ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2018

“துறவறம்...!” என்று சொல்லும் இன்றைய மகான்களின் உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்...!


1.என் குடும்பத்தில் நான் பற்று இல்லாமல் போய் விட்டேன்.
2.நான் தெய்வ பக்தியாக இருக்கின்றேன்.
3.குழந்தைகள் மேலே ஆசை இல்லை. சொத்து மேல் ஆசை இல்லை
4.எனக்கு எந்த ஆசையுமே இல்லை...!
5.எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்துவிட்டேன் நான் சாமியார்... மகான்.. என்றெல்லாம் சொல்வார்கள்.

இவ்வாறு சொல்லி வீட்டை விட்டு வந்ததும் மற்றவர்கள் இவரை அணுகி என்ன சொல்வார்கள்...?

ஐயா நீங்கள் பெரிய மகான்...! எங்கள் குடும்பத்தில் இப்படி எல்லாம் பல கஷ்டங்கள் இருக்கிறது. நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி இவர் புகழைப் பாடுவார்கள்.

இந்த மகான் என்ன சொல்வார்...! ஆ...! அப்படியாப்பா...! உன்னை ஆண்டவன் ரட்சிப்பான்...! என்பார். இதைக் கேட்டறிந்து கொள்கிறோம்.

அங்கே மனைவி மக்களை எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் துறந்துவிட்டு வந்து விட்டோம் என்கிறார்கள்.
1.ஆனால் இங்கே துறவறம் இல்லை.
2.மற்றவர்கள் இவரை மகான் என்று போற்றியதும்
3.அவர்கள் கஷ்டங்களை நிவர்த்தி செய்கிறேன் என்ற பேரில் “பற்று வைத்துக் கொள்வார்கள்...!”

இப்படிப்பட்ட பற்று வைத்தபின் ஒரு பத்து பேர் இதே மாதிரிச் சொன்னால் போதும். அந்த பத்து பேரும் இந்த மகான் எனக்கு நல்ல ஆசீர்வாதம் செய்தார் என்பார்கள்.

இப்படித் தேடிப் பல பேர் கூட்டமாக வந்தபின் இதையெல்லாம் இவர் பற்றிக் கொள்வார். ஆனால் இங்கே அவர் (மகான்) வீட்டில் என்ன செய்வார்கள்...?

பாவி...! என்னை இந்த மாதிரித் தனியாக விட்டு விட்டுப் போய்விட்டாரே...! அவருடைய உணர்வு குடும்பத்தில் உள்ளோரிடம் இப்படி இருக்கும்.

அங்கே மகானாக இருக்கின்றார். ஆனால் எங்களுக்குக் கஷ்டமாக  இருக்கின்றதே..! கஷ்டமாக இருக்கின்றதே...! என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வேதனையைச் சொல்வார்கள். இந்த மாதிரி மகான்களுடைய நிலை எல்லாம் இப்படித்தான்...!

ஆக... தன் குடும்பத்தின் மீது பற்று இல்லை எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் என்று சொல்லி
1.மற்றவர்கள் மீது பல விதமான பற்றையும் ஆசைகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
2.இது அல்ல துறவறம்...!

இப்பொழுது புதிது புதிதாக நிறையப் பேர் கடவுள் என்று சொல்லிக் கொண்டு வருகின்றனர் நான் கல்கி அவதாரமாக வருகின்றேன் என்கிறார்கள். நான் தான் அந்தக் காலத்தில் இந்த முனிவர் என்று சொல்லிக் கொண்டு வருகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

இன்றைக்கு நிறைய பேர் கடவுளாகிக் கொண்டு வருகின்றனர் என்றால் இதற்குக் காரணம் என்ன...?
சாமானிய மக்களாகி நாம்
1.இந்தக் கடவுள் கொடுக்க மாட்டாரா...?
2.அந்தக் கடவுள் கொடுக்க மாட்டாரா...? என்று தேடிக்கொண்டு இருக்கின்றோம்.
3.அதை அவர்கள் (மகான் என்று சொல்பவர்கள்) பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் யாம் (ஞானகுரு) சொல்வது
1.உங்களுக்குள் அத்தனை பெரிய சக்தி இருக்கின்றது
2.உங்கள் உயிர் தான் கடவுள் (இயக்கும் சக்தி உருவாக்கும் சக்தி)
2.உங்களை நம்பிப் பழகுங்கள் என்று சொல்கின்றோம்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைத்தான் நம்பச் சொன்னார். என்னை நம்பி இந்த உடலை உயர்ந்த பாத்திரமாக்க வேண்டும் என்று சொன்னார்.

அந்த மெய் ஞானிகளினுடைய உணர்வுகளை நீ எடுத்து உன் உடலுக்குள் சேர்க்க வேண்டும். நீ எடுத்தால் மட்டும் பத்தாது.

அந்த மகரிஷியின் அருள் சக்தி மக்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும். அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் அனைவரும் மெய்ப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணு...! அதை எண்ணி எண்ணி நீ அதுவாகு.

குருநாதர் அதைத் தான் எம்மிடம் சொன்னார்.

ஏனென்றால் இந்த உலகில் யாரும் தவறு செய்து வரவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வும் ஈகை இரக்கம் பண்பு பரிவு என்ற இயக்க உணர்வால் பெற்றது தான் அறியாது புகும் தீமைகளும் துன்பங்களும்...!

அறியாதபடி அதை நுகர்ந்தோம். அதனால் நமது பண்புகள் அழிந்தது. நாம் தவறு செய்ய வில்லை.

 நம் மேலே போட்டிருக்கும் நல்ல துணியில் அழுக்குப் பட்டது என்று துவைக்காமல் விட்டால் என்ன செய்யும்...? கூடக் கொஞ்சம் அழுக்காகிப் போகும்.

மிகவும் அழுக்காக விட்டால் அதற்கப்புறம் அதில் சோப்பைப் போட்டுத் துவைத்தால் துணியே கிழிந்து போகும்.

நல்ல துணியாகத்தான் நான் போட்டிருந்தேன். ஆனால் இந்த மாதிரிக் கிழிந்துவிட்டது என்று சோப்பு மேலே குறை சொல்வதா...? இல்லை அதிகமாக அழுக்காகி விட்டது என்று அதைக் கேட்பதா...?

ரொம்பவும் அழுக்காகி விட்டால் சில காரமான கெமிக்கலை வைத்து அதைச் சுத்தப்படுத்தலாம் (BLEACHING) என்று முயற்சி செய்வோம். அந்த மாதிரிச் செய்த பின் துணியில் உள்ள வலுவைப் பூராம் அது சாப்பிட்டு விடுகின்றது. துனி வெளுத்து விடுகின்றது.

புறத்திலே உபயோகப்படுத்தும் ஒரு பொருளுக்கே இப்படி என்றால் நம் அகத்துக்குள் (உடலுக்குள்) நம்மை அறியாது வரக்கூடிய தீமைகளைப் போக்க வேண்டும் என்றால் அதை அவ்வப்பொழுது உடனுக்குடன் தூய்மைப்படுத்த வேண்டுமா இல்லையா...?

நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் முறைகளையெல்லாம் அன்று வாழ்ந்த நம் முன்னோர்களும் ஞானிகளும் அருள் நெறிகளாகக் காட்டியிருந்தாலும் எல்லாம் காலத்தால் மறைந்து விட்டது. இது யாருடைய குறையும் இல்லை. யாரும் தவறு செய்யவில்லை.

இந்த உலகில் உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி அடைந்து மனிதன் அடுத்து ஞானியாகும் முறையை நமக்குக் காட்டி இருந்தாலும் சந்தர்ப்பத்தால் இத்தகைய நிலைகள் மாறிவிட்டது.

குருநாதர் இதை எமக்குத் தெளிவாக உணர்த்தி அந்த மறைந்த நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல். அவர்களையும் அந்த மகா ஞானிகளின் அருளாற்றலைப் பெறச் செய்...! என்று சொன்னார்.

அவர் இட்ட கட்டளைப்படித்தான் இதைச் செய்து கொணடிருக்கின்றோம்.