ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 27, 2017

நம் உயிருக்குள் ஏற்படும் துடிப்பின் நிலை என்ன? “உயிரின் துடிப்பினைக் கூட்டி” ஆற்றல் மிக்க சக்திகளை நாம் எப்படிப் பெறுவது?

நமது பூமி சுழலும் பொழுது பிரபஞ்சத்திற்குள் காந்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தக் காந்த அலைகள் மோதும் பொழுது தான் நம் பூமிக்குள் காந்தங்கள் உற்பத்தியாகின்றது.

அப்படி பிரபஞ்சத்திற்குள் உள்ள காந்தங்களின் அதீத மோதலினால் ஏற்படக்கூடிய வெப்பமும் அதில் ஏற்படக்கூடிய காந்தங்கள்தான் பூமிக்குள் மற்ற அணுக்களை இயக்கச் செய்கின்றது.

இதைப் போலத்தான் பூமி ஓடும் பாதையிலே அதன் இயக்கங்கள் அது ஓடிக்கொண்டே இருப்பதால்… “உராயும் சக்தி” கிடைக்கின்றது.

நாம் காற்றடிக்கும் பம்பை வைத்து காற்றடிக்கின்றோம். பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது அதிலுள்ள பிஸ்டன் இழுத்துத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல
1.நம் உயிரின் ஈர்ப்பு அது துடிக்கும் பொழுது
2.அதனின் “ஈர்ப்பின் சக்தி அதிகமாகின்றது”

அந்த ஈர்ப்புச் சக்திக்குத் தக்கவாறு நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்தக் குணங்கள் ஒரு காந்த அணுவுக்குள் ஒரு வேப்ப மரத்தின் கசப்பின் தன்மை பட்டிருந்தால் அந்தக் கசப்பிற்குத் தகுந்த மாதிரி நம் உணர்ச்சிகள் தூண்டுகின்றது.

அதைப் போல மிளகாயினுடைய காரச் சக்தியினுடைய தன்மையை ஒரு வெப்ப காந்தம் இழுத்திருந்து அந்தக் குணத்தின் நிலைகள் கொண்டு நாம் சுவாசித்தோமேயானால் அது உயிரில் பட்டவுடன் நம் வாயிலே மிளகாயைப் போட்டால் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றதோ இதைப் போன்ற உணர்ச்சிகளை நம் உடலிலே தூண்டச் செய்யும்.

ஏனென்றால், நாம் சுவாசிக்கும் உணர்வினுடைய நிலைகள் நாம் எந்தெந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் இந்த உணர்வின் நிலைகளை நாம் சுவாசிக்க முடிகின்றது.

1.அவ்வாறு சுவாசித்த நிலைகள் நம் உயிருடன் சுழற்சியாகி
2.அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன் உயிரின் காந்தத் துடிப்புகளுக்குள் மோதி
3.அதனுடைய நுண்ணிய அணுக்கள்
4.சுவாசித்த உணர்வினுடைய நிலைகளை உணரச் செய்கின்றது.

அந்த உணர்வின் அலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்து தன் இனமான நிலைகளை அது இயக்கச் செய்கின்றது.

ஆகவே “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.

அப்பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நமக்குள் மோதச் செய்யும் பொழுது
1.ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும்,
2.அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது
3.நம் உடலிலே காந்த சக்தி கூடுகின்றது.
4.இந்த வேகத்துடிப்புடன் நம் சுவாசத்தை மேல் நோக்கி எண்ண வேண்டும்.

புருவ மத்தியிலே நம் உயிர் இருப்பதனாலே நம் கண்ணின் புலனறிவை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உடலுக்குள் அந்த நினைவைச் செலுத்தும் பொழுது
1.எந்தப் பாகத்தில் அந்த நினைவைச் செலுத்துகின்றோமோ
2.அந்த உணர்வின் நிலைகள் கூடி
3.அதற்குள் ஊடுருவிச் செல்லும் நிலைகள் இருக்கின்றது.

நம் கண்ணான புலனறிவின் நிலைகளை உயிருடன் ஒன்றி இணைக்கச் செய்து இந்த ஆற்றலை நாம் செயல்படும் பொழுது அந்த உயிருக்குள் அந்த வேகத் துடிப்பின் நிலைகள் அதிகமாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி உடல் முழுவதற்கும் செல்கின்றது. இவ்வாறு நம் உயிரின் துணை கொண்டு ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற முடியும். நமக்குள் விளைய வைக்க முடியும். 

துருவ நட்சத்திரம் நஞ்சை ஒளியாக மாற்றுவது போல் நாமும் ஒளியாக மாற்ற முடியும். ஒளியின் சரீரம் பெற முடியும்.