றது.

இனத்தைப் பெருக்கிய பின் தன் குஞ்சுகளுக்கு இரவிலே வெளிச்சம் வேண்டும் என்பதற்காக மின் மினிப் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு களி மண்ணில் ஒட்ட வைத்து வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இதைப்போல பட்சிகளில் பெற்ற இந்த உணர்வின் ஞானம் தான் அடுத்தடுத்து ஒவ்வொன்றிலும் வளர்ச்சியாகப் பெற்றது.

உதாரணமாகக் கரடிகளை எடுத்துக் கொண்டால் குட்டி போடுகிறது என்றால் மனிதன் எவ்வாறு வீடு கட்டுகின்றானோ அதைப் போல அது பாறைகளை அடுக்கடுக்காக அடுக்கி வைத்துச் சுற்றி கற்களை வைத்துத் தனக்குப் பாதுகாப்பான நிலைகளை குகை போல அமைத்துக் கொள்கிறது.

இயற்கையில் விளைந்த தாவர இனங்களை உணவாக உட்கொண்டு ஞானத்தின் நிலைகளில் மற்ற உயிரினங்கள் வளர்ச்சி அடைந்து
1.அது தனக்கு வேண்டியதை எவ்வாறெல்லாம் அமைத்துக் கொள்கின்றது...?
2.அதனின் ஞானம் எவ்வாறு அமைந்திருக்கின்றது...? என்பதை
3.எம்மைக் (ஞானகுரு) கண்டுணரச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

மற்ற உயிரினங்களுக்கு உடல் அங்கங்கள் குறைந்திருப்பினும் தன் உணர்வின் ஞானத்தால் தன்னிடம் இருக்கும் உடலின் அமைப்பின் நிலைகள் கொண்டே தனக்குப் பாதுகாப்பான இருப்பிடங்களை  எப்படி அமைத்துக் கொள்கின்றது...? என்பதை ஒவ்வொன்றையும் நேரடியாகக் கண்களாலேயே பார்த்து அனுபவப்பூர்வமாக அறியச் செய்து உணர்த்துகின்றார்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நாம் சேர்த்துக் கொண்ட (சுவாசிக்கும்) உணர்வுகள் அனைத்தும் வினையாகச் சேர்ந்து தற்காத்துக் கொள்ளும் ஞானமாக விளைந்து... விளைந்து... அடுத்தடுத்த சரீரங்கள் பெற்றோம்...! என்பதைக் காட்டுவதற்காகத்தான் விநாயகருக்கு யானைத் தலையை மனித உடலில் பொருத்திக் காட்டினார்கள்.

அதாவது நாமெல்லாம் புரிந்து கொள்ளும்படியாக
1.“வினைக்கு நாயகன் விநாயகன்...! என்றும்
2.முன் சேர்த்துக் கொண்ட நல் வினைகளுக்கொப்ப நாயகனாக இன்று மனிதனாக உருவானோம்...! என்று
3.தன்னை அறிந்திட ஞானிகள் அவ்வாறு காட்டியுள்ளார்கள்.

ஒரு சமயம் குருநாதர் ரோட்டுப் பகுதியில் இருக்கும் விநாயகர் சிலையின் மேல் சவாரி ஏறி உட்கார்ந்து கொண்டு “நான் தான்டா விநாயகன்...!“ என்றார்.

அந்த விநாயகன் மேல் அமர்ந்து அவர் “நான் தான் விநாயகன்…!” என்று இருக்கும் போது அதைப் பார்த்து அங்கே வருவோர் போவோர் எல்லாம் என்னை ஏசுகிறார்கள்.

ஒரு பைத்தியத்தை இந்த மாதிரித் தெய்வத்தின் மேல் அமர வைத்துக் கொண்டு நீ வேடிக்கை பார்க்கின்றாயே... “அவரைக் கீழே இறங்கச் சொல்… ஐயா…!” என்று எல்லோரும் சொல்வார்கள்.

அவனுக்கு அறிவில்லை…! நீ நான் சொல்வதைக் கேள்...! என்று எம்மிடம் சொல்லிக் கொண்டே  இருப்பார் குருநாதர்.

அவர்கள் “கீழே இறங்கு...!” என்பார்கள். நான் எப்படியடா இறங்குவது…?” என்று சொல்வார் குருநாதர். இப்படிப் பல நிலைகளை உணர்த்தினார்.

காரணம்… இவ்வாறு புழுவிலிருந்து மனிதனாக வரும் நிலையில் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு
1.மிருக நிலையிலிருந்து நான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு
2.இன்று என் உடலான... “நான்...” வினைக்கு நாயகனாக என் உடல் அமைந்திருக்கின்றது. 
3.இதிலிருந்து... “இவன் என்னை இறங்கச் சொன்னால்... நான் எப்படி இறங்குவேன்...?” என்று இதையெல்லாம் தெளிவுற எடுத்து விளக்கமாக உரைத்தார்.

நல்வினைகளைச் சேர்த்து வளர்ச்சியின் பாதையில் மனிதனாக உருவான பின் அதிலிருந்து நாம் தீய வினைகளைச் சேர்த்து
1.மீண்டும் மனிதனல்லாத நிலையில் மிருகமாகவோ
2.மற்ற விஷம் கொண்ட உருக்களாகவோ தேய்பிறையாகக் கீழே இறங்கக் கூடாது என்பதை அவ்வாறு எமக்குத் தெளிவாக்கினார்.

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகள் நமக்குள் தீய வினைகளாகச் சேராதபடி தடுத்துக் கொள்ள அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் சேர்க்க வேண்டும்.

இன்றைய செயலாக மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் நல் வினைகளாகச் சேர்த்துச் சேர்த்து நாளைய செயலாக ஒளியின் சரீரமாக நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதே ஞானிகள் காட்டிய “விநாயகர் தத்துவம்...!”