சாதாரணமாக
மற்றவர்களுடன் பேசும் பொழுது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள்
தோன்றி அதனாலே அந்த மாதிரியான எண்ணங்கள் உமிழ்நீராக மாறி நம் உடலுக்குள் வித்தாக
மாறி நோயாக மாறுகிறது.
ஒரு தடவை
சஞ்சலப்படுகின்றோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள்
பதிவாகி இப்படிப் பலவும் சேர்ந்து விடுகின்றது.
உதாரணமாக சில
இடங்களில் பார்த்தோம் என்றால் பக்கத்து வீட்டுக்காரருக்கும் அவர்களுக்கும் ஆகாது.
பக்கத்து
வீட்டுக்காரர் எனக்குப் பல வகைகளிலும் இடைஞ்சல் செய்கிறார். அதைப் பற்றிக்
கேட்டால் தகராறு செய்கிறார் என்பார்கள்.
ஆக அவர்கள் செய்யும்
தகராறுகளைப் பற்றி எண்ணும்பொழுது அந்த உணர்வுகள் இவருக்குள் வந்துவிடுகின்றது.
அவர்களைப் பற்றி எண்ணினாலே அல்லது அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனம் புரியாத
வெறுப்பு வரும்.
வெறுப்பான உணர்வுடன்
அவர்களிடம் பேசும் பொழுது அவர்களுக்கு இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் இவர் மீது
வெறுப்பு வரும். இதைத் தீர்க்கவே முடிவதில்லை.
ஆனால் இரண்டு பேரும்
சண்டையிடுவதனால் என்ன இலாபம் அடைகிறார்கள்...!
இவர்கள் சங்கடமாகவும்
ஆத்திரமாகவும் பேசி அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் இங்கே
உமிழ்நீராகி இவர்கள் உடலில் வியாதியாக மாற்றிக் கொள்கிறார்கள்.
எதிர்நிலைகளில்
பேசுகின்றவர்களும் அதே போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உமிழ்நீராக மாறும் போது
அவர்கள் உடலிலும் நோயாக மாற்றிக் கொள்கிறார்கள்.
இரண்டு பேருமே
நல்லதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இரண்டு பேரும் அவர்கள்
உடலில் வியாதியைத்தான் சேர்த்துக் கொள்கின்றார்கள்.
நிலத்தில் ஒரு விஷச்
செடியைப் பதியச் செய்தால் காற்றிலிருந்து அது தன் இனமான விஷத்தின் சத்தைக்
கவர்ந்து வளர்கின்றது.
இதைப் போன்று தான்
வெறுப்பான எண்ணங்களைப் பதிவு செய்யும் பொழுது அதே எண்ணங்களை எடுத்து இரண்டு பேரும்
வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
இதைத் தடுக்க என்ன
செய்ய வேண்டும்?
ஒருவருடைய சொல்
நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்றால் “ஓ...ம் ஈஸ்வரா...” என்று புருவ
மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி
செய்து
1.அதைத் தடுத்துக்
கொள்ள வேண்டும்.
2.பின் நம் சொல்
அவர்களுக்கு நல்லதாகப் படவேண்டும்.
3.எல்லோருக்கும்
நல்லது செய்யக் கூடிய மனது வரவேண்டும் என்று எண்ணி
4.இந்த உணர்வலைகளைப்
பாய்ச்ச வேண்டும்.
அவர்கள் நம் மேலே
கோபமாகத் திட்டிக் கொண்டேயிருந்தாலும் கூட இந்த உணர்வுகள் அவர்களிடம் போய்ச்
சேர்ந்து நாம் பாய்ச்சிய நல் உணர்வுகள் அதை நல்லதாக்கச் செய்யும்.
நமக்குள் அந்தச்
சங்கடமான எண்ணங்கள் வந்து நம் உடலில் நோயாக மாற்றாது.
ஏனென்றால் நாம்
சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால் நம் வியாபாரமோ தொழிலிலோ மந்தமாகிவிடுகின்றது.
நம் குழந்தைகளிடமும் பக்குவமாக இருக்க முடியாது.
சமையல் செய்யும்
பொழுது சங்கடமான எண்ணத்தைக் கொண்டிருந்தால் சுவையாகச் செய்யும் நிலைகளை மாற்றிவிடும்.
அதே சமயத்தில்
ருசியாகச் சமைத்து வைத்திருந்தாலும் சங்கடமான எண்ணத்துடன் இருக்கும் பொழுது
சாப்பிட்டால் ருசி இருக்காது. ஆகாரத்திலுள்ள சத்தைப் பிரிக்காது.
அப்பொழுது அது நம்
உடலில் வியாதியாகவும் மாறிவிடுகின்றது. அதை மாற்றுவதற்காகத்தான் இந்தத் தியானப்
பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
மகரிஷிகளின் அருள்
சக்தி நாங்கள் பெற அருள்வாய் “ஈஸ்வரா...” என்று ஏங்கித் தியானியுங்கள்.
மகரிஷிகளின் அருள்
சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள். எங்கள்
உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் “ஈஸ்வரா...” என்று எண்ணுதல்
வேண்டும்.
மகரிஷிகளின் அருள்
சக்தியால் எங்கள் சொல்லும் செயலும் பிறருக்கு நல்லதாக இருக்க வேண்டும். பிறர்
என்னைப் பார்க்கும் பொழுது நல்லதாக இருக்க வேண்டும்.
வியாபாரம் செய்யும்
பொழுது என்னிடம் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்
அவர்கள் வளமாக இருக்க வேண்டும் “ஈஸ்வரா...” என்று எண்ண வேண்டும்.
இவ்வாறு எண்ணித்
தியானம் செய்தீர்கள் என்றால் உங்கள் வாயில் சுரக்கும் உமிழ் நீர் சுவையுள்ளதாகச்
சுரக்கும். நீங்கள் சாப்பிட்ட ஆகாரத்திலுள்ள சத்தினைச் சீராகப் பிரிக்கும். உடல்
நலம் பெறுவீர்கள்.
இப்படி உங்கள் உயிரான
ஈசனிடம் நல்ல உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த குணத்தின் அடிப்படையிலேயே
உங்கள் இயக்கம் அமைகின்றது.
இதை ஒரு பழக்கமாக
வைத்துக் கொள்ளுங்கள்.