
நீங்கள் எல்லாம் மெய் ஞானிகளாக உருவாக வேண்டும் என்ற ஏக்கத்துடன் உபதேசிக்கின்றேன்
மனிதனுடைய எண்ணங்கள்
இன்றைய உலகில் சீர் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது குருநாதர் இயற்கையின் உண்மை நிலைகளை “மூடனாக இருந்த என்
மூலமாக வெளிப்படுத்துகின்றார்…”
பன்றி சாக்கடையை நுகராது அதற்குள் இருக்கும் நல்ல பருப்பை நுகர்கின்றது. இதே போல் சாக்கடையாக இருக்கும் இந்தக் காற்று மண்டலத்தில்
இருக்கும்
1.நல்ல உணர்வுகளான ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்தறிந்து அதை எடுத்துச் சொல்லின் ஒலியாக நீ வெளிப்படுத்தும் போது
2.எவர் இதைக் கேட்டு உணர்கின்றார்களோ அவர்கள் வாழ்க்கையில் இருள் சூழ்ந்த நிலைகள் நீங்கி மெய் ஒளி காணும் நிலைகளாக வளரும்.
இதை நீ செய்…! அவர்கள் வளர வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது நீ வளர்கின்றாய். அவர்கள் வளர வேண்டும் என்று நீ விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்த உணர்வின் சக்தி உனக்குள் விளைகின்றது. ஆகவே
1.ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருவரையும் மெய் ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஏங்கி நீ உபதேசி.
2.அந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பச் செய்.
இதை நினைவு கொண்டோர் உள்ளங்களில் அவரை அறியாது வந்த இருள்கள் நீங்கட்டும். அவர் வாழ்க்கையில்
நல்ல உணர்வுகளாக மலரட்டும். அவருடைய மூச்சும்
பேச்சும் இருள் சூழ்ந்த உலகில் இருந்து அவர்களை மீட்டி…
1.மெய் ஞானிகள் சென்றடைந்த அந்த அருள் ஒளிக் கூட்டத்துடன் இந்த உணர்வுகள் அழைத்துச் சென்று
2.அவர்கள் அனைவரும் மெய் ஞானிகளாக வளரட்டும்.
இதையெல்லாம் நீ
எண்ணும் பொழுது அந்த நிலையை நீ அடைகின்றாய். இதைக் கேட்டுணர்ந்தோரும் அதை அடைகின்றார்கள் என்றார் குருநாதர்.
இந்த வாழ்க்கையில் எவ்வளவு நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும்… பிறர் செய்யும் குறைகளைக் காணும் போது நம்மை அறியாது வேதனைப்படுகின்றோம்… வேதனைப்படச் செய்கின்றது.
யாம் சொல்லும் முறைப்படி விநாயகர் தத்துவப்படி எண்ணும் போது அந்தத் துன்பங்கள் மறைகின்றது.
விநாயகர் என்பது “நம் உடல்” வினைக்கு நாயகனாக இருக்கின்றது…. அதை நாம் பூஜிக்க வேண்டும். முன் சேர்த்துக்
கொண்ட வினைக்கு நாயகனாக மனித உடல் பெற்றாலும் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் வினையாகச் சேர்ப்பிக்க
வேண்டும்.
மெய் ஞானிகள் ஒளிச் சரீரம் பெற்றது போன்று இந்த உடலில்
வினைக்கு நாயகனாக ஒளிச் சரீரமாகப் பெறச் செய்யும்
நிலை தான் விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ளது.
1.அவர்கள் சென்ற பாதையை நீ எண்ணுவாய் என்றால் நீயும் அதுவாகின்றாய்… கேட்டுணர்வோரும் அந்த நிலை பெறுகின்றார்கள்.
2.அவர்கள் பெற வேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது அவர்களுக்கு முன்
நீ பெறுகின்றாய்.
3.உன் சொல்லைக் கேட்டுணர்ந்தவர்களும் உனக்குப் பின் அந்த நிலையில் வருகின்றனர்.
இதை எல்லாம் குருநாதர் எனக்கு உணர்த்தியது. இதைப் போன்றே நீங்களும் செயல்படுங்கள்.
பூமியில் மனிதனாகப் பிறந்த நிலையில் அருள் உணர்வுகளைப் பெற்று இருள் சூழ்ந்த நிலையிலிருந்து நீங்கி
1.உங்களுடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கச் செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்ற ஏக்கத்தில் தான்
2.இதை எல்லாம் உபதேசிக்கின்றேன் “குருநாதர் காட்டிய
அருள் வழிப்படி...”