ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2017

உடலில் உள்ள பித்தத்தைச் சீராக்கி என்றுமே உடல் நலத்துடன் வாழலாம் எத்தகைய நோய் வராதும் தடுத்துக் கொள்ளலாம் - மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியை எல்லோரும் பெறுங்கள்

வேதனை என்பது நஞ்சு.

நாம் வேதனைப்பட்டோம் என்றால் அது அதிகரிக்கப்படும் பொழுது பய உணர்வுடன் அது கலந்து நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் அனைத்தும் அதிகரித்துவிடும். அதிகமான பித்தத்தைச் சுரக்கும்.

உதாரணமாக பாம்பு அதனின் தலை சிறிதாக இருப்பினும் ஒரு தவளையையோ மற்ற பெரிய உயிரினங்களையோ பிடித்துவிட்டால் தன் உடலில் உருவாகும் கடுமையான விஷத்தின் தன்மையை அதன் மீது பாய்ச்சுகின்றது.

விஷத்தைப் பாய்ச்சி அந்த உயிரினங்களைப் பலவீனப்படுத்தி இதனின் சத்து அதனின் உணர்வின் இயக்கத்திற்குள் சென்ற பின் அது கரையும் தன்மை அடைகின்றது.

அதைப் போல் மனிதர்களாக இருக்கும் நமக்குள் இருக்கும் பித்த சுரப்பிகள் நாம் உணவாக உட்கொள்வதைக் கரைக்கும் நிலைகள் - அது ஒரு “நஞ்சு தான்”.

அது எதன் அளவு உமிழ்த்துகின்றதோ நாம் சாப்பிடும் உணவுடன் கலக்கப்படும் பொழுது அது கரைத்துவிடுகின்றது.

அடிக்கடி கடினமான உணவுப் பதார்த்தங்களை நாம் உணவாக உட்கொள்வோம் என்றால் பித்த சுரப்பிகள் அதிகமாக இயக்கப்பட்டு நாம் சாப்பிட்ட கடினப் பொருளைச் சீக்கிரம் கரையச் செய்துவிடுகின்றது.

ஆனால் அடுத்த சமயம் இந்தக் கடினப்பொருள் இல்லை என்றால்
1.அது உமிழ்த்திய வேகத்தில்
2.நஞ்சின் தன்மையால் பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுர்ந்தால்
3.நம் உடலுக்குள் அரிப்பும் பசியின் தன்மை கொடூரமானாலும்
4.உணவை உட்கொள்ள முடியாதபடி தடைப்படும்.

நஞ்சின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள உணர்வின் “செல்கள் சீராக இயங்காது”. சீராக இயங்கவில்லை என்றால் நாம் உணவாக உட்கொள்ளும் உணவின் நிலைகள் சுவையை அறிய முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

சுவையை அறியவில்லை என்றால் தனக்குள் உணவாக உட்கொண்ட சத்துகளை உள்ளே ஈர்க்கும் இந்த உணர்வின் தன்மை அது தடைப்படுகின்றது.

பித்தத்தின் தன்மை கசப்பின் தன்மை அடையப்படும் பொழுது இந்த உணர்வை உள்ளே எடுத்துக் கொள்ளாதபடி இது உமிழ்த்தி வெளியேற்றும் சக்தியாக மாறிவிடுகின்றது.

உதாரணமாக ஒருவர் பலகாரம் சுடுகிறார் என்றால் அவர் தண்ணீரைத் தெளிப்பார். எண்ணெய் எந்த அளவிற்குக் காய்ந்திருக்கின்றது என்று அவர் பரீட்சித்துப் பார்ப்பார்.

இதில் எழும் அந்த நாதத்தின் ஒலி கொண்டு கண்டு கொள்கின்றார். சூடு சரியாக இருந்தால் வடையைத் தட்டி அதில் போடும் பொழுது சட்டியில் வடை சீராக வேகின்றது. ருசியாகவும் இருக்கின்றது.

தண்ணீரைத் தெளிக்கும் பொழுது வரும் நாதத்தைக் கேட்டு அந்த உள் நாதத்தை அறியாதபடி நாம் வடையைத் தட்டிப் போட்டால்
1.சூடு சரியாக இல்லை எண்ணெய் சீராகக் காயவில்லை என்றால்
2.இந்த எண்ணெயின் தன்மை லேசாக இருக்கும் பொழுது மாவிற்குள் ஊடுருவி விடும்
3.சுவையை மாற்றிவிடும் ருசி இருக்காது.

ஆகவே அந்தச் சூட்டிற்குத் தக்கவாறுதான் வடையைச் சுவை கொண்டதாக மாற்றுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான் தெரியாதது ஒன்றும் இல்லை.

இதைப் போன்று தான் நாம் சுவாசிக்கும் உணர்வுகளும் எண்ணங்களும்
1.நமது உணர்வின் தன்மை
2.”இயக்கச் சக்தி…” அது எந்த அளவோ
3.அதற்குத்தக்க உணர்வை “ஜீரணிக்கும் சக்தி” வருகின்றது.

பித்தத்தின் அளவுகோல் அதிகரித்தால் அந்த உணர்வின் சத்து நமக்குள் மற்ற உறுப்புகளை இயக்கும் தன்மை குறையும். அதனின் தன்மை கொண்டு நாம் உணவாக உட்கொள்ளும் நிலையும் மறைகின்றது.

நாம் நினைக்கின்றோம்… சும்மா தானே இருந்தோம். கோபப்பட்டவர்கள் வேதனைப்பட்டவர்கள் வேதனைப்படுத்துபவர்களை “வேடிக்கைதானே பார்த்தோம்…” என்று எண்ணுகின்றோம்.

அந்தக் கோபித்த உணர்வின் செயல்களும் வேதனைப்படுத்திய வேதனைப்பட்ட உணர்வின் செயல்களும் நம் உடலில் எவ்வாறு விளைகின்றது? நம் உடலுக்குள் அந்த உணர்வின் சத்துகள் சேர்ந்தபின் உடலின் இயக்கம் எப்படி இருக்கும்? என்ற நிலைகளைத் தத்துவ ஞானிகள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

1.இவ்வாறு நமக்குள் நம்மை அறியாமல் சேரும்
2.தீமையான உணர்வின் சத்துக்களை மாற்றவில்லை என்றால் அவைகளைச் சமப்படுத்தவில்லை என்றால்
3.சீராக இயக்கும் உறுப்புகளின் இயக்கம் மாறி
4.நஞ்சைச் (பித்தத்தை) சேகரிக்கும் உறுப்புகளாக மாற்றி உடலில் நோயாகிவிடும்.

மருத்துவரிடம் சென்றால் அவர் இதை மாற்ற இன்னும் விஷத் தன்மை கொண்ட மருந்துகளைக் கொடுப்பார். அதை எடுத்து மீண்டும் நமக்குள் நஞ்சைத்தான் சேர்க்க முடியுமே தவிர நஞ்சைப் பிரிக்கும் தன்மை வராது.

கடைசியில் நமது வாழ்க்கையில் தெளிந்திடும் நிலைகள் கொண்டு தெரிந்து செயல்படும் மனித உணர்வுகள் அனைத்தும் மறைந்துவிடுகின்றது.

இதை மாற்ற வேண்டும் என்றால் நஞ்சை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.

நம் உடல் உறுப்புகள் - சிறு குடல் பெருங்குடல்; கணையங்கள்; கல்லீரல் மண்ணீரல்; நுரையீரல்; இருதயம்; கண்களின் கருமணிகள்; நரம்பு மண்டலம்; எலும்பு மண்டலம்; குறுத்தெலும்பு; விலா எலும்பு; எலும்புக்குள் உள்ள ஊன்; தசை மண்டலம்; தோல் மண்டலம் முழுவதிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை படரச் செய்ய வேண்டும்.

அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணையச் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால்
1.நம் உடல் உறுப்புகளும் அதை உருவாக்கிய அணுக்களும் “உற்சாகம்…” அடையும்.
2.எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் (சுவாசத்தின் வழியாகவோ, உணவு வழியாகவோ)
3.அதை ஜீரணிக்கும் ஆற்றலும் அதிலுள்ள சத்தைப் பிரிக்கும் நிலையும்
4.எல்லாவற்றையும் ஒளியாக மாற்றும் ஆற்றலும் நம் உறுப்புகள் பெறும்.
5.உடல் நலத்துடன் மன பலத்துடன் மகிழ்ச்சியாக நாம் வாழ முடியும்.

செய்து பாருங்கள்.

அகஸ்தியனைப் போன்ற மெய்ஞானியாக ஆக முடியும்.