7/11/2018

ஆசைகளை அடக்கினால் தான் ஞானம் பெற முடியும் என்கிறார்கள் அதனின் உண்மை நிலை என்ன…? ஆசையை அடக்க முடியுமா…?


ஆசை இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. பற்றற்று வாழ வேண்டும். ஆசையில்லா விட்டால் தான் உலக ஞானம் பெறவேண்டும் என்பதெல்லாம் இவர்களாகச் சொன்ன கதை…!

பெரும் ஆசையில் உருவானது தான் இந்த உலகமே…
1.ஆசை இல்லாவிட்டால் ஜீவனுமில்லை… பந்த பாசமுமில்லை பாற்கடலுமில்லை
2.பாழடைந்த நிலையாக எங்கும் சூனியம் தான் இருக்கும்.

மனித எண்ணமும் ஆசை தான். எல்லா உலகமும் ஆசையில் தான் சுழன்று கொண்டுள்ளது.
1.பற்றற்றவன் என்பவனும் ஆசையில்லாமல் இல்லை.
2.ஞானிகளுக்கும் மகரிஷிகளுக்கும் ஆசை உண்டு.

சுவாச நிலை என்பதெல்லாம் நம் மனதைச் சாந்தமான நிலையில் வைத்துக் கொண்டு நம் மீது வந்து மோதும் கோபம் ஆத்திரம் வேதனை குரோதம் போன்ற உணர்வுகள் நம்மை இயக்காத வண்ணம் மகரிஷிகளின் அருள் உணர்வை ஈர்த்து பெரும் சாந்த நிலைக்கு வருவது தான் அந்தச் சுவாச நிலை.

அந்தச் சுவாச நிலை வருவதற்கே ஆசை வேண்டும். ஆசையை அடக்கிவிடு... ஆசையை அடக்கிவிடு…! என்று சொல்வதெல்லாம் சொல்பவனுக்கே இருப்பதில்லை.

ஆசையை அடக்கிவிட்டால் இந்த உடலில் ஆத்மாவுக்கு என்ன வேலை…! ஆசையை அடக்குபவனின் ஆன்மா தானாகப் பிரிந்து சென்றுவிடும் தன் நிலைக்கே. ஆகவே நாம் பிறந்த பயனை ஆசையுடனே பெற்றிட வேண்டும்.

தான் பெற்ற குழந்தையையே ஆசை இருந்தால் தான் வளர்க்க முடியும். உண்ணும் உணவையும் ஆசையுடன் தான் உண்ண முடியும். ஆசையுடன் இருங்கள் என்பதும் அன்பாக இருங்கள் என்பதும் ஒன்றே தான்…!
  
ஆசையில்லா உலகில் அலையுமில்லை… கடலுமில்லை…! செடிக்கும் மரத்திற்கும் ஆசையுள்ளது. மண் பேசும் கல் பேசும் என்பதும் இந்த ஆசையினால் தான்.
1.ஆசையில்லாதவன் பிறந்ததுமில்லை.
2.ஆசையில்லாதவன் பிறக்கப் போவதுமில்லை.

ஆசை என்பது பேராசை என்பது வேறு. எண்ணத்தை இன்பமாக்குங்கள் என்று சொல்லும் பொழுதே அந்த எண்ணம் ஆசையில் தான் வருகின்றது.
1.பேராசை நமக்குத் தேவையில்லை.
2.ஈசனின் அருளைப் பெற்று அவனுடன் அவனாக…!
3.ஒளியாக வேண்டும் என்ற இந்த ஆசை தான் நமக்கு வேண்டும்.