ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 19, 2018

நம் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… வியாபாரம் சரியாக இல்லை மனதிலே மகிழ்ச்சி இல்லை…! இது எல்லாம் எதனால் வருகிறது…?


உதாரணமாக உங்கள் வீட்டிலே ஒருவர் தப்பு செய்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கோபித்துப் பேசி விடுகிறீர்கள். நீங்கள் பேசவில்லை என்றாலும் பேச வைக்கும். ஏனென்றால் அந்த உணர்வு அப்படி வேலை செய்யும்.

அடுத்த நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள். அந்தத் தீமையான உணர்வுகளை உடலுக்குள் உருவாகதபடி அகற்றுங்கள்.

தப்பு செய்த உங்கள் பையனைப் பார்த்து
1.உனக்கு இனிமேல் நன்றாக படிப்பு வரும்.
2.உன் கேட்ட பழக்கமெல்லாம் ஓடிப் போகும்..
3.கொஞ்சம் சிந்தனை செய்,
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எனக்குக் கிடைக்க வேண்டும் என்று கொஞ்சம் தியானம் செய்.
5.எல்லாம் நல்லதாகிப் போகும் என்று ஒரு தடவைக்கு இரண்டு தரம் இந்த நல்ல வாக்கைக் கொடுங்கள்.

இந்த உணர்வை எடுத்தவுடன் நீங்கள் எவ்வளவு ஆத்திரப் பட்டீர்களோ ஆத்ம சுத்தி செய்து பையனிடம் நீங்கள் சொன்னவுடனே மனம் குளிர்ந்து அவனுக்குள் ஈர்க்கும்.
1.இது போய் அவனுக்குள் பதிந்து
2.கெட்ட புத்தியில் உள்ளவனையும் நல்ல சக்தி எடுக்காதவனையும்
3.நாம் சொல்லும் நல்ல வாக்கினை எடுக்க வைக்கும்.
4.இப்படித்தான் நல்லதைக் காப்பாற்ற முடியும்.

அதற்குப் பதிலாக நாம் கோபித்தோமென்றால் முதலில் என்ன செய்யும்…?  “ஓ…ம் நமச்சிவாய… சிவாயநம ஒ…ம் என்று சரியாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

ஏனென்றால் அந்தக் கோபம் நமக்கு ஏன் வருகின்றது…?

சண்டை போடுபவர்களைப் பார்த்தீர்கள் என்றால் அந்த உணர்வுகளை நீங்கள் இழுக்கிறீர்கள். “சண்டை போடுகிறான்…!” என்று கண்கள் அதைக் கவர்ந்து  இழுக்கிறது.

அப்போது சுவாசித்து உயிரில் பட்டவுடனே, “ஓ…ம்” என்று பிரணவம் ஜீவனாகிறது, உயிரிலே மோதியவுடனே இயக்க ஆரம்பிக்கின்றது. அது பிரணவமாகி ஜீவன் பெற்றுவிடுகின்றது. அதாவது சண்டை போட்டுக் கோபித்தவனுடைய உணர்வை நம் உயிர் நமக்குள் சிருஷ்டிக்கிறது - பிரம்மம்.

அப்போது நாம் எடுத்துக் கொண்ட குணமான சக்தி அந்தச் சுவாசம் உள்ளுக்குள் போகிறது. “ஜர்ர்...ர்ர்…” என்று அது எந்தெந்தக் குணமோ அந்த உணர்வுகளிலெல்லாம் பார்த்தால் ஒன்றுக்கு இரண்டாக ஆகி இருக்கும்.

நமக்கு ஆகாததாக அது இருந்து அந்த வேகமான நிலைக்கு நம் எண்ணங்கள் ஒத்துக் கொள்ளாதபடி அது அதிகமாக இருந்தால் உடலெல்லாம் நடுக்கம் வரும். படபடப்பு வரும். இந்த வேலையைச் செய்யும்.

இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறினால் உடலுக்குள் சென்று “ஓ…ம்  நமசிவாய…!” அதாவது நாம் பார்த்தது உமிழ் நீராக மாறி அணுவாக உடலுக்குள் உருவாகின்றது சிவசக்தியாக மாறுகிறது. சக்தி சிவமாக மாறுகிறது.

அடுத்து சிவாயநம ஓ…ம். அதாவது எதைப் பார்த்தோமோ அந்தக் கோபம் நம் உடலிலே விளைந்து அதே கோபமான சொல்லாக நம்மிடமிருந்து வெளியே வரும்.

வாழ்க்கையில் நாம் எண்ணுவதெல்லாம் சதா சிவமாக நம் உடலாக மாறிக் கொண்டேயிருக்கின்றது என்று ஞானிகள் சுருக்கமாகச் சொல்லி இருக்கிறார்கள்.  

இப்போது நான் உங்களிடம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். இப்போது இது சதா சிவமாகிக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியான உமிழ் நீர் எனக்குள் சேர்கின்றது.

ரோட்டில் போகும் போது ஒரு குழந்தை தவறி விழுகிறது. அச்சச்சோ…! இந்த மாதிரி ஆகிவிட்டதே…! என்று இந்த உணர்வை எடுத்தால் அதுவும் சதாசிவமாகின்றது.

பொங்கல் செய்கிறோம் என்றால் அரிசி பருப்பு மற்ற எல்லாவற்றையும் அதில் எதை எதைப் போட வேண்டுமோ சம அளவு போழும் பொழுது சுவையாக வருகின்றது. ஆனால் அதிலே காரம் அதிகமாகி விட்டால் என்ன சொல்வோம்…?

அதைப் போன்று தான் நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இரண்டு பேர் சண்டை போடுவதைப் பார்த்தவுடன் காரம் அதிகமாக வந்து விடுகிறது.
1.என்ன காலமோ போ…!
2.சதா இப்படிச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்,
3.அந்தக் காரம் நமக்குள் வந்து விடுகின்றது. இதுவும் உடலுக்குள் சிவமாகின்றது.
4.அப்புறம் இந்தச் சக்தி உள்ளே இருந்து வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது.

நம் கடையில் போய் உட்கார்ந்து சரக்கை எடுத்து வாடிக்கையாளரிடம் கொடுக்கும் பொழுது இந்தக் காரமான சொல் அங்கே ஊடே கலந்து போகும்.

சரக்கு வாங்க வந்தவர்கள் காதிலே இது பட்ட உடனே நீங்கள் எப்படி இரு நிலை அடைந்துள்ளீர்களோ அது போல இந்த உணர்வு பட்டவுடன் அவர்களும் சரக்கைப் பார்த்தவுடனே திருப்பித் திருப்பிப் பார்பார்கள்.

ஒரு கம்ப்யூட்டர் என்ன செய்கிறது…? அதற்குள் அலைகள் தான் பாய்கிறது. எலெக்ட்ரானிக்காக மாறும் போது அதற்குள் எதிர் நிலை ஆகி உடனே மாற்றும். அது போன்று தான் நமக்குள்ளும் அந்த நுண்ணிய அலைகள் உள்ளது. அதனின் இயக்கமும் உண்டு,

ஆகவே சண்டையப் பார்த்துவிட்டு வரும் பொழுது அந்தச் சங்கட அலைகள் நமக்கு முன்னாடி ஆன்மாவில் உள்ளது. வாடிக்கையாளரிடம் பேசும் பொழுது அவர்கள் செவிகளில் இது படுகிறது.
1.நாம் எப்படி வெறுப்பில் இருக்கிறோமோ அதே உணர்வுகள் இயக்கி
2.நம் சரக்கை வெறுக்க வைத்துவிடுகிறது. வாங்காமல் சென்று விடுவார்கள்.

காலங்காத்தாலே சரக்கை வாங்குவதற்கு எவனோ வந்துவிட்டான் பார்…!. “அறுவை கேசு…! என்று அவனோடு சண்டைக்குப் போவோம். நம்மை அறியாமலேயே இப்படிப் பேசுவோம்.

முதலில் அங்கே சண்டையை வேடிக்கை பார்த்தோம். அதே உணர்வுகள் நம்மை இயக்கி இங்கே சண்டை போட வைக்கும். சண்டை போட்ட உணர்வை நாம் பார்த்து நுகர்ந்தவுடனேயே அப்பொழுதே தூய்மையாக்கியிருந்தால் அந்த உணர்வுகள் நம்மை இயக்காது.

நம்மையறியாமல் இப்படி இயக்கும் நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத்தான் விநாயகரைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிப்பதை நம் உயிர் இயக்கி நம் உடலாகச் சிவமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்த உடலாக உயிரின் பிள்ளையாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தப் பிள்ளையை எப்படிப்பட்ட பிள்ளையாக வளர்க்க வேண்டும் என்று பிள்ளையார்…! என்றும் காட்டியுள்ளார்கள். பிள்ளையார் என்றால் நாம் வெளியில் தான் பார்க்கின்றோமே தவிர அன்று அகஸ்தியர் சொன்ன அக நிலைக்குச் சிந்திக்கவில்லை. (அகஸ்தியர் – அகத்தின் திறன்… அகத்தை அறிந்தவன் அகஸ்தியன்)

1.நீ எந்த வினையைச் சேர்க்க வேண்டும்…?
2.எந்த வினையை நீ சேர்த்துக் கொண்டிருக்கின்றாய்…!
3.நீ சிந்தித்துப் பார்…! என்று கேள்விக் குறி போட்டு
4.யானைத் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டி
5.மனித சமுதாயம் அருள் வழியில் செல்ல வேண்டிய பாதையைக் காட்டியுள்ளார்கள்.

அன்று அகஸ்தியமாமகரிஷி உணர்த்திய பேருண்மைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படித்தான் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

அந்த ஞானிகள் காட்டும் வழியில் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் அடிக்கடி சேர்த்துக் கொண்டே வந்தால் நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து முழுவதும் விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!