ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2018

பெரும் பகுதியானவர்கள் தெய்வத்தை வேண்டும் பொழுது கடைசியில் என்னை உன்னிடம் அழைத்துக் கொள் என்பார்கள்...! ஆனால் எங்கே செல்கிறார்கள்... என்று தெரிந்து கொள்ளுங்கள்...!


நாம் தெய்வத்தின் மேல் பற்று கொண்டு அந்தச் சாங்கியப்படி யாகங்கள் செய்து வேள்விகள் செய்து வந்தாலும் தன் வாழ்க்கையில் கஷ்டம் அதிகரிக்க அதிகரிக்க “என்னை உன்னிடமே அழைத்துக்கொள்…!” என்ற அந்த ஏக்கத்தையே வெளியிடுகின்றோம்.

தெய்வச் சிலையை மையமாக வைத்து அபிஷேகம் ஆராதனைகள் செய்து அதற்கு வேண்டிய அலங்காரங்கள் செய்த பின் நாம் சிலையைக் கண்ணிலே உற்றுப் பார்க்கின்றோம்.

தெய்வத்தின் மேல் போடப்பட்டுள்ள பட்டாடைகள் ஆபரணங்கள் அதில் எந்தெந்த நிறங்களைப் பார்க்கின்றமோ… எந்தெந்த உணர்வின் குணங்களை நாம் பார்க்கின்றோமோ… இவை அனைத்தும் நம் கண்களில் உள்ள கருவிழி நமக்குள் படமாகப் பதிவாக்குகின்றது.

பார்த்த உணர்வின் அலைகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே படுகின்றது. எந்த எண்ணத்தில் தெய்வத்தை உற்று நோக்குகின்றோமோ அந்த உணர்வினை உயிர் நமக்கு அறிவித்தாலும் அது உடலுக்குள் சென்று ஜீவ அணுவாகி விடுகின்றது.

தெய்வத்தை ஆராதனை செய்யும் பொழுது இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் “அந்தத் தெய்வம் உன்னைக் காக்கும்...!” என்று சொல்வார்கள். அதன் வழிகளிலே சொல்லி ஏங்கித் தவித்தாலும் அதே உணர்வுகளை உடலில் விளையச் செய்து கொள்கிறோம்.

அதே சமயத்தில் தெய்வத்தின் மேல் உள்ள பற்றால் அந்தத் தெய்வத்தின் பேரைச் சொல்லி மற்ற எல்லோருக்கும் இரக்க உணர்வுடன் பாசத்துடன் அணுகி அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம்.

அப்படி உதவிகள் செய்தாலும் பலருடைய கஷ்டங்களைக் கேட்டு நுகர்ந்த பின் அந்தத் துன்பமான உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலே துன்பத்தை உருவாக்கும் அணுக்களாகச் சேர்ந்து விடுகின்றது.

இதனின் இயக்கத் தொடரில் கஷ்டமான உணர்வுகள் உடலிலே விளைந்து கொண்ட பின் செல்வங்கள் குறைந்து உடலிலும் நோயாகி விடுகின்றது.

இந்த நிலையில் நாம் தெய்வத்தை எண்ணும் பொழுது
1.உன்னை நான் கும்பிடாத நாளே இல்லை... உன்னையே வேண்டினேன்... வருந்தினேன்...
2.எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்தாய்... எல்லா சுகத்தையும் கொடுத்தாய்.
3.எல்லாருக்கும் நான் நல்லதைச் செய்தேன். கடைசியில் எனக்கு ஏன் இத்தனை சோதனை…? என்ற இந்த உணர்வின் ஏக்கத்தில்
4.”என்னை உன்னிடமே அழைத்துக் கொள்...! என்ற இந்த உணர்வின் வேகம் அங்கே வருகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மா எந்த ஆலயத்தில் எந்தத் தெய்வத்தை உற்றுப் பார்த்து ஆழமாகப் பதிவு செய்து கொண்டதோ அந்த ஆலயத்திலேயே பதிந்து விடுகின்றது.

அந்த ஆன்மா இந்த உடலை விட்டுச் சென்றபின் தன் வீட்டிலேயும் அந்த உணர்வுகள் அதிகமாகப் படர்ந்து விடுகின்றது. இருப்பினும் தன்னுடைய எண்ணங்கள் எந்த ஆலயத்தின் நிலைகளில் இது அதிகமாகச் செலுத்தியதோ அந்த உணர்வின் வேகம் கொண்டு அந்த நினைவலைகள் அங்கே செல்கின்றது.

இவர் எப்படி (உடலை விட்டுச் சென்ற ஆன்மா) ஆலயத்தில் ஏங்கினாரோ அதைப் போல மற்றொருவர்கள் அதே ஏக்கத்தின் நிலைகள் கொண்டு தெய்வத்திடம் “எனக்கு ஏன் இத்தனை சோதனைகளைக் கொடுக்கின்றாய்…?” என்று ஏங்கினால் போதும். அந்த ஆன்மா அவர் உடலுக்குள் புகுந்து அருளாடத் தொடங்கிவிடும்.

இப்பொழுது அவர் தன் கஷ்டத்தில் ஏங்கினார் அல்லவா…!
1.இரு... உன்னை நான் காக்கின்றேன்...! என்று அந்தத் தெய்வமாக அங்கே இயக்கப்பட்டு
2.நான் வந்துவிட்டேன் அல்லவா…!
3.உன் குடும்பத்தைச் சார்ந்த எல்லாக் கஷ்டங்களையும் நானே பார்த்துக் கொள்கின்றேன் என்று
4.அந்த உடலுக்குள் வந்த அந்த ஆன்மா வேலை செய்யும்.

டி.வி ஸ்டேசனிலிருந்து ஒலி/ஒளி பரப்பப்படும் பொழுது காற்றின் மூலமாக வரும் அந்த அலைகளை நம் வீட்டிலுள்ள டி.வி.பெட்டி கவர்ந்து அந்த அலைகளைக் குவித்து உருவத்தையும் சப்தத்தையும் காட்டுகின்றது.

அதைப் போன்று தான் ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட தெய்வச் சிலையை உற்றுப் பார்த்து உடலில் பதிவான உணர்வலைகளை
1.அந்த ஆன்மா வெளிவந்த பின்
2.அதே ஏக்கத்துடன் அதே உணர்வின் வலுவுடன் இன்னொருவர் எண்ணி ஏங்கும் பொழுது
3.அவர் கண்ட தெய்வத்தின் உருவை அப்படியே காண முடியும்.

 நாம் டி.வி.க்களில் காணுவது போலத்தான் நம் கண் புலனறிவுகளில் வெளிப்படுத்துக் ஏக்கத்தால் பரவிக் கிடக்கும் அலைகளைக் குவித்து
1.முருகன் வந்துவிட்டான்
2.அந்தப் பராசக்தி வந்துவிட்டது
3.இந்தக் காளி வந்துவிட்டது
4.எந்த தெய்வத்தின் நிலைகளை அந்த ஆன்மா பதிவு செய்ததோ அந்தந்தத் தெய்வமாக வந்து
5.எனக்குத் தெய்வம் காட்சி கொடுத்தது...! என்று இப்படி எல்லோரும் சொல்லலாம்.

அத்தகைய உணர்வுகளைச் சுவாசித்தபின் தன்னை அறியாமலே நடுக்கம் வரும். எனக்குக் காட்சி கிடைத்தது. கிடு..கிடு... என்று என்னால் நிற்க முடியவில்லையே...! என்று பெரும் பகுதியானவர்கள் சொல்வார்கள்.

நான் காளியைப் பார்த்தேன். முருகனைப் பார்த்தேன். விநாயகரைப் பார்த்தேன் என்று எல்லோரும் சொல்லலாம்.

சாங்கிய சாஸ்திரங்களின்படி அந்தந்தத் தெய்வத்திற்கு வேண்டிய பல பொருள்களைப் படைத்து வைத்து
1.உனக்கு வேண்டியதை நான் செய்திருக்கின்றேன்...
2.நீ எனக்கு இன்னென்னதைக் கொடு என்று எதை இச்சைப்படுகின்றோமோ
3.உடலை விட்டுப் பிரிந்து இன்னொரு உடலுக்குள் போனால்
4.அதே தெய்வமாக நாம் இயங்கத் தொடங்கி விடுகின்றோம்.

இயங்கினாலும் இந்த உடலில் எத்தனை வேதனைகள்... எத்தனை கஷ்டங்கள்.. எத்தனை இன்னல்கள்... குடும்பத்தில் எத்தனை வெறுப்பு கொண்ட உணர்வுகள் வந்ததோ... அடுத்த உடலுக்குள் புகுந்தாலும் அதே உணர்வை இயக்கி அந்தக் குடும்பத்திலும் அத்தனை சிக்கல்களும் வரும்.

அருளாடுவார்கள் மற்றவர்களுக்குச் சொல்லும் பொழுது சில நன்மைகளும் அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தினால் சில நன்மைகளும் உருவாகும்.

ஆனால் அந்த அருளாடுபவர்கள் குடும்பத்தில் வேண்டாத இன்னல்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். குடும்பத்தையும் சின்னாபின்னமாக்கும். இதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் மனித உடலில் விளைந்த அந்த ஆன்மா உடலுக்குள் இருப்பதால் அது பட்ட அத்தனை அவஸ்தைகளையும் இந்த உடலில் இயக்கும்.

இதை எல்லாம் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.