ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2018

ரோட்டிலே ஒரு பொருள் தங்கம் போன்று மின்னினால் உடனே அதை எடுக்க வேண்டும் என்று ஓடுகின்றோம் – அந்த உடல் (பொருள்) ஆசையால் ஏற்படும் விளைவுகள்


செல்வத்தைத் தேட வேண்டும் என்று ஆசையில் இருக்கின்றோம். ரோட்டில் இரண்டு பேர் சேர்ந்து நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். போய்க் கொண்டிருக்கும் போது தரையில் தங்கம் மாதிரி மின்னுகின்றது. மின்னியவுடனே என்ன செய்கின்றோம்...?

1.நம்முடைய ஞாபகம் எல்லாம் அதன் மீது போய்விடுகிறது.
2.உடனே அதைப் போய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.
3.நம்முடன் வந்தவரிடம் கூட “தங்கம் மாதிரி ஏதோ மின்னுகிறது...!” என்று சொல்வதில்லை.
4.கொஞ்சம் இருங்கள்...! இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு
5.ரோட்டிலே மின்னிக் கொண்டிருப்பதை ஓடிப் போய் எடுக்கப் போகிறோம்.

எடுக்கப் போகும் போது இந்தப் பக்கம் பஸ் வருகிறதா...? எல்லது வேறும் எதுவும் வருகிறதா...? என்று பார்ப்பதில்லை. ஏனென்றால் அந்த ஆசையின் உணர்வின் இயக்கம் அப்படித்தான்.

அப்போது என்ன நடக்கிறது...? பஸ் வந்தது என்றால் அடித்துத் தூக்கிப் போட்டு விடும். அதை நாம் பெற முடிகிறதா…? அதை எடுக்க முடியவில்லை.

இதே மாதிரித் தான் நம்முடைய உடல் ஆசை வரப்படும்போது இந்தப் பக்குவ நிலை தவறி விடுகின்றோம். எந்தக் காரியம் செய்தாலும் நம் சிந்தனைகள் தவறி அதனுடைய விளைவாக எப்பொழுதுமே அது நம்மைக் குறை உள்ளதாக மாற்றிவிடும்.

அதே சமயத்தில் நாம் உடல் ஆசை கொண்டு
1.என்னை இப்படிப் பேசினான்... அப்படிப் பேசினான்...
2.எல்லோருக்கும் நான் நல்லது தான் செய்தேன்...
3.ஆனால் என்னை இந்த மாதிரிப் பேசிக் கொண்டு இருக்கிறான் என்றால் இது எல்லாம் சாகாக்கலை.

அவர்கள் பேசுவது எல்லாம் நமக்குள் சேர்ந்து நம் உடலிலே அதை வளர்த்துக் கொண்டு
1.எனக்கு இப்படிச் செய்தானே துரோகம்...! எனக்கு இப்படிச் செய்தானே துரோகம்...! என்று
2.இந்த உணர்வின் தன்மை ஆன பிற்பாடு உடலிலே நோயாகி
3.யாரை எண்ணி அப்படிப் பேசினோமோ அவர்கள் உடலுக்குள் போய்
4.அந்த நோயைத்தான் பெருக்குகிறோம். இது சாகாக்கலை.
5.இந்த உடலில் எதை எடுக்கின்றோமோ அது அடுத்த கலையாக மாறுகின்றது.

ஆகவே உடல் என்ற இந்த ஆசை தான் நமக்கு வருகிறதே தவிர இந்த உயிர் என்ற ஆசை வருவதில்லை. அதைத்தான்
1.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்
2.என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா......! என்று
3.நம் உயிரிடம் வேண்டி இந்தப் பாடலைப் பாடுகின்றோம்.

உயிர் எப்படி ஒளியாக இருந்து நீ எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ இதைப்போல வாழ்க்கையில் இருள் நீக்கி ஒளியான உணர்வின் தன்மையாக என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் வர வேண்டும். தீமை புகாது நான் தடுத்துப் பழக வேண்டும்.

நீ ஒளியாக இருந்து எல்லாவற்றையும் நீ உருவாக்குகின்றாய்.  ஒளியாக இருந்து நீ எப்படி எல்லாவற்றையும் அறிகின்றாயோ அதைப்போல
1.எல்லாவற்றையும் அறிந்திடும் ஞானம்
2.அதாவது ஒளியின் தன்மை பெற்று பொருளறிந்து செயல்படும் நிலை பெற வேண்டும்.
3.அந்த உயிர் ஆசை தான் எனக்குத் தேவை.

உடல் ஆசை என்றுமே எனக்குள் வளர்ந்து விடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்திட வேண்டும் ஈஸ்வரா. அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியின் உணர்வாக ஏகாந்த நிலை நாங்கள் பெறவேண்டும்.

நெருப்பிலே போட்டால் எப்படி எல்லாப் பொருள்களையும் அது கருக்கி விடுகின்றதோ அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தால் தீமைகள் அனைத்தும் செயலிழந்து நமக்குள் சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது.

சூரியன் ஒரு காலம் அழியலாம். ஆனால் இந்தத் துருவ நட்சத்திரம் என்றுமே அழிவது இல்லை. அது வேகா நிலை பெற்றது.  அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நாமும் வேகா நிலை பெறுகின்றோம். எதுவுமே நம்மை அழிக்காது.