ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 18, 2018

குருநாதனே சரணம்...! என் சரீரத்தையே உங்களிடம் ஒப்படைத்து விட்டேன்.. என்னமோ பண்ணிக் கொள்ளுங்கள்...!


குருநாதர் எம்மைக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் விட்டு விட்டு யானையைத் தனியாகச் சந்திக்க விட்டால் எப்படி இருக்கும்...? யானை தலையை ஆட்டிக் கொண்டே வருகின்றது.

முன்னெ வைத்த காலைப் பின்னே வைக்காதே… என்று குருநாதர் எம்மிடம் (ஞானகுரு) சப்தம் இடுகின்றார்.

அப்பொழுதே எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.  ஏதோ சம்பவம் நடக்கிறது...! புலி வருகிறதோ வேறு என்ன வருகிறதோ தெரியவில்லையே...! என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.

புலி வரவில்லை. யானை தான் வருகிறது. இந்த யானைகள் மனித வாசனையைக் கண்டது என்றால் ஓரத்தில் போய் ஒதுங்கி அசையாமல் நிற்கும்.

இந்த யானை அப்படித்தான் அசையாமல் தான் நின்று இருந்திருக்கும் போல் இருக்கின்றது. நான் போனேன் அல்லவா…! அவ்வளவு தூரத்திற்குப் போய் பக்கத்திலே யானையைப் பார்த்தவுடனே வேஷ்டியெல்லாம் முதலில் கழிந்து விட்டேன்.

ஏனென்றால் குருநாதர் சொன்னபடி அவர் சக்தியை யாம் செய்ய முடியவில்லை. அரட்டி ஜாஸ்தியாகிப் போய்விட்டது. அப்புறம் எதையும் செய்ய முடியவில்லை. பயம் வந்து விட்டது. எனக்கு உடல் எல்லாம் அப்படியே உதறுகின்றது.
1.பயம் வந்தது என்றால் எல்லாமே மறந்து போகின்றதல்லவா…!
2.என்ன சக்தி இருந்து தான் என்ன செய்வது…?
3.முதலில் உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தானே சொல்கிறது.

ஆனால் அதே சமயத்தில் மந்திர சக்தியைப் பயன்படுத்தினால் நீ எங்கே போவாய் என்று அதையும் சொல்லி இருக்கின்றார். அதனால் அதைச் செய்ய முடியாது. கொஞ்ச நேரம் அப்படியே நின்று கொண்டு இருந்தேன்.

கடைசியில்...
1.என்னமோ ஆகட்டும்...!
2.நீங்கள் (குரு_!”) சொன்னீர்கள். நான் கேட்டேன்.
3.என்னுடைய சரீரத்தை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்.
4.எப்படியோ போகட்டும்...! கடைசி முடிவு குருவிடம் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரிடம்) இப்படி விட்டு விட்டேன்.

ஏனென்றால் வேற வழி இல்லை. இந்த எண்ணத்தில் நன்றாகக் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டேன். போகிற யானைகள் எல்லாம் என் மீது உடலுடன் வந்து இப்படி உரசிக் கொண்டு போகிறது.

நான் மரக்கட்டை மாதிர் நின்று கொண்டேன். அதற்கு எப்படித் தெரிந்ததோ... மரம் என்று தெரிந்ததோ...! கல் என்று தெரிந்ததோ…! எனக்குத் தெரியாது.

நான் தான் பாரத்தை அவர் மேல் போட்டு விட்டுக் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டேன் அல்லவா...! கண்ணைத் திறந்தாலும் வம்பு. ஏதாவது பார்த்து விட்டால் என்ன ஆகும் என்ற அந்தப் பயம் தாங்க முடியவில்லை.

உடலில் யானைகள் உராய்ந்து கொண்டு செல்வதை உணர முடிந்தது. இந்தப் பக்கமும் உரசிக் கொண்டு செல்கிறது. பின்னாடியும் உரசிக் கொண்டு செல்கிறது. இரண்டு பக்கமும் யானைகள் கூட்டம் போகிறது. மொத்தம் பதிமூன்று யானைகள். அதிலே குட்டி யானை வேறு.

அது என்னை முட்டித் தள்ளுகின்றது. வந்து உராய்கிறது. என்னென்னவோ வேலைகள் எல்லாம் செய்கிறது. அப்புறம் எப்படி இருக்கும்…? நான் கண்ணைத் திறக்கவேயில்லை.

என்னமோ ஆகட்டும் விடு... “குருநாதனே சரணம்...!” என்று சொல்லி விட்டேன். காட்டுக்குள் போகச் சொன்னீர்கள்.. வந்துவிட்டேன்...
1.நீ என்னமோ பண்ணு...!
2.சரீரத்தை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன்...! என்று சொல்லி
3.அவர் மேல் நினைவைச் செலுத்தி விட்டு விட்டுவிட்டேன்.

அப்புறம் எல்லாம் போய்விட்டது. போன பிற்பாடு தான் ஏனென்றால் அவர் ஏற்கனவே ஒரு இடத்தைச் சொல்லி அங்கே ஒரு அடையாளம் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு வா என்று சொல்லியிருந்தார்.

அவர் சொன்ன இடத்திற்குப் போவதற்கு முன்னாடி கிஸ்ஸூ… புஸ்ஸூ... என்று பயம் வருகிறது. “சருக்…!” என்று சப்தம் கேட்டாலே  போதும்... அதிர்ச்சி ஆகின்றது. “சடா...சடா...! என்றால் யானை வந்து விட்டது போல என்று இப்படித் தான் எனக்கு நினைப்பு வருகிறது.

ஏனென்றால் இவர் சொன்ன அடையாளத்தை மேலே கீழே தான் பார்த்துக் கொண்டு போக வேண்டும். அப்புறம் எப்படியோ போய் அவர் சொன்ன அடையாளத்தைப் பிடித்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.