8/26/2018

கடலில் தோன்றும் அலைகள் போன்றது தான் அன்றாட வாழ்க்கையில் வரும் உணர்வின் மோதல்களும் – அந்த அலைகளை எல்லாம் விலக்கிக் கரையேற வேண்டுமா இல்லையா…?


வாழ்க்கை என்பது ஓர் கடல் அலை போன்றது. இன்று கடல்களில் அலைகள் வருகின்றது. மோதுகின்றது… மறைகின்றது…! இதைப்போல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் பிறர்படும் துயரங்களே அது அலைகளாக மாறுகின்றது.

அதை எல்லாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது அந்த அலைகள் எல்லாம் உங்கள் சுவாசத்தால் ஈர்க்கப்பட்டுப் புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரிலே மோதுகின்றது. அவ்வாறு மோதும் உணர்வுகளை நீங்கள் உணர முடிகின்றது.

உணர்ந்த உணர்வுகளையோ உங்கள் உயிர் அது அணுவாக மாற்றி விடுகின்றது. அவர்கள் படும் துயர உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் அந்தத் துயரத்தை உருவாக்கும் அணுக்களாக மாற்றி விடுகின்றது.
1.நாம் தவறு செய்யவில்லை என்றாலும்
2.நாம் வேதனைப்படவில்லை என்றாலும்
3.வேதனைப்படுவோரை நுகரப்படும் போது அந்த உணர்வுகளை
4.நம் உடலிலே நம் உயிர் உணர்த்துகின்றது.

ஏனென்றால் துன்பப்படுவோரைப் பார்க்கப்படும் பொழுது நம் கண் கவர்கின்றது. அந்த உணர்வை நுகரச் செய்கின்றது. நுகர்ந்த பின் நாம் அறிகின்றோம். இதைத்தான்
1.நம் கரு விழிக்குப் பேர் ருக்மணி என்றும்
2.கண்ணின் காந்தப் புலனுக்குப் பேர் சத்தியபாமா என்றும்
3.நம்மை மேய்ப்பது “இடையன்…” என்றும் கண்ணுக்குப் பெயர் இடையன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
4.ஏனென்றால் நம்மை வழி நடத்திச் செல்வது நமது கண்களே.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த அவருக்கு நாம் உதவி செய்தாலும் நுகர்ந்த உணர்வுகளை வேதனைப்படும் அணுவாக உடலுக்குள் நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

இருப்பினும் அவருக்கு உதவி செய்கின்றோம். நாம் உதவி செய்த உணர்வுகளோ நமக்குள் அத்தகைய நிலையாக மாறிவிடுகின்றது.

வேலை செய்கின்றோம். கையிலே அழுக்குப் பட்டால் கழுவி விடுகின்றோம். இதைப்போல நாம் இந்த வேதனைப்படுவோரை உற்று நோக்கினால் அதை உடனே துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…?

அவர்கள் வேதனைக்குண்டான காரணங்கள் எத்தனையோ இருக்கும். அவர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு ஒருவர் சண்டயிட்டு இருப்பர். அதனால் வெறுப்படைந்திருப்பார்கள். அதன் வழி கொண்டு வெறுப்பான அலைகள் அவர்கள் கண்களிலிருந்து வெளிப்படும்.
1.அந்த அலைகள் நமக்குள் மோதியபின்
2.நாம் என்ன…? என்று கேட்டால்
3.என் குடும்பத்தில் எத்தனையோ தொல்லைகள் சங்கடங்கள் சலிப்புகள் என்று கூறுவர்.

அந்த உணர்வுகள் அலைகளாக மோதியபின் நம் உடலிலே சுழல்கின்றது. அதாவது நாம் எண்ணிய உணர்வுகள் உயிரிலே மோதும் போது ஒலி அலைகளாகப் பரவி உடல் முழுவதும் சுழற்றுகின்றது. அந்த உணர்வின் இயக்கமாகவே நம்மை மாற்றி விடுகின்றது.

கணவன் தொழில் செய்யும் போது தொழில் செய்யும் இடங்களிலும் இத்தகைய சந்தர்ப்பம் வரும். அதே சமயம் மனைவி வீட்டில் இருக்கும் போதும் சந்தர்ப்பத்தில் இத்தகைய நிலைகள் ஏற்படும்.

வீட்டில் இருந்தாலும் பக்கத்து வீட்டிலோ அக்கம்பக்கம் வீடுகள் குடி இருப்பவரோ அவர்களில் சிறிது பிழையானாலும் பிழையின் உணர்வுகளைக் கேட்கப்படும் பொழுது பயந்து போய் வெறுப்புடனும்  வேதனையுடனும் அவர்கள் பேசலாம். அதனால் அதிர்ச்சி அடைய நேர்கின்றது.

நம் கரு விழி அதை உற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி அவர் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை நுகரச் செய்கின்றது. உணர்கின்றோம். அதனின் உணர்வுகள் நமக்குள் பகைமையாகயும் மாற்றி விடுகின்றது.

இப்படி நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தும் காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகளை வாழ்க்கையில் சதா சிவமாக்கிக் கொண்டே உள்ளது என்பதைச் சிவன் ஆலயத்தில் ஞானிகள் காட்டுகின்றார்கள்.

எந்தக் குணத்தை அன்றைய நிலைகளில் நம் வாழ்க்கையில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதற்குத்தக்கவாறு அன்று வாழ்க்கை அமைகின்றது.
1.குடும்பத்திற்குள் பற்றையும் பாசத்தையும் கூடப் பிரிக்கும் நிலைகள் வந்து விடுகின்றது.
2.தன்னை அறியாமலேயே ஏன் சண்டை இடுகிறோம்…? என்று தெரியாதபடி
3.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த உணர்வுகள் நம்மை இயக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் நாம் மீள வேண்டுமா இல்லையா…? மீள வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை எடுத்துப் பழக வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து பேரருள் பெற்று பேரொளியாக இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டு உள்ளார்கள்.

அவர்கள் இந்த மனித வாழ்க்கையில் பல துன்பங்களை அகற்றியவர்கள். அதை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள். அவர்களை நாம் எண்ணி அந்தத் துருவ மகரிஷியின் அருள் சகதியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

தீமைகளைக் காணும் பொழுதும் அல்லது தொழிலின் நிமித்தம் வேறொரு குறைபாடுகள் வந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் நினைவினைப் புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் ஒன்றி
2.அந்த உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும்.

அந்த நினைவினை நாம் ஏற்றுக் கொண்ட பின் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை உடல் முழுவதுக்கும் சுழலச் செய்து
1.நம் உடலை…
2.நம் ஆன்மாவை…
3.நம் உயிரான்மாவைச் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்….!