ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2018

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் “அகஸ்தியன் பெற்ற மின்னல்களின் பேராற்றல்கள்”


விஞ்ஞான அறிவு கொண்டு சில காந்தப்புலன் அறிவைக் கொண்டு இன்று இடி மின்னலைத் தாங்கும் நிலையாக இடி தாங்கி (LIGHTNING ARRESTOR) என்று வைத்திருக்கின்றார்கள்.

இதைப் போலத் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் தாய் தந்தையர்கள் பச்சிலைகளையும் வேர்களையும் முலாமாகப் பூசிக் கொண்டார்கள். அதாவது
1.சில பச்சிலைகள் மின்னல்களின் வீரியத்தைத் தடுத்து
2.அது தனக்குள் ஒரு நல்ல வீரிய உணர்வுகளைக் கொடுக்கும்.
3.இத்தகைய பச்சிலைகளைத்தான் அவர்கள் உடலில் பூசிக் கொண்டது.

அப்படிப் பூசிக் கொள்ளும் போது இடி மின்னல்கள் வந்தால் அதை முறித்து அந்த விஷத்தின் தன்மையைத் தணிக்கச் செய்து கொண்டார்கள். இவர்கள் உடல்களை அனந்த மின்னல்கள் எதுவும் பாதிப்பதில்லை.

மின்னலின் ஒளிக்கற்றைகள் தாக்கும் நிலைகள் கொண்டு ஊடுருவி வந்தாலும் தங்கள் உடலில் பூசிக் கொண்ட தாவர இன மூலிகைகளால் தப்பித்துக் கொள்கின்றனர்.

அதே சமயத்தில் கருவுற்ற தாய் இத்தகைய மூலிகைகளின் மணங்களைச் சுவாசிக்கப்படும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கும் அந்த ஆற்றல்கள் தாயின் இரத்தத்தின் வழியாக இணைகின்றது..

அந்தக் கருவில் வளரும் குழந்தை இப்படிப்பட்ட விஷத்தை முறிக்கும் மூலிகைகளின் சத்தினைப் பெற்றவன் தான் அந்த அகஸ்தியன். அவன் பிறந்து வளர்ந்து வரும் நிலையில் தாய் கருவிலேயே விஷத்தை முறித்திடும் ஆற்றல் பெற்றதால் எந்த விஷம் கொண்ட உணர்வும் இவனைத் தாக்குவதில்லை. ஏனென்றால்
1.அந்த (மின்னலின் ஒளிக்கற்றைகளைத் தணித்த) மின் கதிர்கள் இவனுக்குள் இருப்பதனால்
2.மற்ற உயிரினங்களும் இவனைப் பார்த்த பின் அமைதியாகி விடுகின்றது.

இவனிடம் எந்த மிருகங்களும் தாக்கும் உணர்வு கொண்டு வருவது இல்லை. பல விஷம் கொண்ட ஜெந்துக்களும் இவனைத் தாக்கும் நிலையற்றுப் போய்விடுகிறது. ஆகையினால் அவன் காட்டிற்குள் தாராளமாகச் செல்கின்றான்.

மின்னல் மோதியவுடனே… அதை உற்றுப் பார்க்கின்றான் அகஸ்தியன்.
1.அது எவ்வளவு தூரம் விரிவடைந்து அந்த ஒளிக் கற்றைகள் செல்கின்றதோ
2.அதைப் போல அகஸ்தியன் தன் பார்வையால் பார்க்கப்படும் போது
3.எதனையுமே ஊடுருவி அதன் உண்மையின் உணர்வை அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றான்.

இவனுக்குள் பதிந்த அந்த மின்னலின் உணர்வின் தன்மை கொண்டு மின்னல்கள் எதனால் உருவாகின்றது…? என்பதையும் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அறிகின்றான்.

இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் உணர்வுகளை நமது பூமி துருவத்தின் வழியாகக் கவர்ந்து
1.இந்தத் தாவர இனங்களும் உயிர் இனங்களும் எப்படி வளர்கின்றது…?
2.நமது பூமியின் இயக்கங்களை அது எப்படி மாற்றுகின்றது…?
3.இது எதனால்…? என்று அவனுடைய சிந்தனைகள் அறியும் ஆற்றலாக இயக்குகின்றது.

ஏனென்றால் அந்த விஷத்தின் நுண்ணிய அலைகளை அகஸ்தியன் அடக்கப்படும் போது உணர்வின் தன்மை மோதலாகும் பொழுது எதனையும் அறியும் பருவம் பெறுகின்றான்.

அப்படிப்பட்ட அறியும் ஆற்றல் வந்ததால் மனிதர்களுக்குத் தேவையான பல பல தாவர இனங்களைப் புதிதாக உருவாக்கும் தன்மையும் பெறுகின்றான்.

தாவர இனங்களை “வேக வைத்து விட்டால்…!” அதனின் இயற்கையின் நிலை மாறுகின்றது என்று அறிந்து மற்ற தாவர இனங்களில் விளைந்ததையும் இணைத்துச் சுவை மிக்கதாக உணவாக உட்கொள்ளும் முறையை முதன் முதலில் அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தான்.

ஏனென்றால் மிருகங்களைக் கொன்று அதனின் தசைகளை உட்கொண்டால் அதன் மணம் நமக்குள் பெருகி மனித உரு அல்லாதபடி மிருகமாக மாற்றி விடுகிறது என்பதை அறிந்ததால் தாவர இனங்களைச் சுவை மிக்கதாகச் சமைத்து அதை உட்கொள்ளும் நிலையை வளர்த்துக் கொண்டான் அகஸ்தியன்.

இப்படி வளர்த்த நிலை கொண்டு அவன் தன் வாழ்நாளில் அகண்ட அண்டத்தையும் இந்தப் பிரபஞ்சத்தையும் அளந்தறிந்து நமது பூமி அதிலிருந்து தனக்கு வேண்டியதை எப்படிக் கவர்கிறதென்ற உண்மையை அந்தத் துருவத்தின் நிலையை நுகர்ந்தறிகின்றான்.

இதையெல்லாம் எப்போது…? அந்தத் துருவத்தை உற்று நோக்கும் பொழுது தான் அவன் இந்த உண்மைகளை எல்லாம் அறிகின்றான். ஆகையினால் தான் அவனுக்குத் துருவன் என்று பெயர் வைக்கின்றனர். இளமைப் பருவத்தில் ஐந்து வயதிலேயே அந்தத் துருவத்தை அறியும் ஆற்றல் அவனுக்கு வருகின்றது.

அகஸ்தியன் கண்ட பேருண்மையின் உணர்வுகள் தான் இதெல்லாம்.

ஆனால் விநாயகர் அருளால் வாதாபியை வதம் செய்தார் அகஸ்தியர் என்றும் தன் ஐந்து வயதில் காட்டிலே தவமிருந்து மகா விஷ்ணுவிடம் சக்தி பெற்றவன் தான் துருவன் என்றும் பிற்காலத்தில் மதங்களுக்காகவும் இனங்களுக்காகவும் நூல் வடிவில் ஏராளமான தவறுகளைப் புகுத்தி அகஸ்தியனின் பேருண்மைகளை எல்லாவற்றையும் மாற்றி விட்டார்கள்.

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வலைகளை (மூச்சலைகளை) நம்மால் (நினைவு கொண்டு) கவர முடியாது. ஆனால் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் பெற்று விளைய வைத்துக் கொண்டார்.

1.அவரின் துணை கொண்டு அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால்
2.அன்று அகஸ்தியன் எதையெல்லாம் கண்டறிந்தானோ இந்த அகண்ட அண்டத்தின் அத்தனை உண்மைகளையும்
3.வான இயல்… புவி இயல்… உயிரியல்… அடிப்படையில் நாம் எல்லோருமே காண முடியும்.
4.காண வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் இதைச் சொல்கிறோம்…!