7/01/2018

என் குருநாதன் எனக்குக் காட்டிய மெய் வழி - “துன்பங்களிலிருந்து மக்களை மீளச் செய்…!”


1.தன் எண்ணத்தின் ஆற்றல் கொண்டு வரும் உணர்வுகளை எல்லாம் புடமிட்டு
2.தீய விளைவுகளையெல்லாம் மாற்றித் தனதாக மாற்றிக் கொண்டு
3.அந்த நல் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி பெற்ற
4.அந்த மகா ஞானியின் உணர்வலைகள் இங்கே பூமிக்குள் வந்து கொண்டிருப்பதை
5.சூரியன் காந்த சக்தி கவர்ந்து கொண்டு இருக்கும் அந்த உணர்வலைகளை
6.நீங்கள் அனைவரும் கவர்ந்து உங்களை அறியாது சேர்ந்த தீய விளைவுகளைப் புடமிட்டு
7.உங்கள் உணர்வுகளைப் பரிசுத்தப்படுத்தி தன்னைத் தான் அறிந்து
8.அந்த மகா ஞானிகள் பெற்ற நிலையைப் பெறச் செய்வதற்கே இதை உங்களுக்குச் சொல்கின்றோம்.

ஏனென்றால் குருநாதன் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) காட்டினான் “இந்தக் கதையை…!” அவன் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தான் “இந்த நிலையை…!”

மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்…! அந்த மனித நிலையில் இருந்து இன்னொரு மிருக நிலை பெறாதபடி அந்த மகரிஷியின் அருள் ஒளி கொண்டு இந்த வாழ்க்கையில் வந்த இருளை நீக்கி… மெய் வழி கண்டு… மெய் வழி நீ செல்…!

மனிதனாக அடுத்து நீ பிறப்பதில்லை. ஆனால் இந்த வாழ்க்கையில் நீ எந்தத் துன்பத்தைப் டுகின்றாயோ இதே உணர்வின் விளைவை உனக்குள் விளைய வைத்துத் துன்பத்தை அனுபவிக்கும் உடலாக இந்த உயிர் ஆக்கிவிடும்.

துன்பத்தை நீக்கும் உணர்வின் தன்மை உனக்குள் வளர்த்துக் கொண்டால் அந்த மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலுடன் நீ இணைய முடியும்.

அவ்வாறு இணைந்துவிட்டால் என்றும் ஒளி நிலையான ஒளிச் சரீரம் பெற்று நீ இடும் மூச்சலைகள் கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் அது துன்பத்தைப் போக்கும் சக்தியாக வளரும்.

ஆகவே எல்லோரும் அந்த நிலைகள் பெற வேண்டும் நீ எண்ணு. நீ “அதுவாக ஆகு…!” என்று சொன்னார்.

நல்லதை எண்ணி ஏங்கும் உள்ளங்களில் மற்றவர்களுடைய துன்பத்தின் நிலைகள் உங்களுக்குள் ஊடுருவி நல்ல உணர்வைச் செயலற்றதாக ஆக்கி நோயுற்ற நிலைகளும் நல்லதைச் சிந்திக்க முடியாத நிலைகள் நலிந்து கொண்டு இருக்கும் உணர்வுகளில் இருந்து “மக்களை  மீளச் செய்…! என்றார் குருநாதர்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானியின் அருள் ஒளிகள் உங்களுக்குள் புகுந்து இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கித் தீமைகளை எல்லாம் புடமிட்டு அருள் உணர்வின் சத்தாக மகிழ்ச்சியுறும் இந்த எண்ணமாக உங்களுக்குள் தோன்ற வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் இதை உபதேசிக்கின்றேன்.

 மெய் ஒளியின் தன்மையை நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த ஏக்கத்தின் உணர்வு கொண்டு உங்களுக்குள் இதைப் பதிவு செய்யும் போது எந்த அளவிற்கு இதைப் பதிவு செய்கின்றீர்களோ அந்த ஆற்றல்களை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

நீங்கள் அனைவரும் அந்த மெய் ஒளி பெற வேண்டும்…! மெய் வழியில் செல்ல வேண்டும்…! என்று விரும்புகின்றேன்.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும்
1.மெய் ஞானியின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்.
2.இருள் சூழ்ந்த நிலைகள் எங்களுக்குள் இருந்து நீங்க எண்ண வேண்டும்.
3.மெய்ப் பொருள் காண வேண்டும்.
4.நாங்கள் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் நல்லவையாக இருக்க வேண்டும்.
5.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்.
6.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்.
7.எங்கள் செயல் எல்லாம் புனிதம் பெற வேண்டும் என்ற
8.இந்த உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் பதிவு செய்து இதைப்போல நீங்கள் தியானித்துப் பாருங்கள்.

தியானிக்கத் தியானிக்க
1.நீங்கள் அருள் வழியில் வளர்வதைப் பார்க்கலாம்.
2.அறியாத நிலைகளில் இயக்கும் இருள்கள் எப்போது… எப்படி வருகிறது…? என்று நீங்கள் உணரலாம்.
3.அந்த இருள் சூழ்ந்த நிலைகளை நீங்கள் நீக்குவதைப் பார்க்கலாம்.
4.உங்களுக்குள் மகிழ்ச்சி தோன்றும் நிலையைப் பார்க்கலாம்.

அந்த மகிழ்ச்சியான நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு தான் இதை உபதேசிக்கின்றோம். நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்குவது “எனக்குள் விளைகின்றது….!

இதைப் போன்றே நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படுத்திப் பாருங்கள். எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.