ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2018

சொன்ன உபதேசத்தையே திரும்பத் திரும்ப சாமி (ஞானகுரு) சொல்கிறார் என்று எண்ணுவார்கள் – ஏன்...?


சாதாரணமாக நாம் காய்கறிகள் நறுக்கினால் கையைச் சும்மா கழுவி விடுகின்றோம். அதிகமான அசுத்தமான பொருளைத் தொட்ட பின் நாற்றம் வருகின்றது என்றால் சோப்பைப் போட்டு கழுவி விடுகின்றோம்.

அதே சமயத்தில் விஷமான பூச்சி மருந்துகளையோ மற்ற கெமிக்கல்களையோ பயன்படுத்தினால் அதைக் காட்டிலும் சாணம் ஏதாவது போட்டுத் துடைத்து விட்டு அதன் பிறகு சோப்பைப் போட்டுக் கழுவி விடுகின்றோம்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாகக் கழுவுகின்றோம் அல்லவா..! அதற்கப்புறம் தான் நாம் சாப்பிடுகின்றோம்.

அதைப் போன்று தான் இன்றைய தினசரி வாழ்க்கையில்
1.ஒரு பக்கம் போனவுடனே சந்தோசமாகக் கேட்கின்றீர்கள்.
2.மறு பக்கம் போனால் கோபமாகக் கேட்கின்றீர்கள்.
3.இன்னொரு பக்கம் போனால் வேதனையான வார்த்தைகளைக் கேட்கின்றீர்கள்.
4.இன்னொரு பக்கம் வேதனையாக நடக்கும் செயல்களைப் பார்க்கின்றீர்கள்.
5.அதையெல்லாமே நுகர வேண்டியதிருக்கின்றது நுகர்கின்றீர்கள்.

அந்த உணர்வுகள் நம் உடலில் சேர்கின்றது. உடலில் நாம் சேர்த்தவுடனேயே ஒவ்வொன்றும் நம் உடலில் தீய விளைவுகளாகச் சேர்கின்றது. அதையெல்லாம் நாம் துடைக்க முடிகின்றதோ...?

என்னுடைய (ஞானகுரு) உபதேசத்தைக் கேட்டுப் பழகியவர்களுக்கு சொல்வதையே அடிக்கடி சொல்கின்றேன் என்று தோன்றும். புதிதாகப் படிப்பவர்களுக்கு “ஆகா…!” என்று ஒரு அதிசயத்தை உண்டாக்கும்.

இரண்டாவது தரம் சொல்லப்படும் போது சாமி சொன்னதை ஏற்கனவே கேட்டோம், இன்றைக்கும் மீண்டும் “அதைத்தான் சொல்கிறார்...!” என்ற எண்ணம் வரும்.

ஆனாலும் ஒரு தடவை அதை எண்ணி உங்கள் உடலில் பதிவு செய்தாலும் சாமி என்ன சொன்னார்...? என்று திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.

ஆனால் மீண்டும் சொல்லும் போது உங்கள் நினைவிற்கு வரும். அந்த நினைவின் படி நன்றாகப் பதிவாக வேண்டும் என்று எண்ணினால் உங்கள் உடலுக்குள் விளையும்.
1.ஆனால் நேற்றுச் சொன்னது தானே... “ஹூம்....!” என்று
2.சாதாரணமாகச் சொல்லி விட்டு விட்டால்
அது வளர்ச்சி பெறும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.

நீங்கள் செடிக்கு நேற்று உரம் போட்டீர்கள். நேற்றைக்கு உரம் போட்டது தானே என்ற வகையில் அந்தச் செடி அந்த உரத்தை ஏற்றுக் கொள்ளாது இருந்தால் செடி வளர்ச்சி ஆகுமா...?

ஏனென்றால் அந்தச் செடி நன்றாக வளர வேண்டும் என்றால் அவ்வப்பொழுது அதற்குகந்த சத்தைக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் மகசூல் காண முடியாது. வளர்ச்சி குறைந்துவிடும்.

அதைப் போல நீங்கள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஒரு தரம் வித்தானாலும் அந்த உணர்வின் சத்துக்குள் நினைவுபடுத்தி அந்த உணர்வைத் தூண்டச் செய்ய வேண்டும்.

அந்தத் தூண்டுதலான உணர்வுகள் கொண்டு உங்களுக்குள் அதை விளைய வைக்க வேண்டும். அதற்காகத்தான் யாம் திரும்பத் திரும்பச் சொல்வது.

இராமாயணக் காவியத்தைக் கதையாகச் சொல்லும் போது நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுதும் அதே கதையைத் தான் சொன்னார்கள். ஆனால் இன்றைக்கும் அதே கதையாகத் தான் சொல்கின்றார்கள்.

முதலிலேயே இராமயாணத்தைச் சொல்லியாயிற்று...! அதே கதையைத் திரும்ப எதற்காகச் சொல்ல வேண்டும்...? என்று யாராவது சொல்லாமல் இருக்கின்றார்களா...? அல்லது கேட்காமல் விட்டார்களா...?

முன்பெல்லாம் இராமயாணமோ மகாபாரதமோ பெரியவர்கள் சொன்ன கதையோ அல்லது வாழ்க்கையில் ஒருவன் கெட்டுப் போன நிலைகளிலிருந்து எப்படி மீட்டுக் கொண்டான் என்று கிராமப்புறங்களில் ஒரு கதையாகச் சொல்லி நல்ல உணர்வுகளையும் நல்ல உணர்ச்சிகளையும் பதிவு செய்தார்கள். விடிய விடிய உட்கார்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள்.

இப்போது கிராமப்புறங்களில் இராமயாணத்தை யாரவது கதை சொன்னால் பொழுது போகாமல் வேலையற்றுப் போய் உட்கார்ந்து கொண்டிக்கின்றார்கள் என்று நாம் சொல்கிறோம். அதைப் பார்க்கும் போது வெறுப்பு வருகின்றது.

இன்று கோவிலில் விழாவோ மற்றதுகளோ வைத்தார்கள் என்றால் அதிலே கரகாட்டமும் ஆட்டமும் பாட்டும் வரும். அந்தக் கரகாட்டத்தை வைத்து விடிய விடிய கொச்சை கொச்சையாகப் ஆடுவதும் பாடுவதும் வேடிக்கை பார்ப்பதும் இதுதான் பொழுது போக்கு.

அதே சமயத்தில் இங்கே டி.வி.யைப் போட்டு உட்கார்ந்தால்  “டமார்… டுமார்…!” என்று சத்தம் போட்டு இங்கே பாட்டு கேட்டதென்றால் உடனே என்ன இங்கே வந்து விடுவார்கள்.

பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த டி.வி.யில் ஏதாவது கொஞ்சம் தகராறு ஆகி கொஞ்சம் படம் “கர்...புர்...” என்று இருந்தால் அந்த டி.வில் வைத்திருப்பவரைப் பார்த்து “ஏனய்யா...! நீ டி.வி.யா வைத்திருக்கிறாய்...?“ என்று உதைக்கவே போய்விடுவார்கள்.

அந்த அளவுக்கு இன்றைய மனிதர்களின் உணர்ச்சியின் வேகம் இருக்கின்றது. மனிதனுடைய வேகத் துடிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி விட்டது.

1.அதையெல்லாம் மடக்கிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான்
2.நீங்கள் எல்லோரும் அந்த மகா ஞானிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்பதற்காக வேண்டித்தான்
3.இத்தனை தடவை திருப்பித் திருப்பி திருப்பித் திருப்பிச் சொல்கின்றேன்.