இன்று திருப்பூட்டும் போது பாருங்கள்….! நேரமாகிப் போய்விட்டது. அங்கே போக வேண்டும்
இங்கே போக வேண்டும் அதைச் செய்ய வேண்டும்.. சீக்கிரம் கூட்டிக் கொண்டு வாருங்கள்…!
என்ற இந்த எண்ணத்திலேயே தான் இருப்பார்கள்.
இதில் தாமதமாகும் பொழுது… இவர் என்ன…? இப்படி நீட்டி நெளித்து இழுத்துக் கொண்டே
போகிறார் என்பார்கள். பின் கடைசியில் மணியைப் பார்த்துவிட்டு
1.அய்யோ... இரண்டு நிமிடம் தான் இருக்கிறது என்று
2.அந்தப் பதட்டமான பயமான உணர்களைத் தான் கலந்து திருப்பூட்டுவார்கள்
3.மணமக்களை எப்படி ஆசீர்வதிக்க வேண்டும்...? என்ற நிலையே இன்று அற்றுப் போய்விட்டது.
அங்கே திருமணத்திற்கு வருகை புரிந்து வாழ்த்த வந்த தம்பதியர்கள் தன் வாழ்க்கையில்
பெற்ற அனுபவத்தின் நிலைகளை மணமக்களுக்குப் பாய்ச்சி
1.எதிர்காலத்தில் அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும்
2.நம்முடைய எண்ணமும் பார்வையும் அவர்களுக்கு ஊக்கமூட்டும் நிலை பெறச் செய்ய
வேண்டும்
3.அந்த அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தி மணமக்கள் பெற வேண்டும்
4.நாம் கொடுக்கும் ஆசிர்வாதத்தால் அவர்கள் வாழ்க்கையில் அந்த வசிஷ்டரும் அருந்ததியும்
போன்று ஒளிச் சுடராக என்றுமே வாழும் நிலை பெறவேண்டும் என்று
5.இப்படி வாழ்த்தும் நிலையைத்தான் அன்று காட்டினார்கள்.
வசிஷ்டரையும் அருந்ததியும் ஏன் காட்டினார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
வசிஷ்டர் பெரும் இராஜ சபையில் தீர்ப்பளித்து நியாயங்களையும் அதனுடைய உணர்வுகளையும்
வழிகாட்டி வந்தார். இராஜ சபையை வழி நடத்தினார் என்று சொல்வார்கள்.
இராஜ தர்பாரில் இருக்கும் சிக்கல்களை நீக்கி அந்த அரச வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான
மக்களுக்கு நல்வழி காட்டும் நிலை பெற்றவர். கடும் முனிவர்கள் வந்தாலும் அதையும் சமப்படுத்தும்
ஆற்றல் பெற்றவர்தான் வசிஷ்டர்.
முனி என்பது கொடூர நிலைகள் கொண்டு தான் எண்ணியதைச் சாதிக்கும் நிலைகள் கொண்டது.
தீமையோ நன்மையோ அறியாது.
முனி என்பது தன் எண்ணத்தின் வலிமை கொண்டு செயல்படுத்தும் நிலை. ஆனால் தான் எண்ணியது
தடைபட்டால் கோபமாகி அதை வீழ்த்திடும் நோக்கங்கள் வரும்.
இதைப் போன்ற நிலைகளை எல்லாம் வசிஷ்டர் பொறுமை கொண்டு தன் உணர்வின் ஆற்றலால்
அமைதிப்படுத்தி தன் சக்தியின் துணை கொண்டு மற்றவருக்கு வழிகாட்டும் நிலை பெற்றவர்.
ஆகவே தீமைகளை அகற்றும் நிலையும் தன் ஞானத்தால் அரச நீதிகளை நிலை நிறுத்தி ஒருக்கிணைக்கச்
செய்யும் அந்த உணர்வின் சக்திகள் அனைத்தும் வசிஷ்டர் உணர்வுடன் ஒன்றி உள்ளது.
அவருடைய மனைவி அருந்ததியும் இதைப் போல் ஒன்றிய நிலைகள் வரப்படும் போது இரு மனமும்
ஒன்றாகி வாழ்ந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையில் அரச நீதியாக வாழ்ந்தாலும் அவர்கள் துரித
நிலைகள் கொண்டு விண்ணுலகம் சென்றார்கள்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்குள் இது நடந்த நிகழ்ச்சி இது.
மனிதனாக இருந்து ஞானத்தால் வழி தொடர்ந்த பின் அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன்
இணைந்தவர்கள். அதைத்தான் வசிஷ்டர் அருந்ததி என்று சொல்வது.
அவர்கள் சக்தி பெற்ற நிலையில் கொண்டு விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று
கொண்டு இருக்கும் அவர்கள் உடலிலே விளைய வைத்த உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் புகும்
தீமைகளைப் பற்றற்றதாக்கிக் கணவன் மனைவி அவர்களைப் போன்றே ஒன்றி வாழ முடியும்.
விநாயகரை வணங்கி விட்டு இங்கே வசிஷ்டர் அருந்ததி போல என்று அம்மியும் கல்லையும்
வைத்துக் காண்பித்து அதன் பின் தான் திருப்பூட்டுவார்கள்.
1.இரு மனமும் ஒன்றாகி மகிழ்ந்து வாழ்ந்து நீதியின் நிலைகள் வழங்கி ஒருக்கிணைந்து
செயல்பட்ட
2.வசிஷ்டர் அருந்ததி என்ற அவர்கள் உணர்வுகளை
3.மனித வாழக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இணைத்து
4.புனிதம் பெறும் நிலையாக வளர வேண்டும்
5.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இணை பிரியாத நிலைகளாக என்றும் பதினாறாக
5.விண்ணிலே ஒளியின் சரீரமாக மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான்
அவ்வாறு காட்டினார்கள் ஞானிகள்.
ஆனால் அதை ஐதீகமாகத்தான் வைத்து விட்டார்களே தவிர அந்தப் பேருண்மையை அறியாத
நிலைகள் ஆகிக் காலத்தால் மறைந்து விட்டது.