ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 21, 2018

நம் உடலுக்குள் உருவாகும் அணுக்களின் மாற்றமும் நோய் வரக் காரணமும்


தாவர இனங்கள் தான் சுவாசித்த சத்தின் தன்மைக்கொப்ப அந்த இலையின் ரூபங்கள் அமைகின்றது. அந்த மரத்தின் அமைப்பும் இருக்கின்றது.

அதைப் போலத் தான் பல பல தாவர இனத்தின் மணத்தை நுகர்ந்து அதன் உணர்வின் சத்தை உணவாக நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்கிறோம்.

1.எப்படி நூலாம்படைப் பூச்சி தன் மலத்தை உமிழ்த்திக் கூடு கட்டுவது போல்
2.ஒரு பட்டுப் புழு தன் மலத்தை வெளிப்படுத்திக் (பட்டு நூல்) கூடுகளைக் கட்டிக் கொள்வது போல
3.நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் அதனின் மணம் அணுக்களாக மாறி
4.அதனுடைய மலமே நம் உடல் உறுப்புகளாக (கூடுகளாக) மாறுகின்றது.
5.உருவான பின் அது அது தன் தன் இனத்தை அது கவர்ந்து (சுவாசத்தின் மூலம்) வளரும்.

பல தாவர இன வித்துக்களை நாம் உருவாக்கி இருக்கின்றோம். அந்த வித்தை மண்ணிலே ஊன்றும் பொழுது அதிலே எது எது கலந்திருக்கின்றதோ அந்த உணர்வின் சத்தை அது கவர்ந்து செடியாகவும் மரமாகவும் வளர்கின்றது.

இதைப்போன்று தான் நம் உடலிலே இருக்கக்கூடிய அணுக்களும் உருவாகின்றது. நாம் சுவாசிக்கும் உணர்வுகளும் உணவாக உட்கொள்ளும் உணவுகளும் ஆவியாக மாறும் போது அதனை அந்த அணுக்கள் உணவாக எடுத்து வளர்ந்து அணுவின் மலம் உடலாகி உறுப்புகளைப் பாதுகாப்பாக வளர்க்கச் செய்கின்றது.

ஆனால் எதிர் மறையான உணர்வுகளை நாம் சுவாசிப்போம் என்றால் மாறுபட்ட அணுக்கள் நமக்குள் உற்பத்தியாகின்றது.
1.பின் அந்த நல்ல அணுக்களால் உருவான உறுப்பில் இதனுடைய மலங்களை இட்டு
2.அதைக் கரைத்துத் தன் உணவாக உட்கொள்ளத் தொடங்கி விடுகின்றது.

பயிர்களை ஆடு மாடுகள் மேய்ந்தாலும் ஆட்டையும் மாட்டையும் நரி புலி கொன்று அதனின் உடலை உணவாகப் புசிக்கின்றது. விட்டில் பூச்சிகளைக் குருவிகள் கொத்திச் சாப்பிடுகின்றது.

இதைப் போன்று தான் ஏற்கனவே சுவாசித்த நல்ல அணுக்களுக்கு எதிர் மறையாக வேறு எண்ணங்களை நாம் எண்ணி எடுத்துச் சுவாசிக்கும் பொழுது எதிர்மறையான அணுக்கள் உற்பத்தி ஆகி முதலில் உருவான நல்ல அணுக்களை விழுங்கத் தொடங்கும்.

இப்படி விழுங்கியபின் தன் மலத்தை இடப்படும் பொழுது நம் உடலிலுள்ள உறுப்புகள் மாறுபட்ட நிலைகளில் கோணலாகவும் மாணலாகவும் அல்லது சிறுக்கும் நிலையும் வந்து விடுகின்றது.

இப்படித்தான் நமது வாழ்க்கையில் பிறர் படும் கஷ்டங்களை பிறர் செய்யும் தவறுகளைக் கண்ணுற்றுப் பார்க்கப்படும் போது அதை நுகர்ந்த பின் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மறையத் தொடங்குகின்றது.

தவறு செய்யும் உணர்வுகள் நம் உடலுக்குள் சென்ற பின்
1.நம் நல்ல உணர்வுகள் அனைத்தும் செயலற்றதாக மாறி
2.நல்ல உணர்வுகளால் உடலான இந்த உடலையும் அது நலியச் செய்கின்றது.
3.நம் எண்ணமும் நலிந்து விடுகின்றது.

இவ்வாறு நம் நல்ல குணங்கள் அனைத்தும் சிறுகச் சிறுக சிறுக மறைந்து மனிதனாக உருவாக்கிய நிலையில் சீராக இயங்காது நோய்கள் உருவாகின்றது. எந்தெந்த குணத்தை நாம் அதிகரித்தோமோ அந்த குணத்திற்கொப்ப நமக்குள் நோய்கள் வருகின்றன.

பல கோடிச் சரீரங்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் முழுமையாகி மனிதனாக விளைந்து வந்தாலும் மனிதனான பின் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமையின் உணர்வுகளால் தேய் பிறையாகி நம்முடைய உணர்வுகள் தேய்ந்து கொண்டே போகிறது.

ஆனால் தேயாத நிலைகள் பெற்றவர்கள் மகரிஷிகள். அதாவது நம்மைப் போன்று மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை வென்று தீமைகளை வென்றிடும் ஆற்றல் மிக்க நிலைகளை உடல்களிலே விளைய வைத்துக் கொண்டார்கள்.

தன் உடலிலே மற்ற தீமைகள் கலந்தாலும் அது அனைத்தையும் ஒளிச் சுடராக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமான அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அதிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் சத்தை அவருக்குப் பின் வந்த மனிதர்கள் கவர்ந்து தங்கள் உடலில் விளைய வைத்துப் பூரண நிலாவாக அழியாத நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் அனைத்தும் நம் பூமியிலே படர்ந்து கொண்டுள்ளது. அந்த மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நம் உடலிலிருக்கும் அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்தால் தீமை செய்யும் அணுக்களை வலு இழக்கச் செய்யும்.

நம் உணர்வுகள் அனைத்தும் அந்த மகரிஷிகள் ஆனது போல் ஒளியாக மாறும்.