ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2017

“ருத்ர தாண்டவம்”

ஒரு வீணையை வாசிக்கும் பொழுது காதிலே கேட்டவுடன் அந்த இனிமையான நாதம் நம்மை மயக்கச் செய்கின்றது. ஆனால் அதிலே நாதங்கள் பேதங்களாகிவிட்டால் உடனே நம் உடலில் ஒரு விதமான வெறுப்பு ஏற்படுகின்றது.

ஏனென்றால் அந்த நாதங்களை ஒழுங்குபடுத்தி வாசிக்கும் பொழுது நம்முடைய உடல்கள் அசைகின்றது. அதன் மேல் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

வீணையில் நாதத்தின் சுருதிகள் மாறும் பொழுது செவியில் கேட்டவுடன் அந்த உணர்ச்சியின் தூண்டுதலால் அதன் மீது வெறுப்பாகி எழுந்தும் போகச் செய்கின்றது.

உட்கார்ந்து கேட்க முடிவதில்லை.

இதைப் போல் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தால் வெறுப்பான உணர்வுகளானவுடன் நம் உயிரான ஈசனிடத்தில் பட்டு அந்த வேகமான உணர்வுகள் உடலுக்குள் போனவுடன் நல்ல குணங்களெல்லாம் பதறுகின்றது.

இத்தனை குணங்களையும் தாங்கியிருக்கும் உடல் “பட..பட…” என்று துடிக்கின்றது. பயமோ ஆத்திரமோ வந்துவிட்டால் துடிக்கின்றது.

அந்த எரிச்சலான குணம் வெறுப்பாகப் பேசுவதைக் கேட்டு வெறுப்பாக நாம் சொன்னாலும் அந்த உணர்வுகள் உயிரிலே படுகின்றது.

நம் உயிரான ஈசனிடத்தில் அந்த மணம் பட்டவுடன் அவனுக்கு எரிச்சலாகின்றது. எரிச்சலான உணர்வு வரும் பொழுது
1.கண்கள் கோவைப் பழம் போன்று சிவக்கின்றது.
2.காதும் விடைத்துவிடுகின்றது.
3.வாயிற்குள் பார்த்தால் எரிச்சல் “ஆ…” என்கிற நிலை வருகின்றது.
4.உடலுக்குள்ளும் எரிச்சல்.

இந்த உணர்வின் அலைகள் நமக்குள் பாயும் பொழுது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் பட்டவுடன் தசைகள் எல்லாம் ஆட ஆரம்பித்துவிடுகின்றது.

நம் உடல் சிவம். நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் நல்லதைச் செய்யும் தெய்வமாக எண்ணுகின்றோம்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு சுவாசிக்கின்றோமோ அந்த உணர்வின் சுருதிக்கொப்ப நம் “நாடி நரம்புகள்” அப்படியே துடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

நாம் எரிச்சலாக இருக்கும் பொழுது நம் உடல் இப்படியெல்லாம் மாறுகின்றது. ஒரு இடத்தில் நிலை கொள்ள விடுவதில்லை.

ஆத்திரம் வந்தவுடன் “ருத்ர தாண்டவம்” ஆரம்பித்துவிடுகின்றது.

நம் நரம்புகள் துடிக்க ஆரம்பித்துவிடுகின்றது. நம் உடலான சிவன் ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்துவிடுகின்றது.

நாம் அல்ல.

கோப உணர்ச்சிகள் வந்தவுடன் ஈசனிடத்தில் பட்டவுடன் இந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

கோப உணர்வுகள் நம் நல்ல குணங்களில் பட்டவுடன் அது பதறுகின்றது. நல்ல குணங்களைத் தாங்கியுள்ள இந்த உடலான சிவம் என்ன செய்கின்றது?
1.அது தானாகவே அசைய ஆரம்பிக்கின்றது.
2.நீங்கள் கட்டுப்படுத்தினாலும் அது முடிவதில்லை.

இதுவெல்லாம் சந்தர்ப்பத்தினால் நிகழக் கூடியது. மனிதனாக இருக்கக்கூடியவர்கள் நாம் இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பிறர் தவறு செய்யும் பொழுது நீ குறைகளைச் செய்கிறாய் என்று சொல்கிறோம். ஆனால் அந்தக் குறையான உணர்வு வரப்படும் பொழுது
1.அந்தக் குறை நம் உடலை ஆட்டிப்படைக்காதபடி
2.நமக்கு ஆத்திரம் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

நமக்கு நாமே நம்மைக் கோபப்படச் செய்யும் குரோதப்படச் செய்யும் வேதனைப்படச் செய்யும் சோர்வடையச் செய்யும் இந்தக் குறைகள் நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

அதைத் தடுத்து நிறுத்துவதற்காகத்தான் மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

ஆத்ம சுத்தி என்ற நிலைகளில் அந்த அருள் ஞானிகளின் ஆற்றல்களை நீங்கள் எடுத்து உடல் முழுவதும் பரவச் செய்யும் பொழுது
1.உங்கள் மனக்க கலக்கத்தைத் தடுத்து நிறுத்தும்.
2.மன பலம் கிடைக்கும். மன நலம் கிடைக்கும்.

குறையான உணர்வுகளை நாம் எங்கே காணுகின்றோமோ யார் மீது காணுகின்றோமோ எந்த வழிகளில் காணுகின்றோமோ அந்த நேரத்தில் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அதைப் பார்த்தீர்கள் என்றால் அதன் வீரியம் நம்மைப் பாதிக்காது.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு நாளை அவர்கள் செய்வது நல்லதாக இருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் அவர்களுக்குள் உதயமாக வேண்டும் என்று இந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிடல் வேண்டும்.

இதன் மூலம் நமக்கும் நல்லதாகின்றது. நாம் பாய்ச்சி உணர்வுகளை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றால் அவர்களுக்கும் நல்லதாகும்.