ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 2, 2017

நல்ல நேரம் எது...! கெட்ட நேரம் எது...!

தினசரி மனித வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்கள் படுகின்றோம். கஷ்டப்படுகின்றோம் கோபப்படுகின்றோம் ஆத்திரப்படுகின்றோம்.

ஆக வீணாகக் கவலைப்பட்டோ சங்கடப்பட்டோ சலிப்படைந்தோ வெறுப்படைந்தோ வேதனைப்பட்டோ அதையே மீண்டும் மீண்டும் நமக்குள் வளர்த்தால் மனித உடலுக்குள் தீமைகள் அதிகமாகி அடுத்து மனித உருவல்லாத உடலாகத்தான் நம்மை உயிர் உருவாக்கும்.

ஜோதிடமோ ஜாதகமோ நல்ல நேரமும் கெட்ட நேரமும் உங்களுக்கு ஒன்றும் செய்யாது.

தீமையை நீக்க வேண்டும் என்று எப்பொழுது எண்ணுகின்றீர்களோ அந்த நேரமே உங்களுக்கு நல்லது.

1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “அந்த நேரத்தைப் பயன்படுத்தி”
3.எங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால்
4.அந்த நேரம் தான் உங்களுக்கு நல்ல நேரமாகும்.

ஏனென்றால் மனிதன் எல்லாவற்றையும் உருவாக்கக்கூடியவன்.
1.நல்லதை உருவாக்கப்படும் பொழுது அந்த நல்ல நேரம் வருகின்றது.
2.நல்ல செயல்கள் வருகின்றது.
3.மன பலம் கிடைக்கின்றது. மன உறுதி கிடைக்கின்றது.

என்னை இப்படிச் செய்தானே... என்ற நிலைகளில் கோபமும் ஆத்திரமும் வரும் பொழுது அந்த நேரம் கெட்ட நேரம்.

“எனக்கு இப்படித் தீங்கு செய்தானே... நான் தொழில் செய்தேனே நஷ்டமாகி விட்டதே... என் பையன் சொன்னபடி கேட்கவில்லையே...,” இப்படி எல்லாம் எண்ணிக் கொண்டிருந்தால் இதெல்லாம் கெட்ட நேரம் தான்.

எனக்குத் தீங்கு செய்பவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று பொருளறிந்து செயல்பட வேண்டும். சிந்தித்து அவன் செயல்பட வேண்டும். நல்லது செய்யக்கூடிய உயர்ந்த எண்ணங்கள் வர வேண்டும்.

நான் செய்யும் தொழில்கள் அனைத்தும் சீராகி அதில் உற்பத்தியாகும் பொருள்களைப் பயன்படுத்துவோர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும். என் வியாபாரம் விருத்தியாக வேண்டும் என்று இப்படி எண்ணினால் அதுவெல்லாம் நல்ல நேரமாகின்றது.

என் பையன் ஞானம் பெற்று நல்ல தெளிவானவனாக வர வேண்டும். அவன் அந்த அருள் சக்திகள் பெறவேண்டும் என்று எண்ணினால்
1.அவனுக்கு அது நல்ல நேரம்.
2.அவனைப் பற்றி இப்படி நாம் எண்ணினால் நமக்கும் அது நல்ல நேரமாக வருகின்றது.

அந்த நல்ல நேரம் என்றால் அதற்கு வேண்டிய வலு வேண்டுமல்லவா. சும்மா சாதாரணமாக நினைக்க முடியாது.

அதற்குத்தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வைப் பெறச் செய்து அந்த உணர்வை வலுவாக்கிவிட்டால்
1.அதை நினைக்கும் பொழுதெல்லாம்
2.அந்த நேரம் உங்களுக்கு நல்ல நேரமாக வருகின்றது. 

செய்து... உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.