ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2018

முதன் முதலில் கண்கள் தோன்றிய விதம் - இருளில் மற்ற உயிரினங்களுக்குக் கண் தெரிவது எப்படி…?


மனிதனாகத் தோன்றுவதற்கு முன் கண்ணில்லாத போது எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றது...? கண்கள் எவ்வாறு தோன்றுகிறது…? நாம் எப்படி மனிதனாக வளர்ந்தோம்...? இந்த உயிர் நம்மை எப்படி இயக்கியது...? என்பதைப் பார்ப்போம்.

செடியிலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைச் (மணங்களை) சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதற்குப் பெயர் சீதாலட்சுமி என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றது காவியத் தொகுப்புகள்.

அதே சமயம் ஒரு உயிரணு அந்தச் செடியிலே வீழ்ந்தால் அந்தச் செடியின் சத்தை உயிர் நுகர்ந்து அந்த உணர்வின் அணுக்களாக மாற்றி உடலாகி ஒரு புழுவாகின்றது. சீதா என்ற அந்தச் சத்து உடலாகின்றது.

அதிலே தோன்றும் உணர்ச்சிகள் எண்ணங்களாகத் தோன்றுகின்றது. இதைத் தான் நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்ற காரணப் பெயரைச் சூட்டினார்கள் ஞானிகள். நாராயணன் என்றால் சூரியன்.

அதாவது எந்தத் தாவர இனங்களின் சத்தை உயிரணு நுகர்ந்ததோ அந்த உணர்ச்சிகள் எவ்வாறோ அதற்குத் தக்கவாறு பல விதமான உடல் அமைப்புகள் உருவாக்கியது என்ற நிலையைக் காவியத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றது.

ஒரு கடலைச் செடியின் சத்தை சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் சீதாலட்சுமியாக மாறுகின்றது. அந்தச் சுவையை வளர்த்திடும் சக்தியாக சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

ஆனால் அதை ஒரு உயிரணு நுகர்ந்தால் சீதாராமா. அந்தச் சுவையின் தன்மை கொண்டு உடலுக்குள் எண்ணங்கள் தோன்றுகின்றது.

பசியின் உந்துதல் வந்து எந்தச் செடியின் சத்து கொண்டு உடலானதோ அதே எண்ணங்கள் கொண்டு அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அந்தச் செடி இருக்கும் பக்கம் அழைத்துச் செல்கின்றது.

1.செடியின் மணத்தைச் சுவாசிக்கும் போது ஓ...ம் நமச்சிவாய…! உடலாகின்றது.
2.அந்தச் செடியின் சத்து வினையாகின்றது விநாயகா.
3.எந்தச் சத்தை நுகர்ந்ததோ மூஷிக வாகனா.
4.சுவாசித்தபின் அந்த உணர்வுகள் வாகனமாகி அந்தச் செடி இருக்கும் பக்கமாகப் புழுவை அழைத்துச் செல்கின்றது என்று
5.காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

இதன் வழிப்படி எண்ணங்கள் கொண்டு கண் இல்லாதபோது அது தன் உணவுக்காக நகர்ந்து செல்கிறது அல்லது ஊர்ந்து செல்கிறது.

ஆனால் செல்லும்போது சந்தர்ப்பத்தினால் எதிரிகளிடம் சிக்கும் போதெல்லாம் தன் உடலிலே வேதனை தாங்காது அது எந்த உயிரினம் தன்னைத் தாக்குகின்றதோ… “அதைப் பார்க்க வேண்டும்…!” என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

இப்படிப் பல சரீரங்களில் பார்க்க வேண்டும்... பார்க்க வேண்டும்...! என்ற எண்ணங்கள் தோன்றித்...தோன்றித்...தோன்றி...! தனது வாழ்க்கையில் வேறொரு உடல் பெறும் போது பல நிலைகளைக் குவித்துக் கண்களாக உருபெறுகின்றது.

1.எண்ணங்கள் முதலில் உருவாகின்றது.
2.அந்த எண்ணத்தின் துணை கொண்டு வரும் பொழுது அடுத்து
3.தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளின் ஏக்கம் வருகின்றது.
4.மற்ற எதிரிகள் தாக்கப்படும் போது அதைத் தான் பார்க்க வேண்டும் வேண்டும் என்ற உணர்வுகள் உந்தி உந்தி
5.இப்படிப் பல கோடிச் சரீரங்களை எடுக்கின்றது.

ஆரம்ப நிலையில் ஒரு இரண்டு நாளைக்கு இருக்கும். மூன்றாவது நாள் மடிந்து போகும். இப்படிப் பல நூறு சரீரங்களைக் கடந்து “பார்க்க வேண்டும்...!” என்ற உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து அந்த உடலில் கண்கள் உருபெறும் தன்மை வருகின்றது. (திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்).

சூரியனின் ஒளிக் கதிர்கள் இங்கே ஒளி வீசும் பொழுது மற்ற பொருள்களை அது காட்டுகின்றது. ஆனால்
1.கண்ணில்லாத அந்த உயிரின் துடிப்பிற்கோ பார்க்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை வரும்போது
2.மணத்தால் அறிந்தாலும்… தன் உணர்வால் அறிய வேண்டும்…! என்று
3.அதாவது (தன் பார்வையால்) பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் புதிதாகத் தோன்றுகின்றது.
4.அப்படி நுகர்ந்த உணர்வுகள் உறைந்து கண்களாக உருவாகின்றது.

அதைத்தான் துவாரகா யுகத்தில் கண்ணன் தோன்றினான் என்று சொல்வது. துவாரகா என்றால் உடல். இந்த உடலுக்குள் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் கண்ணன் பிறந்தான் என்று காவியப் படைப்பு உண்டு.

வாசுதேவன் என்றால் உயிர். தேவகி என்றால் தன் தேவைக்கு எடுத்த சக்தி. அதாவது உயிரால் சுவாசிக்கப்பட்ட உணர்வும் தன் தேவைக்கு என்று நுகருவதால் தேவகி என்பதும்
1.தேடித் தான் பார்க்க வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் இங்கே விளைந்து
2.இந்த உடலான - துவாரகா யுகத்தில் கண்ணனாகப் பிறக்கின்றான் சூரியன்.

சூரியன் உருவான பின் அதிலிருந்து பாதரசங்கள் வீசப்படும் போது மற்றொன்றோடு மோதி இந்த ஒளிர்வின் ஒளிக் கதிர்களாக வெளிப்படுகின்றது.  அதைப் போன்ற ஒளி கொண்ட கண்களாக இங்கே உருவாகின்றது.

தன் உடலிலே பெற்ற உணர்வுகள் கண்களாக உருவான பின் இந்த உணர்வின் நினைவாற்றல் மற்றொன்றைப் பார்க்கப்படும் போது எதனின் உணர்வோ அந்த ரூபத்தை தன் எதிரியையோ... தன் உணவையோ தன் இருப்பிடத்தையோ அறியும் வல்லமை பெறுகின்றது.

உதாரணமாக ஒருவர் கோபமாக இருக்கின்றார் என்றால் அதை நாம் பார்த்த பின் அந்த உணர்வுகள் நம் மீது மோதுண்டு அந்த உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது.

அதே கோப உணர்வுகள் நமக்குள் வரும் போது இருள் சூழும் நிலை வருகின்றது. சிந்திக்கும் திறனும் இழக்கின்றது.

ஆனால் ஆடு மாடுகளோ மற்ற காட்டில் வாழும் மிருகங்களோ தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சிக் கண்ணின் வழி அலைகளை வெளிப்படுத்துகின்றது.

அந்த அலைகள் எதிரிலே மோதும் நிலைகள் கொண்டு குறித்த தூரத்திற்கு அதாவது கண்ணின் உணர்வலைகள் அந்த விசை உந்தும் தன்மை எவ்வளவுக்கு ஏற்படுகின்றதோ அந்த அளவிற்கு ஒளியாகத் தெரியும்.

பாம்பு பூச்சி தேள் போன்ற உயிரினங்களுக்கும் இதைப் போன்ற மற்ற மிருகங்களுக்கும் தன் கண் பார்வையால் மோதுண்டு ஒளிகளாகி தன் பாதை வெளிச்சமாகத் தெரியும்.

ஆனால் மனிதரான நமக்குத் தெரியாது. காரணம் மனித உடலுக்குள் விஷத்தின் தன்மையைக் குறைத்து விட்டதனால் மோதினால் இணக்கப்படும் ஒளித் தன்மை நமக்குள் இழக்கப்படுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் பிறர் படும் உணர்வின் தன்மை நம்மிடம் மோதும்போது உணர்ச்சியால் உந்தி அதை அறியும் ஆற்றல் நமக்குள் பெறுகின்றது.

1.ஒரு எண்ணம் நமக்குள் மோதினால் அந்த மோதலின் உணர்வின் தன்மை கொண்டு
2.அவன் என்ன செய்கின்றான்..? குற்றம் செய்கின்றானா...? குற்றமற்ற நிலையாக இருக்கின்றதா...? என்று
3.அந்த உணர்வின் செயலாக்கங்களை நாம் உணர முடிகின்றது.
4.ஆகவே மனிதன் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன்.

அதே கண்களின் துணை கொண்டு எட்டாத தூரத்தில் இருக்கும் விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து தான் நம்மைப் போன்ற மனிதர்களாக இருந்தவர்கள் ஒளியாக மாறி இன்று சப்தரிஷி மண்டலமாக அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய எல்லை அது தான்…!