ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2018

மரத்தைத் தூக்கி எறியும் சக்தியைக் கொடுத்து மலைப் பாம்பிடமும் மந்திரவாதிகளிடம் என்னைப் பரிசோதித்தார் குருநாதர் – கேரளாவிலும் குமாரபாளையத்திலும் நடந்த நிகழ்ச்சிகள்


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் (ஞானகுரு) “உனக்குள் அற்புத சக்தி இருக்கிறது...!” என்று சொல்லிவிட்டு சில நிகழ்ச்சிகளைச் செய்யச் சொல்கிறார். இதிலே நீ ஆசைப்படுவாயோ…! என்று சொல்கிறார்.

குருநாதர் உன் விரலை நீட்டுடா...! என்கிறார். இந்த மாதிரி நீட்டு. இந்த மரம் சாய வேண்டும் என்று சொல்கிறார். அவர் சொன்ன மாதிரிச் செய்தவுடன் ஒரு மரம் அப்படியே சாய்கிறது. கீழே விழுந்து அப்படியே காற்று போலப் பறந்து போகிறது.

உனக்கு யாராவது எதிரி இருந்தால்... “இது போலச் சாய்த்து விடலாம்...!” என்று சொல்கிறார். உனக்குக் கெடுதல் ஏதாவது செய்கிறான் என்றால் நீ விரலை இது போல நீட்டினால் அவனைச் சாய்த்து விடலாம். யாராக இருந்தாலும் இதைச் செய்யலாம்...! என்று சொல்கிறார்.

நான் சந்தேகப்பட்டவுடன் “இன்னொரு மரத்தின் தாவு (மரக் கொப்பு) மீது விரலைக் காண்பிடா...!” என்றார். காட்டியதும் தாவு “சடக்...” என்று அப்படியே ஒடிந்து விழுகிறது.

அப்போது குருநாதர் என்ன சொல்கிறார்,
1.உன்னைக் கண்டால் உலகமே அஞ்சும்.
2.நீ எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை...! என்று சொல்கிறார்.

இந்த மாதிரி ஒரு வலுவைக் கொடுத்து என்னைப் பரிசோதிக்கிறார். எதிலே கொண்டு போய் நம்மை மாட்டப் போகிறார் என்று தெரியவில்லை. அப்போதே எனக்குச் சந்தேகமாகி விட்டது.

இப்பொழுது இதைக் காண்பிக்கிறார். இன்னும் வேறு என்னென்னமோ கஷ்டத்தில் கொண்டு போய்த் தள்ளி விடுவார் போலத் தெரிகிறது...!  எத்தனை அடி  கிடைக்கப் போகிறதோ…? அல்லது வேறு என்னமும் கிடைக்கப் போகிறதோ…! என்ற இந்த உணர்வு எனக்கு (ஞானகுரு) வந்துவிட்டது.

ஏனென்றால் இவ்வளவு அற்புதங்களைச் செய்யப் போகும் போது குருநாதருக்குப் பிடிக்காதபடி நாம் ஏதாவது செய்துவிட்டால் “என்ன ஆவோம்...!” என்று இந்தப் பயம் தான்.
1.இந்தப் பயத்திலே எனக்குச் சிந்திக்கக் கூட நேரம் இல்லை.
2.என்ன செய்வது...? இவரிடமிருந்து நாம் எப்படிக் கழன்று கொள்வது...?
3.எல்லாம் காண்பிக்கிறார்… எல்லாம் பெறுகிறோம்… அவரிடமிருந்து ஏதாவது சாப அலைகள் வந்தால்
4.நம்மை எதிலே கொண்டு போய்விடுவாரோ…? எந்த நிலையைச் செய்வாரோ…! என்ற இந்தப் பயம் தான் எனக்கு அதிகமாக வருகிறது.

அப்போது தான் குருநாதர் சொல்கிறார்…! நீ ஒன்றும் ஆக மாட்டாய். உனக்கு இந்தப் பயம் வருகிறதில்லையா…? ஒரு எதிரிக் கூட்டதுக்குள் நீ போகிறாய். நீ ஒரு நல்லதைச் செய்கிறாய்.

ஆனால் ஒரு பொறாமைகாரன் ஏதோ ஒன்று செய்கிறான். அப்படி அந்தப் பொறாமைக்காரன் செய்யப் போகும் போது உன்னிடம் இருக்கக்கூடிய இந்த வலுவை நீ அவர்களிடம் பாய்ச்சுவாய்.

பவரையும் (சக்தியையும்) கொடுத்து மரத்தையும் சாய்க்கச் சொல்லி விட்டால்...  யாராக இருந்தாலும் “உரசிப் பார்க்க வேண்டும்” என்ற தைரியம் நமக்கு வரும் அல்லவா...!

அவன் கெட்டவன் தான். உன் வலுவை அவன் மேல் பாய்ச்சும் போது அவன் வீழ்ச்சி அடையும் போது அவன் எண்ணம் முழுவதும் உன்னிடம் வரும். ஏனென்றால் அந்தச் சமயத்தில் உன்னிடம் இருக்கக்கூடிய சக்தி கொண்டு அவனை எப்படியும் வீழ்த்தி விடுவேன் என்ற அகம் கொள்கிறாய்.
1.வீழ்த்தி விடுவேன்...! என்ற எண்ணம் வரும் போது
2.முதலில் உன் உயிர் உனக்குள் அதைப் படைக்கிறது என்று சொல்கிறார்.
3.வேறு யாரும் இல்லை “நீ எண்ணும் எண்ணமே உனக்கு எதிரியாக மாறுகிறது...!” என்று சொல்கிறார்.

நீ யாரை வீழ்த்த வேண்டுமென்று எண்ணுகிறாயோ... உன்னுடைய அதே உணர்வு... நான் கொடுத்த சக்தி உனக்குள்ளேயே அது விளைந்து உனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை வீழ்த்திய தீரும்...! என்கிறார். அதாவது
1.முதலில் நீ தான்டா கெடுவாய்.
2.இரண்டாவது தான்டா அவன் கெடுவான் என்கிறார்.
3.அவனும் விழுந்து விடுவான். நீயும் விழுந்து விடுவாய்.
4.இதில் நீ எங்கே தப்பப் போகிறாய்...? என்று கேட்கிறார்.

ஏனென்றால் குருநாதர் பல வகைகளில் எம்மைப் பரிசோதித்தார். ஆசையும் ஊட்டுகிறார். அடுத்தாற்போல் அந்த ஆசையினால் எல்லாம்  பெறவும் செய்கிறார். அடுத்த நிமிடம் “தொப்...!” பென்று கீழே விழ வைத்து விடுகின்றார். பயப்படவும் வைக்கிறார்...!

சாதாரண வாழ்க்கையைக் காட்டிலும் இது ஒரு ஏதோ ஒரு நரக லோகத்தில் வாழ்ந்த மாதிரி அல்லவாக இருக்கிறது...?
1.இதையும் செய்ய முடியவில்லை.
2.அதையும் செய்ய முடியவில்லை. என்ன செய்வது...? என்று
3.இப்படி ஒரு திகட்டலை ஊட்டிக் கொண்டே வருகிறார்.

அடுத்து குருநாதர் என்ன சொல்கிறார்...? நீ இரக்கத்துடன் ஒருவருக்கு  நல்லது செய்கிறாய் என்றால் அவனுடைய வேதனையான உணர்வுகள் உனக்குள் வந்துவிடுகிறது.

அவன் உடலில் வேதனைகள் அதிகமாகும் போது நீ இரக்கத்துடன் அணுகும் பொழுது “ஈகை....! இது வலு குறைந்தது. ஆனால் அவனிடம் இருக்கக்கூடிய வேதனை என்பது வலு அதிகமானது. அதை நீ நுகர்கிறாய். உனக்குள் அது அணுவாக விளைகிறது. நீ காப்பாற்றிவிடுகிறாய் முதல் தடவை.

ஆனால் நீ நுகர்ந்த வேதனைகள் உன் உடலுக்குள் விளையத் தொடங்கியதும் அவனை காப்பாற்றிய உன்னுடைய நல்ல குணத்தை முழுவதையும் அழிக்கிறதே. இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்...? என்று கேட்கிறார். இப்படி அனுபவரீதியாகக் காட்டுகின்றார்.

அடுத்தாற்போல வேறொரு இடத்தில் நான் இருக்கின்றேன். அங்கே ஒரு மலைப் பாம்பு வருகிறது. நான் படுத்திருக்கின்றேன். அது சுருண்டு... சுருண்டு... சுருண்டு... சுருண்டு... அப்படியே பூஸ்..புஸ்ஸ்... புஸ்ஸ்...! என்று வருகிறது.

இதை இவர் (குரு) ஏவி விட்டாரா அல்லது அது நிஜமாக வருகிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம். அது இவ்வளவு சீறி வருகிறதே... இதை நிஜமாகவே இவர் உருவாக்கிக் கொடுக்கிறாரா...? என்று என்னுடைய எண்ணம்.

ஆனால் என்னை இங்கே விட்டுவிட்டு அவர் எங்கேயோ போய் விட்டார். காட்டுக்குள் பக்கம் போய் விட்டார். அவர் என்ன செய்கிறார்  என்று எனக்கும் தெரியவில்லை. “நிஜமா... பொய்யா...!” என்று தெரியவில்லை.

அதி பயங்கரமான நிலையில் அந்த மலைப் பாம்பு சீறிப் பாய்ந்து வரப்படும் போது அப்பொழுது நான் ஒரு யோசனை செய்தேன். என் மேலே இருக்கும் துண்டில் ஒரு கல்லை முடித்து அந்தப் பாம்பு மீது போட்டேன்.

அதைத் தூக்கிப் போட்டதும் அதன் வாயில் போய்ச் சிக்கிக் கொண்டது. அந்தத் துண்டிலிருந்து வரும் மனித வாசனை காரணமாக அந்த மலைப்பாம்பு அந்தத் துண்டோடு சேர்த்துக் கல்லையும் விழுங்குகிறது. ஆனால் அது கல்லென்று பாம்பிற்குத் தெரியாது.

பலவிதமான உணர்வுகளை எடுத்தபின் எனக்கு அப்பொழுது ஒரு தைரியமும் வருகிறது. சில நேரங்களில் அதிலிருந்து தப்பவும் முடியவில்லை.

அப்புறம் தான் “இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்...!” என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அப்படிச் சிந்திக்க ஆரம்பிக்கும் போது நம்மிடம் குருநாதர் மிகப் பெரிய சக்தியைக் (மரத்தைச் சாய்க்கும் சக்தி) கொடுத்திருக்கிறார் இல்லையா...!

அந்தச் சக்தியை வைத்து இந்தப் பாம்பை நான் ஏதாவது செய்கிறேனா...! என்று பார்க்கிறார் போலிருக்கிறது... என்று எனக்கு அப்படி ஒரு சிந்தனை வந்தது.
1அப்பா...…! எது ஆனாலும் சரி... நீயே பார்த்துக் கொள்…!
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.அது என்னை விழுங்கினாலும் சரி… என்னைக் கடித்தாலும் சரி.. நீயே பார்த்துக் கொள்…! என்று சொல்லி விட்டேன்.

ஏனென்றால் இது குருநாதர் ஏவி விட்ட பாம்பு தான். அப்புறம் அந்தப் பாம்பு அப்படியே மறைகிறது. குருநாதர் கெக்கே…கெக்கே... என்று சிரிக்கிறார்…! “என் பரீட்சையில் நீ தப்பி விட்டாயடா…!” என்று.

இப்படி அவர் கொடுத்த சக்தியை வைத்து நான் என்ன செய்கின்றேன் என்று சோதிக்கிறார். இதற்கு அடுத்து கேரளாவில் ஒரு மலைப் பக்கம் போகச் சொல்கிறார்.

அங்கே மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்கிறார்கள். என்னுடைய வாசனையை நுகர்கிறார்கள். பரீட்சை செய்து பார்க்கிறார்கள். அதாவது “ஒடியர்கள்” இருக்கக்கூடிய பகுதிக்குக் குருநாதர் அனுப்புகிறார்.

ஒடியர்கள் முன்னாடி வருவதை நுகர்ந்து சில விஷயங்களைச் செய்வார்கள். என்னுடைய வாசனையை நுகர்ந்து பின் உனக்கா… எனக்கா…? என்று வலுவான நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

அவர்கள் செய்வதைப் பார்த்தபின் இவர்களை வீழ்த்தினால் என்ன…? என்ற அந்த எண்ணம் மறுபடியும் வருகிறது. சரி பார்க்கலாம்.. என்ன தான் செய்கிறது என்று பார்ப்போம்...! என்று தோன்றுகிறது.

மலைப் பாம்பிடமிருந்து தப்பினோம். ஆனால் இந்த மந்திரவாதிகளிடமிருந்து எப்படித் தப்புவது…? அவன் ஏவல் செய்யும் போது நாம் சும்மா இருந்தால் நம்முடைய கை கால் போய் விடுமே...! கை கால் போய்விட்டால் என்ன செய்வது…?  இப்படி ஒரு சிந்தனை வருகிறது.

முதலில் விரலை நீட்டி மரத்தை எப்படிச் சாய்த்தோமோ அதே போல இவர்கள் கை கால்களையும் விழ வைக்கலாம் என்று இந்த எண்ணம் போகிறது.

அப்பொழுது தான் குருநாதர் ஏற்கனவே சொன்னது நினைவிற்கு வருகிறது. முதலில் நீ இதை எண்ணினால் உன் கை கால்கள் விளங்காமல் போகக் கூடிய உணர்வு உனக்குள் விளைந்து விடும்.
1.அவனும் போகிறான்.
2.அதே போல நோயாக மாறி உன் கை கால் அங்கங்கள் இயங்காமல் போய்விடும் என்று சொல்கிறார்.

அப்புறம் இதற்கு என்ன செய்வது...! என்கிற போது தான் குருநாதர் விளக்கம் கொடுக்கின்றார். அவர்களின் ஏவலின் தன்மை உன்னைத் தாக்காத நிலைகளில்
1.”நான் கொடுத்த சக்தியை” உன் பாதுகாப்புக்காக வைத்துக் கொள்.
2.உன் பாதுகாப்புக்காக இந்தச் சக்தியை நீ பயன்படுத்தினாய் என்றால் உனக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

ஏனென்றால் ஒரு நெல்லிற்கு உமி தேவை தான். அந்த உமி இல்லை என்றால் அதில் பால் பிடித்து அரிசி வராது. இதைப் போன்று தான் உயர்ந்த குணங்களைக் காக்க வேண்டுமென்றால் இந்தச் சக்தியைப் பயன்படுத்த வேண்டிய முறைகள் இது என்று உபதேசிக்கின்றார்.
1.வலுவான சக்தியைக் கூட்டி
2.இதை அரணாக அமைக்கச் சொல்கிறார்.
3.இந்த அரணைத் தாண்டி அது வராது.
4.நீ அவனை அழிக்க வேண்டியதில்லை... அவன் உன்னை அழிக்க முடியாது.
5.அவன் எண்ணம் அவனுக்குள்ளேயே அவனை மாய்க்கும்.
6.அவனில் அவனே போகட்டும்...! என்று சொல்கிறார்.

மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைக் கொடுத்தாலும் அது மனிதன் கைக்கு வரும்போது எப்படி..? என்ற நிலை அனுபவமாக இவ்வாறு காட்டுகின்றார் குருநாதர்.

இப்படி ஒரு அனுபவம் இல்லை. பல முறைகளிலும் பல சந்தர்ப்பங்களிலும் இதே போல ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஒரு சமயம் குமாரபாளயத்தில் நான் இருக்கும் பொழுது என்னை அங்கிருக்கும் மந்திரவாதியும் அவனைச் சார்ந்தவர்களும் உதைப்பதற்கே வந்தார்கள்.

விடிவதற்கு முன் நீ ஊரை விட்டுப் போகவில்லையென்றால் உன்னை என்ன செய்கிறேன் பார்...! என்கிறார்கள். என்னைப் பார்த்துக் கத்தியை எடுத்து ஓங்கி விட்டார்கள்.

அப்பொழுது வலுவை இப்படிப் பாய்ச்சுவதா... அப்படிப் பாய்ச்சுவதா...? என்ற நிலையில் அந்த உணர்வின் தன்மையை “நான் அரண் கட்டப்படும் போது” கத்தியை ஓங்கியவனின் கைகள் இறங்கவில்லை. அந்தக் கை பாட்டுக்கு அப்படியே நிற்கிறது.

அதே சமயம் கூட்டம் கூடி விட்டது. அப்படிக் கூட்டம் கூடியதும்
1.நான் தெரியாமல் செய்துவிட்டேன் என்றேன்
2.அப்புறம் அவன் கை கீழே இறங்கியது...!
3.சில சந்தர்ப்பங்கள் இப்படி வரப்படும் போது நானாக அதைச் செய்யவில்லை.

எதிர்பாராமல் வரும் போது இந்த உணர்வின் தன்மை கொண்டு தடுப்புச் சுவர் போல அமைத்துத்
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தான் எண்ண வேண்டுமே தவிர
2.கை நிற்க வேண்டும் என்று எண்ணக் கூடாது...!
3.நான் கொடுத்த உணர்வின் சக்தியை நீ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இப்படித்தான் எனக்கு அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்.

அணுவை வைத்து அணுகுண்டாகச் செய்து அதை வெடிக்கச் செய்தால் உலகை அழிக்கின்றது. ஆனால் அந்த அணுவையே அடக்கும் போது அது நமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றது.

அதாவது மரத்தைச் சாய்ப்பது அடுத்தவரைச் செயலிழக்கச் செய்வது இதெல்லாம் மனிதனுக்குள் விளைந்த சக்தி. மந்திர ஒலியால் ஒரு உடலுக்குள் பாய்ச்சப்பட்டு அந்த உணர்வின் தன்மை வலுவாக்கப்பட்டு அதன் நிலைகள் கொண்டு தான் இப்போது உன்னில் இயக்கப்பட்டது. சாதாரண மனிதனின் செயலாக்கங்கள் தான் இது..! என்று விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.

தன் வாழ்க்கையில் வந்த இத்தகைய தீமைகள் அனைத்தையும் நசுக்கிப் பொசுக்கியவன் அகஸ்தியன். அகஸ்தியன் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். அதை நீ நுகர்ந்தாய் என்றால் இதை நீ அழிக்கலாம் என்ற நிலையில் இராமாயணக் காவியத்தைச் சொல்கின்றார்.

வாலி மிக வல்லமை பெற்றவன். ஒரு தீமையான உணர்வை மற்ற எதனுடன் கலக்கச் செய்தாலும் அதனின் வலிமையை அது இழக்கச் செய்துவிடும். ஆனால் அதைப் போன்ற வலிமைகளையும் வென்றவன் துருவ மகரிஷி.

தன்னுடைய எண்ணத்தால் மற்றவைகள் அனைத்தையும் அரவணைத்து ஒளியின் சிகரமாக வாழுகின்றான் அந்தத் துருவ மகரிஷி.

1.நீ இங்கே மந்திரத்தைச் சொல்லிச் சொல்லித்தான் எடுக்க வேண்டும்.
2.நீ மந்திரத்தைச் சொல்லி அந்த உணர்வின் தன்மை வலிமை பெற்ற பின்தான்
3.இந்த உணர்வின்  நினைவாற்றலை அடுத்தவனுக்குள் நீ பாய்ச்ச முடியும்.
4.இதில் ஏற்றி மந்திர உருக்களை நீ ஏற்படுத்துவதற்கு முன்
5.நீ ஜெபிக்கும் இந்த அலைகள் குவிவதற்கு முன் அவன் உன்னைத் தாக்கவும் செய்யலாம்.

ஆனால் நீ எண்ணும் போது “நினைத்த மாத்திரத்தில்” அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடியதை நீ பெற முடியும். அது எங்கும் எப்போதும் பரவிக் கொண்டே உள்ளது. அது வந்து கொண்டே உள்ளது

மனித வாழ்க்கையில் வரும் தீமை எதுவானாலும் அந்தத் தீமை தனக்குள் விளையாதபடியும் ஒருவன் தீமை செய்கிறான் என்றால் “தீமை செய்தான்...!” என்ற எண்ணத்தை எடுக்காதபடியும் உயர்ந்த ஞானத்தின் உணர்வை இப்படி நமக்குள் சேர்க்க வேண்டும்.

அன்று அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைத் தன் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட பின் வரும் விஷத்தை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டான்.

வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் சூரியனிலிருந்து வெளிப்படுகிறது. அதிலே காந்தம் ஒரு பொருளைத் தனக்குள் அரவணைத்துக் கொண்டால் சீதா லட்சுமியாக மாறுகின்றது. துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரக் கூடியதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் சீதா லட்சுமியாக மாறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று  இந்த எண்ணத்தை எண்ணும் போது அதை நீ பெறுகின்றாய். அந்த உணர்வை நீ நுகரும்போது அந்த எண்ணங்கள் பிரதிபலிக்கின்றது. அதாவது உடலான இந்தத் திரேதா யுகத்தில் சீதா ராமனாகத் தோன்றுகிறான் (எண்ணங்களாகத் தோன்றுகின்றது).

கடும் வேதனைப்படும் நிலையாக விஷத் தன்மை கொண்ட  உணர்வின் இயக்கமாக ஒருவன் செய்தான் என்றால் அது வாலி. ஏனென்றால் விஷம் முதலில் தோன்றியது – வாலி. பின் மனிதனாகி ஒளியின் சிகரமாக மாறி ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ நட்சத்திரம் – சுக்ரீவன்.

வாலியின் சகோதரன் சுக்ரீவன் என்றும் “அவனுடைய துணையைத் தான்... இராமன் நாடுகின்றான்...!” என்று காட்டுகின்றார்கள். விஷத் தன்மையான உணர்வுகளை நுகர்ந்தால் அதிலிருந்து விடுபட
1.நம்முடைய எண்ணத்தால் (இராமன்)
2.அந்தத்  துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் (சுக்ரீவன்) பெற வேண்டும்  என்று ஏங்கிப் பெறும் போது
3.அது நம் உடலுக்குள் வலிமை பெற்று
4.இந்த நஞ்சினை (வாலி) நமக்குள் வராதபடி பாதுகாக்கின்றது என்ற நிலையை அங்கு தெளிவாகக் காட்டுகின்றார்.