ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 14, 2018

ஈரெட்டு பதினாறு... என்றும் பதினாறு...!

உயிர் தான் சர்வத்தையும் ஆட்சி புரிகின்றான். அவனின்றி அணுவும் அசையாது. இந்த உயிர் இல்லை என்கிற பொழுது ஒன்றும் இயங்காது.

அவனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு ஒளியான நிலைகள் வரும்போது அவனுக்குள் இருள் சூழாத நிலைகள் துடைக்கும் உணர்வு வருவதே “ஆறாவது அறிவின் ஆற்றல் சரஹணபவா”.

நாம் உணவாக உட்கொள்வதை நம் ஆறாவது அறிவு எப்படி நல்லதை உடலாகவும் கெட்டதை மலமாகவும் மாற்றுகின்றதோ அந்த உணர்வின் நினைவு கொண்டு விஷத்தை மாற்றும் நிலையாக வரும் பொழுது ஆறாவது நிலையை ஏழாக மாற்றச் செய்கின்றோம்.

இது தான் “சப்தரிஷி” என்பது.

ஒலி ஒளி - ஒலியின் தன்மை கொண்டு ஒன்றை இயக்குவது.  சிருஷ்டிக்கும் தன்மை பெறுவது. ரிஷி என்ற நிலை எட்டாவது. எட்டுக் கோளின் உணர்வை ஒளியாக மாற்றுவது.

கோள்கள் தனக்குள் வெப்பத்தின் தன்மை எடுக்கும் பொழுது நட்சத்திரமாக மாறுகின்றது.

நட்சத்திரத்தின் தன்மை கதிரியக்கமாக மாறி தனக்குள் வரக்கூடிய விஷத்தின் தன்மையை விண்ணிலிருந்து வரும் தன்மையை வெகு தூரத்திலேயே மாய்த்து விடுகின்றது.

உணர்வின் தன்மை தனக்குள் வெப்பத்தின் தன்மை அதிகமாகக் கூட்டி காந்த அலைகளாகத் தனக்குள் ஈர்க்கும் நிலையாகும்போது சூரியனாக மாறுகின்றது.

இதைப் போலத்தான் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் தசைகளாகக் கோள்களாக மாறினாலும் எட்டுக் கோளின் நிலைகள் நட்சத்திரம் என்ற நிலைகள் அடைகின்றது.

இந்த உணர்வின் தன்மை ஒன்பதாக ஒளி நிலை பெறுகின்றது. நாம் வெளியில் வந்தவுடன் பத்தாவது நிலை விஜய தசமி.

1.விண்ணிலே உயிர் தோன்றி அது பூமிக்குள் விஜயம் செய்து மனித உடல் வரை வளர்ந்து
2.ஆறாவது அறிவு பெற்று ஏழாவதாக மாறி
3.எட்டின் நிலைகளாக விளைந்து
4.உயிருடன் ஒன்றிய நிலைகள் ஒன்பது ஒளியாக மாறி
5.உடலை விட்டுச் சென்றவுடன் நம் உடல் எப்படி விஷத்தைக் கழிவாக மாற்றுகின்றதோ நல்ல உடலாக நாம் எப்படிச் சிருஷ்டிக்கின்றோமோ உயிராத்மா வெளியில் வந்தவுடன் பத்தாவது நிலை கல்கி.

அதே சமயத்தில் இந்த வாழ்க்கையில் யாராவது உதவி செய்திருந்தார்கள் என்றால் இறக்கும்போது…, “நமக்கு ரொம்பவும் உதவி செய்தார்… மகராசன்” என்ற எண்ணத்தில் சென்றால் உயிராத்மா அந்த உடலுக்குள் சென்றுவிடும்.

இந்த உடலுக்குள் புகுந்தவுடன் என்ன செய்யும்? துன்பத்தையெல்லாம் தனக்குள் சேர்த்துக் கொள்ளும். மனிதனல்லாத உடலாக உருவாக்கிவிடும் உயிர்.

ஆகவே எக்காரணம் கொண்டும்
1.இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.நம் உயிராத்மாவை
3.உடலுடன் இருப்பவர்கள் யாரும் இழுத்துவிடக் கூடாது.

அருள் ஒளியின் தன்மைகளை உடலுக்குள் வளர்த்து வைத்திருந்தால் ஒளியின் சுடராகி இன்னொரு உடலுக்குள் போய்ச் சேராது.

இந்த உடலுக்குள் (எட்டுக் கோள் தசைகள்) எட்டானது போல் நாம் வெளியில் சென்ற பின் இந்த உணர்வின் தன்மை என்ன செய்கின்றது?

1. அதாவது எட்டுத் திக்கிலிருந்தும் தனக்குள் எது வந்தாலும்
2.தன்னை அணுகாத நிலைகள் கொண்டு எட்டாவது
3.அது தான் பதினெட்டு நாள் போர் என்று மகாபாரதத்தில் நிரணயித்திருப்பார்கள்.

வெளியில் வரும் போது பத்தாவது நிலை. எட்டுத் திக்கிலிருந்து வந்தாலும் ஒளியாக ஆக்கும் நிலை “பதினெட்டு”. பதினெட்டாம் படி என்றும் சொல்வார்கள்.

 உடலுக்குள் எட்டாகி வெளியில் வந்து எட்டுக் கோளின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாற்றி
1.அந்த நிலையான நிலைகள் பெறும் நிலை “ஈரெட்டு பதினாறு”
2.என்றும் பதினாறு என்ற பெருவீடு பெருநிலை.

இதைத் தான் என்றும் பதினாறு என்ற இந்தக் குழந்தை வேண்டுமா அல்லது மீண்டும் உடல் பெறும் நிலை வேண்டுமா என்று கதைகளுக்குள் சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

கதைகளில் உள்ள மூலத்தைத் தெரிந்து கொண்டோமா என்றால் இல்லை.

மெய் ஒளியின் தன்மைகளைப் பெறக்கூடிய தகுதியை இந்த உடலிலிருந்து தான் பெற முடியும்.

அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் சென்று விண்ணிலே அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.