ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2018

நம் ஆன்மா ஒரு கண்ணாடி போன்றது தான் – அவ்வப்பொழுது சுத்தம் செய்யவில்லை என்றால் நல்லதைக் காண முடியாது…! நல்லதை இயக்க முடியாது…!


பூமியில் பல வித்துகளை ஊன்றினாலும் அந்த வித்துகள் அனைத்தும் அதனதன் சத்து கொண்டு காற்றிலிருக்கும் தன் இனமான சத்தைக் கவர்ந்து செடியாக வளர்ச்சியாகி அதனதன் வித்துக்களை மீண்டும் உருவாக்குகின்றது.

அதைப் போன்று தான் பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு சரீரத்திலும் தப்பித்துக் கொள்ளும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து சரீரத்தைக் காத்திடும் உறுப்புகளாக உருவாகி இன்று நாம் மனிதனாக வந்திருக்கின்றோம்.

அப்படி உயர்ந்த உணர்வுகள் கொண்டு மனிதனான பின் பிறர் படும் துயரத்தைப் பார்த்த பின் நம் உடலுக்குள் இருக்கும் தெளிந்த உணர்வுகள் மனிதனைக் காத்திடும் நல்ல குணங்கள் அனைத்தும் என்ன ஆகின்றது...?

உதாரணமாக ஒரு மிருகம் ஒரு மனிதனைத் துரத்திச் செல்கின்றதென்றால் அதைப் பார்க்கும் நிலையில் அந்த மிருகத்தின் செயலைக் கண்டு நமக்குப் பயமும் அதே சமயம் பதட்டமும் ஏற்படுகின்றது. நம்மைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வைக்கின்றது.

நாம் நுகர்ந்த அந்தப் பயமான உணர்வுகள் அப்பொழுது நம்மைக் காத்திடச் செய்தாலும் காத்திடும் நல்ல உணர்விற்குள் இந்தப் பய உணர்வின் சத்துக்கள் கலந்து விடுகின்றது.
1.பின் நமக்குள் இந்த அச்ச உணர்வே அதிகரிக்கின்றது.
2.அச்ச உணர்வுகள் அதிகரிக்கப்படும் போது நம் சிந்திக்கும் செயல் இழக்கப்படுகின்றது.

சில பேரைப் பார்க்கலாம். தன் வாழ்க்கையில் ஒரு தரம் அதீதமாகப் பயந்து விட்டால் அடிக்கடி “எதைக் கண்டாலும் பயந்து நடுங்குவார்கள்…!”

அவர் உடலில் இருக்கும் அனைத்து குணங்களுக்குள்ளும் இந்தப் பதட்டமும் பயமும் உருவாகி விட்டால் அவர்கள் அடுத்து எத்தொழிலும் செய்வது மிகவும் கடினம். காரணம்
1.அவர் சுவாசித்த உணர்வு ஆன்மாவில் முன்னாடி படும் போது
2.”கண்ணாடியில் அழுக்குப் பட்டது…!” போன்று ஆகிவிடுகின்றது.

அதாவது கண்ணாடியில் நாம் முகத்தைப் பார்க்கின்றோம். அதிலே அழுக்குப் படிந்து விட்டால் நமது முகம் நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. இதைப் போன்று தான் நம் உடலுக்குள் நம் ஆன்மா ஒரு கண்ணாடி போன்றது.

நம் உடலிலே பதிவு செய்த நல்ல உணர்வுகள் அது கவர்ந்து ஆன்மாவாக மாற்றி இருக்கப்படும்போது நாம் சுவாசித்த பய உணர்வும் நடுக்கமும் கொண்ட இந்த உணர்வுகள் நமக்குள் அது ஈர்த்தபின் கண்ணாடியில் அழுக்குப் படிந்தது போன்று நம் ஆன்மாவில் அழுக்காகப் படிந்து விடுகின்றது.

1.பின் நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணங்களையோ
2.வலுவான நிலைகளில் இருக்கும் காத்திடும் நல்ல உணர்வுகளையோ
3.நாம் உணர முடியாத நிலைகள் ஆகி விடுகின்றது
4.அது மட்டுமல்லாது நல்லதை நம்மால் இயக்கவும் முடிவதில்லை.
5.நம் நல்ல குணங்கள் அனைத்தும் தேய் பிறையாக மாறுகின்றது.

முதலிலே சிறுகச் சிறுக வெளிச்சம் தெரிந்து பின் முழு நிலாவாக ஆவது போலத்தான் ஒரு உயிரணு மற்ற உணர்வுகளை எடுத்து எடுத்து அறிந்திடும் ஆற்றலை வளர்த்து முழுமை அடைந்து மனிதனாக வருகின்றது. நாமும் அப்படித்தான் இந்த மனித உருவைப் பெற்றோம்.

ஆனாலும் அடுத்தடுத்து மற்றவர்கள் தவறு செய்கின்றார்கள் என்றால் என்பதை உற்றுப் பார்த்தாலே போதும். அல்லது பத்திரிக்கை டி.வி. மூலமாக எங்கோ நடக்கும் கொடிய சம்பவங்களைத் தினசரி பார்த்துப் பதிவாக்கிக் கொண்டே வந்தால் போதும்.

அந்தத் தவறு செய்யும் உணர்வுகளும் கொடிய உணர்வுகளும் நம் ஆன்மாவிலே பட்டு அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம் உடலுக்குள் அது அது தன் இனத்தை வளர்க்க ஆரம்பித்துவிடும்.

சரியில்லாத உணர்வுகளை நுகர்ந்த பின் இந்த உலகில் எதுவுமே சரியில்லை…! நல்லதுக்குக் காலமில்லை…! என்று நாமும் சொல்லத் தொடங்குவோம்.

இப்படி நம் ஆன்மாவில் அழுக்காகச் சேரும் தீமைகளைத் துடைக்க வேண்டுமா… இல்லையா…? அதற்குத்தான் குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்கு “ஆத்ம சுத்தி…!” என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கொடுக்கின்றோம்.

ஈஸ்வரா……! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணிலிருந்து வரும் அந்தச் சக்திகளைச் சுவாசித்துப் பழக வேண்டும். குறைந்தது ஒரு நிமிடமாவது இவ்வாறு எண்ண வேண்டும்.

ஏனென்றால் தீமை செய்யும் உணர்வுகள் நமக்கு முன்னாடி ஆன்மாவாக இருக்கும் பொழுது அதை “நேரடியாக… அகற்ற முடியாது…!”
1.புருவ மத்திக்குக் கண்ணின் நினைவைக் கொண்டு போய்
2.மீண்டும் கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தினால் தான்
3.இந்த ஆன்மாவில் நமக்கு முன்னாடி உள்ளதைப் பிளக்க முடியும்.
4.நம் ஈர்ப்பை விட்டு அந்தத் தீமை செய்யும் உணர்வுகளை அகலச் செய்ய முடியும்.

இவ்வாறு அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தால் நம் ஆன்மாவில் சிறுகச் சிறுகச் சேரும் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறும்.

தீமைகள் வரும் பொழுதெல்லாம் அதை நமக்குள் சேராதவண்ணம் எப்படித் தடுக்க வேண்டும் என்ற உபாயங்களும் தோன்றும். நம் ஆன்மா வலிமை பெறும். மன பலம் கிடைக்கும். மன அமைதியும் கிடைக்கும்.

செய்து பாருங்கள்…! எமது அருளாசிகள்.