ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2018

விண்ணின் ஆற்றலைப் பெறச் செய்யும் விநாயகர் தத்துவம் – “மகரிஷிகளின் தொலைத் தொடர்பு...!” (NETWORK)


ஒருவர் செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றார். அதே சமயத்தில் இரக்கம் கொண்டு ஈகை கொண்டு பிறர்படும் துயரத்தை அவர் கேட்டறிந்து வேதனைப்படுவர்களுக்குப் பொருளைக் கொடுத்து மற்ற உதவிகளைச் செய்து அவர்களையும் சாந்தப்படுத்த எண்ணுகிறார்.

இப்படிப் பல உதவிகள் செய்தாலும் அவர்கள் பட்ட துயரத்தைக் கேட்டு நுகர்ந்தறியும் பொழுது வேதனைப்பட்டோர் உடலிலே விளைந்த தீமையான கசப்பான உணர்வுகள் இவருக்குள் புகுந்துவிடுகின்றது.

கசப்பு இவருக்குள் புகுந்த பின் இவர் நன்மை செய்யும் உணர்வை நீக்கி அதை வெளியே அனுப்பி விடுகின்றது. அப்பொழுது நல்லது அங்கே செயலற்றதாக மாறுகின்றது.

இதைப் போன்ற நிலையில் அன்றாட வாழ்க்கையில் தினசரி எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். அவர்களுடைய நிலைகளைக் கேட்டு அறிந்து கொள்கிறோம். அதிலே சில சந்தர்ப்பங்கள் கசப்பான நிலையாகி விடுகின்றது.

நல்லதையே நுகர்ந்து நல்லதைச் செய்து வந்தாலும் அந்தக் கசப்பின் நிலைகள் நமக்குள் சிறுகச் சிறுகச் சேரத் தொடங்குகின்றது. அந்தக் கசப்பால் வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பை நாம் அகற்றுகின்றோமா...?

இதை உணர்த்துவதற்குத்தான் அரசையும் வேம்பையும் ஸ்தல விருட்சமாக வைத்து விநாயகருக்கு வைத்தார்கள் ஞானிகள்.

விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நாம் விநாயகரைப் பார்க்கும் பொழுது கிழக்கே பார்த்து இந்த அந்தத் தத்துவ ஞானி அகஸ்தியன் கொடுத்த நிலையைக் கவரும்படிச் செய்தார்கள்.

அன்று வாழ்ந்த அகஸ்தியன்
1.இதைப் போன்ற நஞ்சான இந்தக் கசப்பினை அகற்றித்
2.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
3.பாழடைந்த இடமான துருவத்தை (வட துருவம்) அடைந்து
4.விண்ணில் வரும் நஞ்சினை அகற்றி நஞ்சினை ஒடுக்கி
5.ஒளியின் சிகரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அவன் உணர்ந்த நிலையை சாதாரண மக்களும் நுகர்ந்து  தனக்குள் அறியாது உட்புகுந்த தீமைகளை அகற்றிட வேண்டும் என்பதற்கே விநாயகரைக் காட்டியுள்ளார்கள்.

உதாரணமாக அமெரிக்காவில் நடக்கக்கூடிய சம்பவங்களை அங்கிருந்து செயற்கைக் கொள் மூலம் ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆன்டெனாவை வைத்து நாம் இங்கிருந்து கவர்ந்து இருந்த இடத்திலேயே டி.வி. மூலம் காண முடிகின்றது அறிய முடிகின்றது.

இதைப் போன்று தான் சாதாரண மனிதர்கள் பேசிய உணர்வுகள் அனைத்துமே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்து கொண்டேயுள்ளது. (நாம் சிறு வயதிலிருந்து பேசிய உனர்வுகள் அனைத்துமே நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்தில் உண்டு)

ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் தோன்றும் உணர்வின்  நினைவலைகளுக்குத் தக்க கண்ணிலே செலுத்தப்படும் போது
1.உதாரணமாக ஒரு தீங்கு உள்ளவனை நினைத்தோம் என்றால்
2.அந்த அலைகள் நம் சுவாசத்திற்குள் வந்து உயிரிலே பட்ட பின்
3.அவனுக்கு எப்படியும் தீங்கு செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியைக் காட்டுகின்றது.

அந்தத் தீங்கு செய்யும் உணர்வு நமக்குள் வந்ததும் அதே உணர்வின் நிலைகள் இயக்கி அந்தத் தீங்கு செய்தவனுக்கு மீண்டும் சரியான பதில் சொல்ல வேண்டும் என்ற நினைவைக் கூட்டுகின்றது.

இதே போலத் தான் விநாயகரைப் பார்க்கும் பொழுதெல்லாம்
1.அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த காவியப் படைப்பின் நினைவினைக் கூட்டி
2.அந்த நினைவைக் கண்ணுடன் இணைத்து உயிருடன் ஒன்றச் செய்து
3.விண்ணை நோக்கி ஏகி இந்த உண்மைகளை உணர்த்திய மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி
4.அதை விண்ணிலிருந்து கவரும்படி அன்று செய்தார்கள் ஞானியர்கள்.

இவ்வாறு அங்கே விண்ணிலே ஏகி (விஞ்ஞானத்தில் செலுத்திய செயற்கைக் கோள் போல) நம் நினைவின் ஆற்றலை அங்கு கூட்டும் போது தீமையை அகற்றி நஞ்சினை வென்ற அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகள் இங்கே பூமிக்குள் படர்ந்துள்ளதைக் கவரும்படி செய்தார்கள்.

அதைக் கவர்ந்து இந்த மனித வாழ்க்கையில் தனக்குள் அறியாது புகுந்த இந்தக் கசப்பான நிலைகளை நீக்குவதற்கு நமக்கு உணர்த்திச் சென்றார்கள் அந்த மகரிஷி.

இந்த விநாயகர் தத்துவத்தைத் தெளிவாகத் தெரிந்து அதைக் கடைப்பிடித்தால் நாம் விண் செல்வது உறுதியாகும்.