ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2018

புது மணத் தம்பதிகள் குடும்பத்திற்குள் தெரிந்து கொள்ள வேண்டியது…!


நீங்கள் புது மணத் தம்பதியாக இருந்தாலும் வாழ்க்கையில் நமக்குத் தெரியாமலே எத்தனையோ வகையில் சிக்கல்கள் வரும்.

சாதாரணமாக நம் வீட்டில் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எதிர் வீட்டில் சண்டை போடுகின்றார்கள். சண்டை போடுவது ஏன்..? என்கிற வகையில் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம். அதை நாம் உற்றுப் பார்த்துக் கேட்கின்றோம்.

கேட்டவுடனே அந்த உணர்ச்சிகள் என்ன செய்கின்றது…? நம் உடலில் இயங்க ஆரம்பித்துவிடும். அடுத்தாற்போல என்ன செய்கிறது…? மாமியார் அங்கே மருமகளைக் கண்ணு… இங்கே வாம்மா…! என்று கூப்பிடுவார்கள்.

“இந்த வர்ர்ரேங்க…!” என்று அப்பொழுது அந்தச் சொல்லில் வித்தியாசம் வரும். சண்டை போட்ட உணர்வுகளை அப்பொழுது பதிவாக்கியதால் மருமகளுடைய சொல்லில் இந்தக் கார உணர்வுகள் கலந்து வருகிறது.

அந்தக் கார உணர்வு வரப்போகும் போது என்னடா… இது…? நான் கூப்பிட்டு வருவதற்கு முன்னால் மருமகள் எரிந்து விழுகிறதே…! என்று அந்த இடத்தில் பக்குவம் தவறிப் போகும்.

ஏனென்றால் சண்டையைக் கேட்டறிந்த உணர்வு இப்படி இயக்க ஆரம்பித்து விடும். யாரும் தவறு செய்யவில்லை. மாமியார் கூப்பிடுகின்றார் என்று சொல்லிச் சொன்னவுடனே அவர்கள் மேலே அந்த உணர்வு தன் சிந்தனையைக் குறைத்து இந்தக் கார உணர்வுகள் வருகின்றது.
1.சண்டையிட்டவர்களை அந்தக் கார உணர்வு ஆளுகின்றது.
2.அதைக் கேட்டவுடனே இங்கே நம்மையும் ஆளச் செய்கின்றது.

மாமியார் கூப்பிட்டவுடனே “வருகிறேன் அத்தை…!” என்று சொல்வதற்குப் பதில் “இந்தா வர்ர்ர்ரேன்…!” என்று சொல்லும் போது என்ன… இப்படி எரிந்து விழுகிறதே…! என்று உணர்ச்சிகள் மாறுகின்றது.

தவறு செய்வது யார்…? சந்தர்ப்பம். அந்த வெறுப்பை ஏற்படுத்துவது யார்…? இந்தச் சந்தர்ப்பம் தான். அங்கே போய்க் குழம்பு வைத்தால் என்ன செய்யும்…? இந்தக் கார உணர்ச்சிக்குத் தக்க (மருமகள்) இரண்டு மிளகாயை அதிகமாகப் போட்டுவிடும்.

மிளகாயை அதிகமாகப் போட்டவுடனே சாப்பிடுகிறவர்களுக்கு என்ன செய்யும்…! உஷ்… என்பார்கள். ஏனென்றால் நுகர்ந்த உணர்விற்கொப்ப அந்த உணர்ச்சிக்குத்தக்கதான் அந்தக் காரத்தை அதிகமாகப் போட வைக்கும். ஆனால் தவறு செய்தோமா…?

இப்படி இந்தச் சந்தர்ப்பம் வரிசையில் போகும் பொழுது
1.முதலில் சொல்லில் நயம் கெடுகின்றது.
2.குழம்பு வைக்கின்ற செயலிலேயும் சுவை கெடுகின்றது.
3.இதை யார் செய்வது…? நாம் எண்ணிய உணர்வு அது செய்கின்றது.

நெருப்பில் நல்ல மணமுள்ள பொருளைப் போட்டால் அதிலிருந்து நல்ல வாசனை வெளி வருகிறது. நெருப்பிலே காரமான பொருள் போடட்டால் நெடி வருகிறது. ஒரு கசப்பைப் போட்டால் வாந்தி வருகிறது. அந்த நெருப்பைப் போலத் தான் நமது உயிர்.

உதாரணமாகத் தோசை சுடுகிறோம். தோசைச் சுட்டு கொண்டு இருக்கும் போது ஒரு பக்கம் அதிகமாக எரிகிறது என்றால் தோசை ஊற்றியவுடனே ஒரு பக்கம் வேகாமல் இருக்கும்.. இன்னொரு பக்கம் வெந்து அது கருகிப் போகிறது.

கருகிப் போய்விட்டது என்றால் அதைப் பக்குவப்படுத்தி அந்த நெருப்பைத் தணித்து அதைச் சீராக்க வேண்டும். தணிப்பதற்குப் பதில் சூட்டை அதிகமாக்கினால் என்ன ஆகும்…? அந்தக் கருகிய பக்கம் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது தோசை பிய்த்துக் கொண்டு வரும்.

எந்த நேரத்தில் இந்த மாதிரி வருகிறது…? கவலையோ சஞ்சலமோ இருக்கும் போது பாருங்கள். சஞ்சலமாக இருக்கும் போது நீங்கள் தோசையை ஊற்றினீர்கள் என்றால் இந்த நிலை ஏற்படும். அப்போது சமப்படுத்தும் நிலை வராது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? ஈஸ்வரா…! என்று சொல்லி புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கொஞ்ச நேரம் ஆத்ம சுத்தி செய்து மனதை அமைதிப்படுத்த வேண்டும்.

அமைதிப்படுத்திய நிலைகள் கொண்டு லேசாகத் தண்ணீர் ஊற்றிய பின் அந்தத் தோசையைச் சுட்டோம் என்றால் நன்றாக வரும். அது தான் பரிபக்குவம். ஆனால்
1.நான் எல்லாம் நல்லது செய்தேன்…
2.எனக்கு இப்படி வருகிறதே…! என்று எண்ணினோம் என்றால் இந்தப் பக்குவம் கெட்டுப் போகும்.
3.ஏனென்றால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் எவ்வளவு நிலைகள் ஒரு நொடிக்குள் மாறுகின்றது.

பொருள்கள் நன்றாக இருக்கிறது. ஆனால் அதிலே தூசிகள் விழுந்து விட்டால் ருசியாக இருக்கின்றதா…? சாப்பிட முடியுமா…?

அதே மாதிரித் தான் நாம் சுவாசிக்கும் அந்த ஆன்மாவிலே தீமையான உணர்வுகள் வந்து சேரும்போது நம்மை அறியாமலே அவைகள் இயக்கி விடுகின்றது. இதெல்லாம் வாழ்க்கையிலே நடக்கும் நிலைகள்.

இந்த மாதிரி வரும் போது பக்குவமான நிலைகளில் நாம் நடந்து பழக வேண்டும். எப்பொழுதுமே வீட்டில் அந்தச் சந்தோஷத்தை ஊட்டும் தன்மை தான் வர வேண்டும். எப்படி…?

ஒரு பையன் குறும்புத்தனம் செய்து கொண்டேயிருக்கிறான் என்றால் அவனிடம் நாம் எப்படிச் சொல்ல வேண்டும்…? மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு
1.நீ நல்லவனாக இருக்கின்றாய்…
2.நீ நல்லபடியாகச் செய்யப்பா…! என்று சிரித்துவிட்டுச் சொல்லிப் பாருங்கள்
3.அப்பொழுது அந்தச் சந்தோஷம் வரும்.

ஆனால் அதே சமயத்தில் இப்படியே செய்கிறானே…! நான் சொல்வதை எதுவுமே கேட்கவில்லையே…! என்று வருத்தப்பட்டால் என்ன நடக்கும்…? முகம் வாடுகின்றது.

அடுத்தாற்போல மாமியார் ஏனம்மா…? உன் முகம் இப்படி வாடி இருக்கின்றது…! என்று கேட்டால் ஒன்றும் இல்லைங்க…! என்று அந்த உணர்வு என்ன செய்யும்…? சரியாகச் சொல்ல விடாது.

ஆனால் சொல்வது யார்…? நாம் தான். நாம் நுகர்ந்த உணர்வு தான் அது அவ்வாறு இயக்குகின்றது. அப்பொழுது அதை மாற்ற வேண்டுமல்லவா…! ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் இப்படி அறியாமலே சில நிலைகள் செயல்படுகிறது.

அதை மாற்றும் நிலையாகத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டும்படிச் சொல்கிறோம்.