ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2017

அடுத்தவரைத் தள்ளிவிட்டுவிட்டுத் “தான் மட்டும்” நல்லதைப் பெறவேண்டும் என்பதற்காக ஆலயங்கள் உருவாக்கப்படவில்லை நம் உடலைக் கோவிலாக்கி நம் குணத்தைத் தெய்வ குணமாக ஆக்கச் செய்யும் “மூலஸ்தானம்” அது

இன்று நாம் ஆலயங்களுக்குச் செல்லும்போது அர்ச்சனைக்குக் காசைக் கொடுத்துவிட்டு சாமியைப் பார்த்தவுடன் “அப்பனே… என் வீட்டில் இப்படியெல்லாம் இருக்கின்றது நான் உன்னை நினைக்காத நாள் கிடையாது..,” என்று வேதனையைத்தான் அங்கே எடுக்கின்றோம்.

பார்த்தால் கண்களிலிருந்து அழுகை… “கண்ணீராக” வந்து கொண்டிருக்கும்.

ஆனால் அங்கே ஞானிகள் காட்டிய நல்ல உணர்வுகளையும் நல்ல சக்திகளையும் தனக்குள் எடுப்பதில்லை. அதைப் பற்றி எண்ணுவதுமில்லை.

தன் வேதனையைச் சொல்லி ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது பின்னாடி இருப்பவரும் இதே ஏக்கத்திலிருப்பார். அப்பொழுது சாமியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இவர்களைத் தள்ளுவார்.

“ஏம்மா…! மாடு மாதிரித் தள்ளுகிறாய் என்பார். இதையெல்லாம் இன்று கோவில்களில் பார்க்கலாம்.

நீ தான்… எருமை மாதிரித் தள்ளுகிறாய்…! என்று அவரும் பதிலுக்குக் கூறுவார். சாமி கும்பிடுவதை விட்டுவிடுகிறார்கள். சண்டை போட ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த உடலைக் கோவிலாக்கி நமக்குள் உள்ள குணத்தை உயர்ந்ததாக்குவதற்காகத் தான் தெய்வத்தை அங்கே வைத்தார்கள் ஞானிகள்.

அதை நாம் யாரும் பின்பற்றுவதில்லை.

இந்த உண்மைகளை எல்லாம் யாம் சொன்னால் “சாமியே இல்லை…” என்று இவர் சொல்கிறார் என்று எம்மைத் திட்டுவார்கள்.

கோவிலுக்குச் சென்றால் தேங்காய் பழம் வைத்து…, “தேங்யாய் உடைக்காமல் அது என்னங்க சாமி கும்பிடுகின்றது…!” என்பார்கள்.

உங்கள் வாழ்க்கையில் சங்கடம் சலிப்போடு இருக்கின்றீர்கள்.

என் குடும்பத்தில் பல கஷ்டங்கள்… எனக்குப் பல சிரமங்கள்… என்று இப்படிப் பல வேதனைகளைத்தான் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றீர்களே தவிர இந்த வேதனைகளை நீக்க வேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை.

ஏனென்றால் இந்த உணர்வுகள் என்ன செய்கிறது?

நம் நல்ல குணத்தை இந்தச் சங்கட உணர்வுகள் பேசவிடாது நம்மை மறைத்துக் கொண்டேயிருக்கும்.
1.நாம் தவறு செய்யவில்லை,
2.சங்கட உணர்வுகள் நம்மை அவ்வாறு இயக்குகின்றது.

அதை நீக்குவதற்கு அந்த அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் சேர்த்துக் கொண்டு
1.“நாம் இப்படித்தான் இருக்க வேண்டும்…” என்று எண்ணிப் பாருங்கள்.
2.உங்கள் உயிர் இயக்குகின்றதா இல்லையா என்று பாருங்கள்.
3.அதே உணர்வை உயிர் இயக்கும் பொழுது கண் அந்த வழியையே காட்டும்.
4.உடலும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் ஞானிகள் காட்டிய வழியில் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

கோவிலுக்கு வரும அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்த உணர்வுடன் நீங்கள் கோவிலுக்குச் சென்றால் அங்கே யாரையும் முண்டியடித்துத் தள்ள மாட்டீர்கள். இந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் வளர “நீங்கள் தெய்வமாக ஆகின்றீர்கள்”.

உங்கள் சொல் பேச்சு மூச்சு எல்லோரயும் நல்லதாக்கும். அந்தக் கோவிலில் எந்தத் தெய்வத்தை வைத்திருக்கின்றார்களோ நீங்கள் அதுவாக மாறுகின்றீர்கள்.

உங்களிடம் இருக்கும் நல்ல குணத்தை தெய்வ குணமாக மாற்றுவதற்குத்தான் இப்படிச் சொன்னார்களே தவிர மற்றவர்களைத் தள்ளிப் போட்டுவிட்டு அந்தச் சாமியின் சக்தியைப் பெறவேண்டும் என்றால்
1.தள்ளிவிடும் குணம் தான் நமக்குள் வரும்.
2.நம்மிடமிருக்கும் நல்ல குணத்தைத் தள்ளியே விட்டுவிடும்.

நம் நல்ல குணத்தைக் காப்பதற்காகத்தான் கோவிலை ஞானிகள் கட்டி வைத்திருக்கின்றார்கள்.

1.அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும்
2.சாமி மேல் போட்டிருக்கும் மலரைப் பார்த்தவுடன் அந்த மலரைப் போன்ற மணம் பெறவேண்டும்
3.இந்தத் தெய்வ குணத்தை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
4.அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
5.இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் இந்தச் சக்தி பெறவேண்டும்
6.அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
7.அவர்கள் செய்யும் வியாபாரம் தொழில் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று
8.இப்படி வேண்டினால் நாம் அந்தத் தெய்வமாக ஆகலாம்.

ஆலயத்திற்கு வரும் ஒவ்வொருவரும் “நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணினால் அது எப்படி இருக்கும். சற்று சிந்தித்துப் பாருங்கள்.