ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 26, 2018

சைவம் எது...? அசைவம் எது...?


தாவர இனங்கள் “சைவமாக” இருக்கின்றது. அதன் மணத்தை உயிரணுக்கள் நுகர்ந்தால் அசைவ சக்தியாக “அசைவமாக” மாறுகின்றது.

1.எதை நுகர்ந்து
2.அந்த உணர்வின் சத்து அணுவாகி உயிருடன் ஒன்றியதோ
3.நகர்ந்து சென்று தன் இரையைத் தேடும் சக்தி பெறுவதால் அசைவமாகின்றது.

அதனால் தான் “சைவம்... அசைவம்...!” என்று இவ்வாறு கூறுகின்றார்கள்.

இதன் அடிப்படையில் தான் செடியின் சத்தை நுகரும் உயிரணுக்கள் புழுவாக மாறுகின்றது. அந்தந்தச் செடிகளின் மணத்தின் குணத்திற்கொப்ப... உணர்வின் இயக்கத்திற்கொப்ப அதிலே உருவாகும் புழுவின் ரூபங்களும் மாறும்... குணங்களும் மாறும்...!

ஒரு விஷச் செடியின் சத்தை அந்த உயிரணு நுகர்ந்தால் அது விஷப் புழுவாக மாறுகின்றது.

இவ்வாறு வளர்ச்சி அடைந்து அது வந்தாலும் விஷச் செடியை நுகர்ந்து உடலாக உருவாகி இருந்தால் அதன் மணத்தை நுகர்ந்து அதனின் எண்ணத்தின் உணர்வாக விஷச் செடியின் பக்கம் நகர்ந்து சென்று தன் உணவைத் தேடிக் கொள்ளும்.

இப்படி உயிரணு தான் நுகர்ந்து எடுத்து வரும் போது நுகர்ந்த மணத்தின் எண்ணங்களால் இயக்கப்படுகின்றது. ஆனால்
1எதிர் மறையான உணர்வின் மணங்கள் தனக்குள் வந்தால்
2.“வேண்டாம்...! என்ற எண்ணங்கள் தோன்றி
3.அந்த உணர்வுகள் உணர்ச்சியாகிப் புழுவை விலகிச் செல்லும்படிச் செய்கின்றது.

அதாவது விஷச் செடியில் உருவான புழு விஷமல்லாத மற்ற செடிகளின் சத்தை நுகரப்படும் போது “இது வேண்டாம்...!” என்று ஒதுங்கிச் செல்லுகின்றது.

இருந்தாலும் விஷச் செடியால் வளர்ந்த அந்தப் புழு விஷத்தை உமிழ்த்தி அது யாரைத் தீண்டினாலும் விஷத்தின் தன்மை அங்கேயும் உருவாகும்.

ஆனால் அந்தப் புழுவின் சந்தர்ப்பம் விஷமல்லாத செடிகளின் சத்தை அது பலமுறை நுகர நுகர அதனின் விஷத்தின் தன்மையும் குறையும்.
1.விஷத்தின் தன்மை கொண்டு உடலை உருவாக்கிய இந்த அணுக்கள்
2.விஷமில்லாத தாவர இனங்களின் சத்தை நுகர நுகர விஷத்தின் தன்மை குறையக் குறைய
3.உடல் நலிந்து உடலை விட்டு உயிர் நீங்கிவிடும்.

ஆனால் விஷமில்லாத செடியில் ஒரு உயிரணு பட்ட பின் அந்த உணர்வின் சத்தை அது நுகர்ந்து விஷமற்ற உடலாகப் பெற்று ஒரு புழுவாக உருவாகின்றது.

 அதனின் வளர்ச்சியில் தன் எண்ணம் கொண்டு இரை தேடச் செல்லும் போது சந்தர்ப்பத்தால் ஒரு விஷச் செடியின் சத்தை அது நுகர்ந்து விட்டால் அதனின் உடலில் விஷ அணுக்கள் உருவாகி விடுகின்றது.

அப்படி உருவான பின் அந்த உடலை உருவாக்கிய விஷமற்ற அணுக்களைக் கொன்று அதைச் செயலிழக்கச் செய்து அந்தப் புழு மடிகின்றது.

விஷமான அணுக்கள் அந்தப் புழுவின் உடலில் விளைந்தபின் மீண்டும் அடுத்த உடல் பெறும் பொழுது விஷ அணுக்கள் அதிகமாகி விஷமில்லாத செடியில் வளர்ந்த புழுக்களை இது கொன்று புசிக்கத் தொடங்கி விடும்.

தாவர இன சத்தை உட் கொண்ட புழுவே பரிணாம வளர்ச்சியில் அசைவமாக அதாவது சாந்தமாக இருக்கும் மற்ற புழுக்களைக் கொல்கிறது.

இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.
1.ஒன்றுக்குள் ஒன்று ஆகி ஒன்றுடன் ஒன்று கலந்து
2.இப்படி மாறி மாறி மாறித்தான் நாம் வளர்ந்து மனிதனாக வந்துள்ளோம்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்தான்... தன்னை அறிந்தான்... அகத்தை அறிந்தான்... ஒளியாக மாறித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்த அகஸ்தியன் அறிந்துணர்ந்த இயற்கையின் இயக்கத்தின் உண்மையின் நிலைகளை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.