ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 18, 2017

“மற்றவர்களை” நம்பத் தயாராக இருக்கின்றோம் “நம்மை நாம் நம்புகின்றோமா…?”

சாதாரண வாழ்க்கையில் பட்ட கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் பயம் சோர்வு போன்ற உணர்வாக இயக்கச் செய்யும் நிலைகள் நமக்குள் அடுத்து வேதனைப்படும் உடலாக உருவாக்குகின்றது.

ஆனால் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்தால் வேதனையை அடக்கி வேதனையை ஒடுக்கிடும் உணர்வாக விளைகின்றது.

நல்ல உணர்வுகள் கொண்டு நாம் வாழ்ந்து வரும்போது பிறரின் சிரமங்களையும் கஷ்டங்களையும் கண்டுணரும் பொழுது அதிலிருந்து அவர்கள் விடுபட நாம் எண்ணி ஏங்குகின்றோம். உதவியும் செய்கின்றோம்.

நல்ல உணர்வின் வலு கொண்டு அவர்களைக் காத்திட்டாலும் கேட்டுணர்ந்த உணர்வுகள் நம்மிடம் உள்ள நல்ல உணர்வுகளுடன் கலந்து அந்த நஞ்சான நிலைகள் உடலுக்குள் தீதான நிலைகளாக விளையத் தொடங்கிவிடுகின்றது.

பாலில் சத்துள்ள பாதாமைப் போட்டால் அதனின் சத்து உயர்ந்ததாக இருக்கின்றது. அதில் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் அதை உணவாக உட்கொண்டால் நம் நினைவை இழக்கச் செய்துவிடும்.

நாம் எத்தனையோ காலம் காத்து வந்த மனித உணர்வுகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடுகின்றது. உடலையும் நலியச் செய்கின்றது. நஞ்சு கொண்ட நிலையாக மாறுகின்றது.
1.நஞ்சின் வலு ஜாஸ்தி.
2.அதே சமயத்தில் நஞ்சை வென்ற அருள் ஞானிகளின் வலு ஜாஸ்தி.

நஞ்சினை ஒடுக்கிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பருகும் மார்க்கம்தான் யாம் இப்பொழுது உபதேசிக்கும் இந்த நிலை.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதிக்கு குருநாதர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி உங்களுக்கும் உபதேசித்து உணர்த்துகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எளிதில் பெறவேண்டும் என்றால் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அவர்கள் இன்னொரு இருள் சூழ்ந்த உடல் பெறாது பூரண நிலாவாக இருப்பது போல் ஒளியின் சரீரம் பெற்று அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்திட வேண்டும் என்று நாம் உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் அங்கே சென்றடைந்தபின் சுலப நிலைகளில் அதைப் பெற முடியும். குலதெய்வங்களை ஒளிச் சரீரம் பெறச் செய்த உணர்வின் துணை கொண்டு நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவோம்.

ஏனென்றால் இன்று சாதாரண எளிய மக்களாகத்தான் உள்ளோம். காவியங்களையோ கதைகளையோ முழுமையாக அறிந்தாரில்லை. காவியத் தொகுப்புகளை நாம் பார்த்ததில்லை.

தெய்வங்களின் நல் ஒழுக்கத்தைக் கற்றுணர்ந்தோர் தான் இருக்கின்றோம். “தெய்வத்திற்குப் படைத்தால் அந்தத் தெய்வம் நமக்குச் செய்யும்…” என்ற நம்பிக்கையில் தான் இருக்கின்றோம்.

தெய்வ நிலைகள் கொண்டோரிடம் மடாதிபதிகளோ அதைப் போன்ற மற்றவர்களிடமோ சென்று
1அவர்களிடம் ஆசி பெற அதிக அளவில் பணத்தையும் கொடுத்து
2.அவரிடம் வாக்கை வாங்கினால் அவர் நமக்கு நன்மை செய்வார் என்று
3.அவர்கள் பின்னாடி சென்று கொண்டிருக்கின்றோம்.

இப்படிப் பிறரை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்மை நாம் நம்புகின்றோமா…! நமக்குள் இருக்கும் ஆற்றலை அறிந்திருக்கின்றோமா…!

1.நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.நமக்குள் உயிராக இயக்கும் “நம் உயிரை நம்பி”
மகரிஷிகள் காட்டிய அருள் வழியினைப் பற்றுடன் பற்றி அருள் ஞான சக்தியைப் பெற முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.

நம்மையறியாது வரும் தீமைகளை நீக்கும் ஆற்றலை நாம் பெற முடியும் என்ற இந்த உணர்வின் வேட்கை ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும்.

தீமையை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வின் ஏக்கம் கொண்டு இந்த வாழ்க்கை வாழ்ந்தால் நம்மை அறியாது வந்த தீமைகளை நிச்சயம் அகற்றிட முடியும்.

யாரோ செய்வார் எவரோ செய்வார் என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

ஏனென்றால்
1.”நீங்கள் எண்ணியதைத்தான்” உங்கள் உயிர் இயக்குகின்றது.
2.அதனின் உணர்வின் துணை கொண்டு தான்
3.உடலுக்குள் சென்று அது இயக்குகின்றது. 

உங்களை நீங்கள் நம்புங்கள்