ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2018

“தவறு செய்கின்றான்...” என்ற உணர்வை நுகர்ந்தால் அது நம்மை எங்கே அழைத்துச் செல்லும்...! – மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால் அதனின் இயக்கம் நமக்குள் எப்படி இருக்கும்...?


“தவறு செய்கிறான்…!” என்று ஒருவனைப் பார்க்கின்றீர்கள். “தவறு செய்பவன்” என்று அந்த உணர்வின் நினைவை நீங்கள் கூட்டிக் கொண்டு அதே உணர்வுடன் அவனைப் பார்க்கப்படும் போது
1.அவன் எப்போது தீமை செய்வான்…! என்ற எண்ணத்திலேயே தான்
2.நீங்கள் குறிக்கோளாக இருக்க முடியும்.

அவர்கள் செய்யும் நோக்கத்தின் நிலைகள் உங்களுக்குள் ஊடுருவி அவர்களை நீங்கள் கவனித்து வந்தால் நீங்கள் எடுத்துக் கொண்ட அந்த எண்ணத்தின் உணர்வுகள்
1.அவருடன் தொடர்பு கொண்டு பேசும் போது அதே உணர்வுகளை அங்கே தோன்றச் செய்து
2.அவனைக் குற்றவாளியாக நிற்க வைக்கும்… அவனைத் தவறு செய்ய வைக்கும்.

அந்த உணர்வின் எண்ணக் கலவையில் பேசி நாம் இதையே அடுத்தவருக்குச் சொல்லும் போதும் இந்தக் குறையான உணர்வுகளையே உணர்த்தச் செய்வோம்.

ஆக அவரவர்கள் எடுத்து கொண்ட அந்தந்த உணர்வின் தன்மை கொண்டுதான் அது அவரவர்களுடைய சொல்லாகப் பேச்சாக வெளி வருகின்றது.

எதையுமே மகிழச் செய்யும் உணர்வின் எண்ணங்கள் கொண்ட மனித உடலை நாம் பெற்றிருந்தாலும் நாம் எதிர்பார்க்காதபடி விஷத்தின் தன்மையான உணர்வுகளைக் கவர நேர்கின்றது.

அது நமக்குள் வளர்ச்சி அடையும் பொழுது அதனால் நோயாகி நம்முடைய சிந்தனையைக் குறைக்கச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் ஏற்படும் தீமையான விளைவுகளிலிருந்து மக்களை மீட்கச் செய்வதற்காக மெய் ஞானியான அந்தப் போகமாமகரிஷி விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொண்டார்.

இந்தப் புவனம் (நம் பூமி) முழுவதற்கும் தன் உணர்வின் எண்ண அலைகளைப் பாய்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கக் கூடிய எண்ணங்களை மகிழச் செய்தார்.

அவர்கள் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் வெளியிட்ட மூச்சலைகளைப் பூமியில் படரச் செய்துவிட்டு தன் எண்ணத்தாலேயே அந்த மகிழ்ந்த உணர்வுகளைத் தனக்குள் ஈர்த்துத் தன் உடலுக்குள் மற்ற அணுக்களின் தன்மையை ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாக மாற்றி விண் சென்றார்.

1.போகர் எந்த விண்ணின் ஆற்றலை எடுத்து
2.அதை எவ்வாறு தனக்குள் வளர்த்துக் கொண்டாரோ
3.அப்படி வளர்த்துக் கொண்ட முறையைத்தான் வெளிப்படுத்தினார்.
4.அதற்காக அவரால் உருவாக்கப்பட்டது தான் பழனியில் உள்ள முருகன் சிலை.
5.முருகன் சிலையை உற்றுப் பார்த்து அந்த விண்ணின் ஆற்றலை மக்கள் பெற்று
6.மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அழியா ஒளி சரீரம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் முருகன் சிலையை ஸ்தாபித்தார்.
7.சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணமாகத்தான் போகர்  வெளிப்படுத்தினார்.

இப்போது நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்றால் அந்தப் போகமாமகரிஷியின் உணர்வின் அலைகளே எனக்குள் தொடர்ந்து அந்த உணர்வின் ஆற்றலாக என்னை இயக்கி அவர் உணர்ந்த உண்மையின் நிலைகள் உபதேசமாக வெளி வருகின்றது.

ஆகவே
1,பிறிதொரு தவறு செய்பவனின் உணர்வு நம்மை இயக்கி
2.நம்மைத் தவறின் வழிகளுக்கு அழைத்துச் செல்லாமல்
3.நாம் அந்த மாமமகரிஷிகளின் ஒளித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு
4.அவர்கள் உணர்வின் இயக்கமாக அவர்கள் சென்ற மெய் வழியில் செல்வோம்.