ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2017

“வசிஷ்டரும் அருந்ததியும் போல… என்றுமே ஒன்றி வாழ வேண்டும்…” என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் கணவனை இழந்தவர் என்பதற்காக மாங்கல்யத்தைப் பறித்து ஒன்றி வாழும் நிலையைத் தடுக்கத்தான் பழகியிருக்கின்றோம்

குடும்பத்தில் உடலை விட்டுக் கணவன் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த ஆன்மா விண் செல்ல வேண்டும் என்று எண்ணி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.
1.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து,
2.இரு உயிரும் ஒன்றானபின் ஒளியின் சரீரம் பெறும் தன்மை வரும்.

ஆனால் அவர் இட்ட மாங்கல்யம் மனைவியின் உடலிலே தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் இட்ட மாங்கல்யமும் அவருடைய எண்ணங்களும் இங்கே தான் இருக்கின்றது.

என்னுடன் வாழ்ந்தார் வளர்ந்தார்… “ஒன்றி வாழ்ந்தோம்” என்ற உணர்வினை வளர்த்து அவர் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இதன் உணர்வின்படி தியானித்தால் இந்த உடலைவிட்டுச் சென்றபின் இந்த ஆன்மா அதனுடன் ஐக்கியமாகும்.

இதே போன்று மனைவியை இழந்த கணவனும் என்னுடன் வாழ்ந்தது வளர்ந்த உடலை விட்டுச் சென்ற மனைவியின் ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று எண்ணி அந்த ஆன்மாவை ஒளிச்சரீரம் பெறச் செய்தால் “இரு உயிரும் அங்கே ஒன்றாகின்றது”.

ஒன்றிய உணர்வுகள் ஒன்றி வாழ்ந்த பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்தால் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்ற பின் தனக்குள் வரும் உணர்வை ஒளியாக மாற்றி வளரும் பருவம் வருகின்றது.

இதே போன்று கணவனைப் பிரிந்தவர்கள் மனைவியைப் பிரிந்தவர்கள் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றும் அவர் இட்ட மாங்கல்யம் உங்களிலே (மனைவி) இருக்கிறதென்று உறுதி கொண்டு இதைச் செயல்படுத்துங்கள்.
1.அவர் உணர்வு உங்கள் உடல்களிலே உண்டு.
2.இதன் வலுகொண்டு அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இப்பொழுது சாங்கிய சாஸ்திரம் கொண்டு எதைச் செய்கின்றனர்?

கணவன் இறந்துவிட்டால் கணவனை மறந்து விட வேண்டும் என்பதை ஆதாரமாகக் காட்டி
1.கணவனை இழந்தவள் என்று மற்றவர்களை அறியச் செய்வதற்கு
2.”மாங்கல்யத்தைப் பறிக்கின்றனர்”.

அங்கே தான் தவறு செய்கின்றனர்.

தன் கணவன் தன்னுடன் உண்டு என்ற உணர்வினை நினைவு கொண்டு அந்தக் கணவன் பால் நினைவு கொண்டால் அந்த உணர்வின் சக்தி “தவறு செய்யவிடாது”.

இந்த மத இனங்களில் இப்படித் தவறான நிலைகளில் செயல்படுத்தப்பட்டுக் “கணவனை இழந்தவர்… கணவனை இழந்தவர்…” என்று இந்த உணர்வின் தன்மை துக்கமும் துயரமும் கொண்டு வேதனையின் உணர்வு கொண்டு அந்த வேதனையால் “பேய் மனமாக” மாற்றி விடுகின்றனர்.

பேய் மனமாக மாறித் தன் குடும்பத்தின் நிலை கொண்டு அது செயல்படும் பொழுது அது இறந்தபின் யார் மேல் பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் கொண்டு “பேய் உணர்வுகளைத் தான் ஊட்டும்”.

அந்தப் பாசத்தால்
1.குடும்பத்திற்குத் தீங்கு தான் செய்ய முடியுமே தவிர
2.ஒளியின் சரீரம் பெற முடியாது.
3.அதன்வழி செல்லவும் முடியாது.

இதையெல்லாம் ஞானிகள் காட்டிய நிலைகளில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று… “கவர்ந்து கொண்ட உணர்வுகள் ஒன்றி” மனிதனுக்குள் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அருள் ஒளி கணவனுக்குக் கிடைக்க வேண்டும்
2.அருள் ஒளி மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
3.என்ற உணர்வு கொண்டு ஒன்றி வாழ்ந்தவர்கள் தான் பிறவியில்லா நிலைகள் அடைகின்றனர்.

இந்த உடலில் சிறிது காலமே இருப்பினும் அதனை மனைவியின் உணர்வின் துணை கொண்டு வலுக் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று எண்ணி
1.அந்த வலுவினைச் சேர்த்து விட்டால்
2.”விண்ணை நோக்கிச் செல்கின்றது” மனைவியின் எண்ணம்.

அந்த உணர்வு கணவன்/மனைவி தன்னுடன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ந்திருந்தார்களோ இதைக் “கனவுகளில் வந்து” மகிழ்ச்சியின் உணர்வாகத் தோற்றுவிக்கும்.

அருள் ஒளி பெற வேண்டும் என்று அண்டத்தின் நிலைகளில் மிதந்து ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்துவிட்டால் அந்த ஆன்மா அருள் ஒளியின் சுடராகப் பெறும்.

ஒளியின் சுடராக பெற்று இந்தப் புவியின் பற்றினை நீக்கிடும் அருள் உணர்வுகள் நமக்குள் தோன்றியபின் நம்மை அந்த எண்ணத்துடன் வாழச் செய்யும்.

நம் நினைவு இந்த மக்களை அடுத்து வாழ்த்தச் செய்யும்.

இல்லையென்றால் அந்த மாங்கல்யத்தைப் பறித்து விட்டால்
1.“இழந்துவிட்டோம்.., இழந்துவிட்டோம்.., இழந்துவிட்டோம்..,” என்று
2.சர்வத்தையும் இழந்திடும் நிலை கொண்டு
3.வேதனை கொண்டு தான் வாழும் நிலை வரும்.

கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் இனி தவறு செய்யாது இனியாவது “உங்களுடன் வாழுகின்றார்…” அந்த ஆன்மா ஒளியின் சரீரமான உணர்வுடன் உங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது என்று எண்ணுங்கள்.

என்று அவர் உங்களுடன் ஒன்றினாரோ இந்த நினைவுகள் வந்து கொண்டிருக்கும், அந்த அணுக்கள் இருந்து கொண்டிருக்கும்.

ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று விண்ணில் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைத்துவிட்டால் நம் நினைவு அங்கே செல்லும்.
1.நம் உணர்வு இங்கே வளரும்
2.அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்லாது தடுக்கும்
3.அருள் ஒளி சுடராக மாற்றச் செய்யும்
4.அந்த மெய்ஞானிகள் காட்டிய வழிகளில் நாம் செல்ல முடியும்.

கணவனை/மனைவியை இழந்துள்ளோம் என்று யாரும் எண்ண வேண்டாம். அவர் உணர்வு உங்களுக்குள்ளே உண்டு.

அந்த ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும், அல்லது இங்கே சுழன்று கொண்டிருந்தாலும் நீங்கள் தொடர்ந்து அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று காலை துருவ தியானங்களில் சொல்லி இருந்தீர்களென்றால் அந்த உணர்வுகள் ஒளியாகப் பெறுகின்றது.

அந்த உணர்வுகளுடன் மீண்டும் உங்களுக்குத் தொடர்பு ஏற்படுகின்றது. அவர் அருள் ஒளி பெறுகின்றார் ஒளியின் சரீரம் பெறுகின்றார்.

அந்த உணர்வு உங்களுக்குள் இருளை அகற்றும். ஒன்றி வாழும் உணர்வினை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் இதைத் தலையாயக் கடமையாக வைத்து உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். 

“மனிதனுடைய எல்லை எது…?” என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய பேருண்மை இது.