7/29/2018

சுவையற்ற பொருள்களை இணைத்துத்தான் சுவையான குழம்பைச் செய்கின்றோம் - அது போல துன்பங்களையோ துயரங்களையோ நாம் பேரின்பமாக மாற்றி அமைக்க முடியாதா…?


அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளை நாம் பார்க்க நேர்கின்றது… கேட்க நேர்கின்றது… நுகர நேருகின்றது….! அந்தச் சமயங்களில் எல்லாம் தீமையான எண்ணங்களையே நமக்குள் பெருக்கி விட்டால் தீமைகள் பெருகி தீமையின் விளைவுக்கே அழைத்துச் சென்று விடுகின்றது.

அதே போல கொடூரமான செயலை தமக்குள் வளர்த்து விட்டால் கொடூர விளைவுகளை விளைவித்து விடுகின்றது.

நாம் சமையைல் செய்யும் பொழுது பல சரக்குகளைப் போட்டுத்தான் குழம்பை வைக்கின்றோம். அதிலே போடும் பொருள்களைத் தனியாகச் சுவைத்துப் பார்த்தால்
1.உப்பு தீயதே
2.புளியும் தீயதே
3.மிளகாயும் தீயதே
4.இஞ்சியும் சுவையற்றதே
5.சீரகத்தை எடுத்துக் கொண்டாலும் அதுவும் சுவையற்றதே.

ஆனால் இவை எல்லாவற்றையும் அதற்குண்டான பக்குவ நிலைகள் கொண்டு ஒன்றாகச் சேர்த்துக் சுவையாக்கி சுவை மிக்க உணவாக நாம் மகிழ்ச்சியாக உட்கொள்கிறோம். இது எல்லோருக்கும் தெரிந்தது தான்…!

1.இப்படிப் பல சுவையற்ற பொருள்களை இணைத்துச்
2.சுவையாக உணவாக உட்கொள்ளும் நிலைகள் வருவது போன்று
3.இந்த வாழ்க்கையில் வரும் எல்லாவற்றையும் சுவைமிக்கதாக மாற்ற முடியாதா…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தத் தீமையின் நிலைகளுக்குள்  அருள் மகரிஷிகளின் உணர்வை இணைத்து அதை அடக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக வளர்த்துப் பேரின்பப் பெரு வாழ்வு வாழும் அந்தக் கல்யாணராமனாக நீங்கள் வாழ வேண்டும்.

ஒருவன் நம்மைக் கோபிப்பான் என்றால் அந்தக் கோபத்தின் நிலைகள் வாலியாகின்றது. வேதனைப்படுவோரைப் பார்த்தால் நம்மை வேதனைப்படச் செய்யும் வாலியாகின்றது. வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்தோம் என்றால் அவர்படும் வேதனை உணர்வுகளை நமக்குள் பெருக்கி விடுகின்றது. இப்படி
1.அதனதன் வலிமையை நமக்குள் காட்டத் தொடங்கி விடுகின்றது.
2.அப்பொழுது நம் நல்ல குணங்கள் எல்லாம் ஒடுங்கி விடுகின்றது.

நம் நல்ல குணங்களைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். அதற்காகத்தான் இராமாயணத்தில் சுக்ரீவனைக் காட்டுகின்றார்கள்.

தீமைகளை எல்லாம் ஒடுக்கி அதைத் தனக்குள் அரவணைத்து இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றியது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வின் ஆற்றலை நம் எண்ணத்தால் எடுத்து நம் உடலுக்குள் செலுத்தினால் அனைத்துத் தீமைகளையும் அகற்றும் நிலையாகின்றது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று
1.அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும்.
2.பேரின்ப வாழ்க்கை வாழ  வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்ற இந்த உணர்வினை வளர்த்துக் கொண்டால்
4.அதுவே நம் வாழ்க்கை பேரின்பப் பெரு வாழ்வாக அமைகின்றது.

யார் யாரையெல்லாம் நினைத்து அவர்கள் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவை அனைத்தும் நமக்குள் இணைந்து தீமையற்ற உணர்வாக நமக்குள் வளர்ந்து அந்தப் பேரின்ப பெரு வாழ்வு வாழும் உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகுகின்றது.

இதைப் போன்ற உணர்வுகளையே நாம் எண்ணிப் பெருக்குதல் வேண்டும்.. மகிழ்ச்சியை அரவணைக்கின்றோம். அப்பொழுது கல்யாணராமனாகின்றோம்…!