ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2018

பழனி மலையில் முருகனின் காட்சி கிடைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி…!


அருள் ஞானம் பெற வேண்டும் என்பதற்காக வேண்டி முருகன் கோவிலில் வைத்து என்னைப் (ஞானகுரு) பரீட்சித்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

முருகன் உனக்குத் தரிசனம் தருவார்…! அப்பொழுது எனக்குச் செல்வம் வர வேண்டும். செல்வாக்கு வர வேண்டும். சொல்வாக்கு வர வேண்டும். என்று நீ முருகனிடம் கேள்...! என்றார் குருநாதர்.

ஏனென்றால் அவர் எந்தெந்த வகையில் எல்லாம் என்னைத் தூண்டிப் பார்த்தார் என்று எனக்கும் (ஞானகுரு) தெரியும். அப்புறம் அங்கே போய் முருகன் காட்சி கொடுத்த உடனே… “பார்த்ததும் எனக்குப் பயமாகிவிட்டது…!”

முருகனே காட்சி கொடுக்கிறார்; நாம் ஏதாவது தப்பாகக் கேட்டு விட்டால் நரகலோகம் தான் போக வேண்டியதிருக்கும்… என்ற இந்தப் பயம் வந்துவிட்டது.

ஏனென்றால் குருநாதர் எனக்கு ஏற்கனவே கெட்டது எது...? நல்லது எது...? என்று காட்டினார். ஆசை உணர்வு வரப்போகும் போது உனக்குள் கெட்டது எப்படி சூழுகிறது... பார்...! என்று உபதேசமே செய்திருக்கின்றார் குருநாதர். 

யாராவது குற்றம் செய்தார்கள்...! என்றால் இரு நான் உன்னைப் பார்க்கிறேன்டா...!  என்ற அகந்தை தான் வருகின்றது. (என்) குருநாதர் எனக்கு எவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்திருக்கின்றார்...!

நீ என்னை எதிர்க்கின்றாயா...? உன்னை ஒரு கை பார்க்கிறேன்…! என்று இந்த அழிக்கும் உணர்வை எனக்குள் எடுத்துக் கொண்டால் குருநாதர் கொடுத்த சக்தியை நான் அழித்து விடுவேன்….!

இதைப் பரீட்சிப்பதற்கே அன்று குருநாதர் முருகனைப் பார்க்கச் சொன்னார்.

பழனி மலையில் முருகன் எனக்குக் காட்சி கொடுத்தவுடனே அவரிடம் நான் என்ன கேட்டேன்...?

1.நான் நல்லதைச் செய்ய வேண்டும்
2.என்னால் மற்றவர்களுக்கு நல்லது தான் உருவாக வேண்டும்
3.ஆனால் என்னை அறியாது தீமைகள் வந்தால் அதை வராது தடுக்கும் சக்தி உங்களிடம் தான் இருக்கின்றது... தீமைகள் செய்தால் அதைத் தடுத்து நல்லதாகத் தான் ஆக்க வேண்டும். (ஏனென்றால் அது எனக்குத் தெரியாது)

நான் படிக்காதவன். சக்தியை உணராதவன். என்னை வழி நடத்திச் செல்வது உங்களுடைய சக்தியாகத் தான் இருக்க வேண்டும் என்று இதைத்தான் கேட்டேன். குருநாதர் கேட்கச் சொன்ன செல்வத்தையும் செல்வாக்கையும் நான் கேட்க மறந்து விட்டேன்.

அங்கிருந்து கீழே படியில் இறங்கி வரப்படும் போது சில அற்புதங்கள் நடக்கின்றது.

எங்கேயோ வெளியூரிலிருந்து பழனிக்கு வருகின்றார்கள். அவர்கள் செல்வந்தர்கள் போலிருக்கின்றது. ஒரு அழகான பெண் அது உடலில் எத்தனையோ தாயத்துகளை எல்லாம் போட்டு வைத்துள்ளார்கள்.

மேலே மலைக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் ஒன்றாவது படிக்கு மேல் அந்த பெண்ணால் ஏற முடியவில்லை.

அந்த பெண் முருனைப் “பேய்” என்று பேசுகின்றது. அந்தப் பேயை எவன் போய்ப் பார்ப்பான்...? என்று அகந்தை பிடித்துப் பேசுகிறது. மேலே அழைத்துச் செல்வதற்காக வேண்டி என்னென்னமோ வேலை செய்கிறார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

நாம் மேலிருந்து வரப்படும் போது என் பார்வை அந்தப் பெண் மீது படுகின்றது. அங்கே மேலிருந்து கொண்டு வந்த விபூதியை அந்தப் பெண் மீது போட்டுவிட்டு நான் கீழே இறங்கிவிட்டேன்.

பார்த்தால் முருகா...! என்று அந்தப் பெண் சொல்லிக் கிடு…கிடு… என்று மேலே ஏறி ஓடுகிறது. தாயத்தெல்லாம் அறுந்து கீழே விழுகின்றது.

கூட வந்தவர்களில் ஒருவன் ஓடி வந்து என்னைப் பிடித்துக் கொண்டான். இங்கே முருகனே வந்துவிட்டான்…! என்று என்னைத் துரத்துகிறான். மாற்று ரூபத்தில் வந்திருக்கின்றான்… என்று சொல்லி “என்னை விட மாட்டேன்” என்கிறான். முருகா… முருகா…! என்று என்னைச் சுற்றுகின்றான்.


அட...! நான் முருகன் இல்லை...! மேலிருந்து கொண்டு வந்த விபூதியைத்தான் இங்கே போட்டேன் என்று சொன்னால் நம்புகிறார்களா என்றால் இல்லை. அப்புறம் சமாளித்துக் கொண்டு வந்துவிட்டேன். இப்படிச் சந்தோஷமான நிலையில் கீழே இறங்கி வருகிறேன்.

ஆனால் பழனி பஸ் நிலையம் அருகே நான் வந்தவுடன் குருநாதர் என்னை என்ன செய்தார் தெரியுமா...?

ஏற்கனவே பழனி கோவிலில் உள்ள யானைக்கு அருகில் என்னை அழைத்துச் சென்று இந்த யானைக்குப் பலமா…? எனக்குப் பலமா...? என்று கேட்டுவிட்டு யானை தும்பிக்கையைப் பிடித்து அலற வைத்தவர் குருநாதர்.

என்னை உதைத்தால் எப்படி இருக்கும்…? உதைத்துச் சட்டை வேஷ்டி எல்லாம் கிழித்து அடி.. அடி… என்று பிய்த்துவிட்டார்…!

அருகில் இருக்கும் என்னுடைய நண்பர்கள் ரொம்பப் பேர் வந்து இந்தக் கிழவனுக்குப் (குருநாதர்) பைத்தியம் அதிமாகிவிட்டது. பைத்தியத்தை அடிடா...! என்று அடிக்க வருகின்றார்கள்.

நான் அவர்களைத் தடுத்து நிறுத்தி “அவர் என்னைத் தான் அடிக்கிறார். நீங்கள் எல்லோரும் பேசாமல் இருங்கள்…!” என்று சொன்னேன்.  என்ன நைனா...? இப்படிச் சொல்கிறீர்கள்...! என்று எல்லோரும் கேட்கிறார்கள்.

ஏனென்றால் குருநாதருக்கும் எனக்கும் தான் இந்த இரகசியம் எல்லாம் தெரியும். அங்கே என்ன நடந்தது...? அவர் எதனால் அப்படிச் செயல்பட்டார் என்று...!

அங்கிருந்து தர...தர...! என்று திண்டுக்கல் ரோட்டிற்கு இழுத்துக் கொண்டு போனார். ஸ்கூலுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி கட்டியிருக்கிறார்கள். அதில் ஆள் இல்லாத இடமாகக் கூட்டிக் கொண்டு போனார்.

செல்வமும் செல்வாக்கும் சொல்வாக்கும் வேண்டும் என்று தானே முருகனிடம் உன்னைக் கேட்கச் சொன்னேன். என்னைப் பாருடா...! என்னிடம் செல்வம் இல்லை... ஆனால் எல்லாச் சக்தியும் இருக்கின்றது….! என்னை எவண்டா மதிக்கிறான்...? என்று இப்படியே கேட்கிறார்.

பணமும் செல்வமும் செல்வாக்கும் இருந்தால் தான்டா நீ வாழ முடியும். அப்பொழுதுதான் நான் கொடுத்த சக்தியை நீ எல்லோருக்கும் பரப்ப முடியும். செல்வம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாதுடா...! முருகனிடம் இதைக் கேட்டால் தானே கிடைக்கும் என்கிறார்.

இதற்கு நீங்கள் என்ன விடை சொல்வீர்கள்...?

அப்போது தான் நான் சொன்னேன்…! உங்கள் சக்தியால் நான் முருகனைப் பார்க்க முடிந்தது. ஆனால் நான் ஏதாவது தவறு செய்திருந்தால் கிடைத்தது எல்லாம் மறைந்து போய்விடுமே…! என்று சொன்னேன்.
1.ஆகையினால் குருவாக இருந்து முருகனை நீங்கள் காட்டியதே எனக்குப் போதுமானது
2.அதையே பெரிய செல்வமாக நான் நினைக்கின்றேன்
3.நான் ஏதாவது தவறாக நடந்தால் நீங்கள் தான் திருத்த வேண்டுமே தவிர நான் தவறைத் தெரிந்து செய்வதில்லை
4.என்னையறியாது தவறு வந்தாலும் அதைக் காப்பாற்றுவது நீங்களாகத் தான் இருக்க வேண்டும்
5.எனக்கு இந்த “ஞானச் செல்வமே போதும் சாமி…! என்றேன்.

அப்போது தான் இதைக் கேட்டுவிட்டுக் குருநாதர் “சிரிக்கிறார்… சிரிக்கிறார்… அளவு கடந்து சிரிக்கிறார்…!” ஏனென்றால் குருநாதர் எனக்குச் சாதாரண நிலைகளில் சக்தியைக் கொடுக்கவில்லை. “ஆட்டிப் படைத்தே… கொடுத்தார்…!”

இதைப் போன்று சிலருடைய நிலைகளில் குரு அருளைப் பாய்ச்சினாலும் அதிலே தப்பிப் பிழைத்தவர்கள் சிலரே.
1.எல்லாம் கிடைத்து விட்டது என்று ஓடியவர் பலர்.
2.எல்லாம் தெரிந்து விட்டது என்று ஓடி விட்டார்கள் பலர்.
3.அதைப் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வுடன் இருப்போர் இங்கே சிலர் தான்
4.அன்று அங்கே பலராக இருந்தோம்… இன்று சிலரே இருக்கின்றோம்.

ஆனால் எப்படியும் அருள் ஞானச் செல்வத்தைப் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வு உள்ளோர் நிச்சயம் பெறுவீர்கள். நீங்கள் அதைப் பெற வேண்டும் என்பது தான் என்னுடைய தவமே…!

அப்புறம் குருநாதர் என்ன செய்தார்…? கடைக்குக் கூப்பிட்டுப் போய் பேண்ட் சூட் எல்லாம் வாங்கிப் போட்டுக் கொள்ளடா என்றார். எனக்கு அதெல்லாம் வேண்டாம் சாமி என்றேன்…!

இப்படி நான் சொன்னதற்காக லட்டும் ஜிலேபியும் வாங்கிக் கொடுத்து
1.உன்னுடைய வாழ்க்கை இனிக்கும்.
2.உன் தொழில் இனிக்கும்.
3.இதைக் கேட்போர் உணர்வுகள் அவர்கள் வாழ்க்கையும் இனிக்கும் என்று இப்படிச் சொல்லி எனக்கு வாக்குக் கொடுத்தார்.

குருநாதர் எனக்குக் கொடுத்த மாதிரி உங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று சில நேரம் ஒரு வேகத்தில்… விபூதியோ சில பதார்த்தங்களையோ யாம் கொடுத்தால் “வேண்டாம்” என்று சொல்கிறார்கள்.

இப்பொழுது தானே கொடுத்தீர்கள்…! என்று சொல்கின்றனர். ஒரு நல்லதை நினைத்துக் கொடுக்கிறோம். வேண்டாம்..! என்கிறார்கள். ஏனென்றால்
1.மக்களுடைய நிலைகள் இது அவர்கள் தவறல்ல
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அவரை எங்கோ அழைத்துச் செல்கின்றது
3.அதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற உணர்வை உனக்குள் வளர்த்துக் கொள்
3.எவரையும் குற்றவாளியாக நீ எண்ணாதே…!
4.குறைகளிலிருந்து மீட்டும் நிலைகளே உன்னுள் இருக்க வேண்டுமே தவிர அவர்களை இழிவுபடுத்தும் நிலைக்கு நீ செல்லாதே…! பழித்துப் பேசாதே…!
5.ஆனால் குறையின் நிலைகளைத் தெளிவாக்கு என்று சொல்லி
6.அதற்காக லட்டையும் ஜிலேபியையும் கொடுத்து உபதேசம் கொடுக்கின்றார்.

குருநாதர் என்னை எந்த வழியில் எல்லாம் ஞானத்தைக் கொடுத்தார் என்றால்…
1.ஒரு நேரத்தில் இனிப்பு வருகிறது
2.ஒரு நாளைக்கு அடியும் உதையும் வருகிறது
3.ஒரு நாளைக்குச் சாப்பாடு கூட இல்லாமல் வேதனைப் பட வேண்டியுள்ளது.
4.இத்தனையும் மாறி மாறி மாறி மாறி மாறி மாறிக் கொடுத்துத் தான் ஞானத்தின் உணர்வின் தன்மையைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வந்தார்.

ஏனென்றால் அனுபவ ரீதியாக குருநாதர் கொடுத்த பல நிலைகளை எனக்குள் பதிவு செய்திருப்பதால் அவ்வப்போது அவருடைய உபதேசத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

நான் பேசுகிறேன் என்று யாரும் எண்ணவே வேண்டாம்…! ஒலி/ஒளி நாடாக்களில் பதிவு செய்ததை அலைகளாகப் பரப்பப்படும்போது அவரவர்கள் வீட்டில் டி.வி,யில் வைத்து நேரடியாகப் பார்க்கின்றீர்கள் அல்லவா…! அதைப் போலத் தான்
1.குருநாதர் எனக்குள் பதிவு செய்தார்
2.பதிவின் செயலை விண்ணிலே இருந்து இன்றும் இயக்குகின்றார்…!
3.அவர் காட்டிய வழிகளை நாம் நினைவு கொண்டு பெற்றால்
4.அவருடன் அரவணைப்பாக நாம் போய் நாம் இணையலாம்.
5.அவர் வழியில் சென்றால் தான் நாம் இணைய முடியும்…! (இது முக்கியம்)