ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2018

நாதத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன்... நாதத்தைத் தன்னுள் அடக்கியவன்... சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன் “சப்தரிஷி...!”


சூரியனிலிருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. அதைப்போல் மனிதனுடைய அறிவு ஆறு ஏழாவது ஒளி அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை.

1.நாதத்தை உருவாக்கி...
2.நாதத்தை உள்ளடக்கி...
3.உணர்வின் தன்மைகள் அனைத்தையும் அடக்கி...
4.உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாகச் சென்றவன் “சப்தரிஷி...!”
5.எந்த உணர்வின் தன்மை இதிலே பட்டாலும் அதைத் தன் நாதத்தின் சுருதி கொண்டு அது இயக்கவல்ல சக்தி பெற்றது.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மையை ஏழாவது ஒளியாக மாற்றி அவ்வாறு விண் சென்றவர்களைத்தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்...!” என்று புராணங்களிலேயும் காவியங்களிலேயும் காட்டியுள்ளார்கள்.

நம் பூமியிலே தோன்றிய மனிதர்கள் உயிராத்மாவை ஒளியாக மாற்றி எண்ணிலடங்காத நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் ஒரு பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வரக்கூடிய ஒரு அணுவின் தன்மையை ரிஷியின் மகன் நாரதன்... நாராயணனின் அபிமானப் புத்திரன் என்று காட்டுகின்றார்கள்.

சூரியன் தன் ஒளிக்கதிர் கொண்டு வெப்பத்தால் அது மற்ற நிலைகள் உருவாக்குகின்றது. ஆனால் சப்தரிஷி மண்டலங்கள் தனக்குள் வெப்பம் இல்லாத நிலையில் அது குளிர்ச்சியான நிலைகள் கொண்டு இயங்குவது.

சப்தரிஷி மண்டலம் விண்ணிலே தோன்றும் உணர்வின் தன்மையைத் தனக்குள் வெப்பமற்ற நிலைகள் கொண்டு உணர்வால் அது சிருஷ்டிக்கப்பட்டு ஒளிப் பிளம்புகளாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

விண்ணின் ஆற்றலைத் தனக்குள் உணவாக எடுத்துப் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அந்த அணுவின் நிலைகளை நாரதன் என்று காட்டுகிறார்கள்.

1.நாரதன் வீணையின் சுருதி ஏழு.
2.அவன் வாசிக்கும் நிலைகள் கொண்டு
3.அந்த அணுவின் இயக்கமாக மற்றதுக்குள் இயக்கப்பட்டு
4.அதனின் செயலாக நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள்.

சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு வெளிவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்களை நாம் சுவாசிக்கும் போது இந்த மனித வாழ்க்கையிலே நம்மை அறியாமல் இயக்கும் பிறிதொரு கோபமோ வெறுப்போ வேதனையோ இதைப் போன்ற உணர்வுகள் அதனுடைய வழிக்கு நம்மை இட்டுச் செல்லாதபடி மெய் ஒளியின் தன்மையை நாம் பெறுகின்றோம்.

ஒளியின் தன்மை பெற்று அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைவது தான் நமது எல்லை.