ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2018

ஞானத்தின் பாதையில் “நாம் ஒரே சீராகச் செல்ல வேண்டும்...” என்றால் இதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்...!


காட்சி:-
ஒரு ஆட்டுக்கல்லில் அரிசியைப் போட்டு அரைக்கும் பொழுது ஒரே சீராக அரைத்து வந்த நிலையில் ஒரு கல் சிக்குண்டவுடன்... “ஒலி கிளம்பி... நரநரத்த நிலையுடன்...!” மீண்டும் முதல் நிலை போல அந்த மாவு அரைபடுகின்றது.

விளக்கம்:-
ஞானிகள் காட்டிய வழியில் ஞானப் பாதையில் நாம் சென்று கொண்டிருந்தாலும் நம்மை அறியாமலே சில ஊடுருவல்கள் வந்து மோதும்.

அந்த மோதலுக்காக
1.நாம் நம் ஞானத்தைச் சஞ்சலப்படுத்தாமல் சுழலும் பொழுது
2.மோதிய நிலையும் நம் ஞானத்துடனே கலந்து
3.தனித்து நிற்காமல் நம் ஞான வழி மீண்டும் செயல் கொள்ளும்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில கனிகளைப் பறித்து அப்படியே உட்கொள்கின்றோம். சில கனிகளைத் தோலை நீக்கிய பின் உட்கொள்கின்றோம்.

பலாப்பழம் போன்ற கனிகளை அதன் முள்ளை அகற்றிவிட்டு அதற்குள் இருக்கும் சதைப் பகுதியை அகற்றிவிட்டுச் சுவையான பலாச்சுளையை எடுத்து அதற்குள் இருக்கும் கொட்டையை எடுத்து விட்டுப் பின் தான் சாப்பிடுகின்றோம்.

முன்னோர்கள் காட்டிய வழியில் முக்கனியை வைத்து வணங்கவும் செய்கின்றோம். ஏன் வணங்கச் சொன்னார்கள்...? அதன் உட் பொருள் என்ன...?

1.மாம்பழத்தை அப்படியே கடித்துச் சுவைத்து உண்டு கொட்டையை வீசி விடுகின்றோம்.
2.வாழைப்பழத்தின் தோலை நீக்கி அதை அப்படியே சுவைக்கின்றோம்.
3.பலாச்சுளையைச் சுவைக்கப் பல வேலைகள் செய்த பின் தான் உட்கொள்கின்றோம்.

முக்கனிக்கும் சுவை உண்டு. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பக்குவ நிலை கொண்டு தான் நாம் உட்கொள்ள முடிகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞானிகளின் உணர்வை நாம் பற்றுடன் பற்றி நம் எண்ணத்தைச் சுற்றியுள்ள உலக நிலைகளைத் தோலை அகற்றுவது போல் அகற்றி ஞானத்தை ருசிக்க வேண்டும்.

1.நமக்குள் கலந்துள்ள தீமையான அணுக்களை முட்களை அகற்றுவது போல் அகற்றி
2.சதையான நிலையை எண்ணாமல் நம்முள் உள்ள சுவையான சுளையைச் சுவைத்திட
3.வாழ்க்கையில் வரும் எதிர் நிலைகள் என்ற கொட்டைகளை அகற்றி
4.மகிழ்ச்சி என்ற நிலை எய்திட முக்கனியைப் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.