ஒரு நாடாவில் பதிவு செய்து கொண்டிருக்கும்போது,
இடைமறித்து மற்ற தேவையில்லாத சப்தங்கள் பதிவாகிவிட்டால் அந்த இடம் வந்தவுடன் “கரா…புரா…!”
என்று வரும் எதிர்மறையாகும்.
இதே போலத்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் எண்ணும்
எண்ணங்களும் உணர்ச்சிகளும் சுவாசத்தின் மூலமாக நம் உடலுக்குள் அலை அலையாகப் பதிவாகிக்
கொண்டேயுள்ளது.
அந்தப் பதிவின் அலைகள் கொண்டு நாம் நுகரும் ஆற்றல்களுடன்
மாறுபட்ட எண்ணங்களும் உணர்வுகளும் நமக்குள் இடைமறித்து வந்துவிட்டால் உயிரில் மோதப்படும்போது
அந்த உணர்ச்சியை மாற்றும். அது சீராக வராது.
1.ஏனென்றால் “காந்த ஊசி”போன்று
2.உராயும் உணர்வுகளைத்தான் உயிர் ஒலிகளாக எழுப்புகின்றது.
3.பதிவாக்கிய பின்பு அதனுடன் சேர்ந்த காந்தப்புலன்
அதைக் கவருகின்றது.
உயிருடன் உராயச் செய்யும் நிலையைத்தான்… “கண்ணன்
சங்கநாதம் ஊதியபின்… குருக்ஷேத்திரத்தில் போர் துவங்குகின்றது…” என்பார்கள். நமது உயிரிலே
பட்டவுடன் ஒலிகளை எழுப்புகின்றது. இந்த உடலிலே இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உயிரே
குருவாக இருக்கின்றது.
அப்பொழுது ஏற்கனவே நமக்குள் பதிவான நல்ல உணர்வுக்குள்
மாறுபட்ட நிலைகள் (உதாரணமாக) பகைமை உணர்வுகள் நமக்குள் வந்தபின் நமக்குள் அந்த உணர்வுகள்
என்ன செய்கின்றது?
குருக்ஷேத்திரப்போர் ஆகின்றது.
இந்த உடலைக் காக்க
1.நல்லவைகளுக்கு குருவாக இருப்பதும் உயிரே
2.கெட்டவைகளுக்கு குருவாக இருப்பதும் உயிரே
3.உருவாக்கிய நல்லவை கெட்டவை அனைத்திற்கும் உயிரே
குருவாக இருக்கின்றது.
ஆகவே எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதுவே குருவாக
வந்து அதன் செயலாக நம்மைச் செயலாக்கும்.
அதனால் தான் கீதா உபதேசத்தில் இந்த கண்ணின் செயலாக்கங்களை
நமக்குள் உணர்த்தியுள்ளார்கள். கண்கள் நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது.
பாதுகாக்கும் உணர்வு வந்தாலும் தீமையின் உணர்வை
எடுத்தால் அந்த உணர்வு கொண்டு தீமையைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் நமக்குள் வளர்ச்சியாகும்.
அதே தீமையை நினைவாக்கும்.
தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால்
அருள் ஞானியின் உணர்வை நுகர வேண்டும். நுகர்ந்தால் பாதுகாக்கும் நிலைகள் வந்து தீமைகளை
அகற்றும்.
அதை நாம் குருவாகச் செயலாக்க வேண்டும். இதையெல்லாம்
நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.
ஏனென்றால் நாம் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்தவர்கள்.
மனிதனானபின் தீமையை அகற்றிய துருவ மகரிஷியின் உணர்வை நீங்கள் பெற அந்தத் தகுதியைப்
பெறும் நிலைகளுக்குதான் இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
1.எதிர்நிலைகள் உங்களை எப்படித் திருப்புகின்றது…?
2.இதிலிருந்து நீங்கள் எப்படி விடுபட வேண்டும்…?
என்ற
3.மெய்யுணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.
நீங்கள் பள்ளியில் பாடங்களைப் படித்தாலும், பயிற்சியின்
நிலைகளுக்கு (PRACTICAL) என்று தனியாகக் கொடுப்பார்கள்.
இயந்திரத்தைச் செய்யக் கற்றுக் கொள்வார்கள். இயந்திரத்தை
இயக்கும் நிலைகளுக்கும் கொண்டு வருவார்கள். எல்லாம் கற்றுக் கொள்வோம்.
1.இயந்திரம் தவறாகி விட்டால் அது என்னென்ன வழிகளில்
தவறாகும்?
2.இதனுடைய தவறுகளை எப்படிச் சரி பண்ணுவது? என்று
விஞ்ஞானிகள் கொடுப்பார்கள்.
பாட நூல்கள் கொண்டு ஒரு இயந்திரத்தைச் செய்வதற்காக
நீங்கள் செயல்பட்டாலும் அதனுடைய செயலாக்கங்கள் வரப்படும்போது இதிலே தவறுகள் இழைக்கப்படும்போது
1.தவறுகளை எப்படி நீக்குவது? என்ற நிலையை அறியாவிட்டால்
2.உருவாக்கினாலும் பயன் இல்லை.
அதைப் போன்று உங்களுக்குள் சீரும் சிறப்பும் பெறக்கூடிய
தகுதி இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் இடைமறித்துத் தவறாகி விட்டால் அந்தத் தவறு எப்படி
இயக்குகிறது…? என்று அந்த உணர்வுகள் தெரியவரும்.
சாமி சொன்னார். அவர் பெறுவார். “நாம் எப்படிப் பெறமுடியும்…!”
என்று எண்ணிவிடாதீர்கள். உங்களுக்குள் ஒவ்வொன்றாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.
உயர்ந்த ஞானத்தைப் பெற்றாலும் அவ்வப்பொழுது இடைமறித்துத்
தீமை செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்த அந்த அருள்ஞானத்தை நீங்கள் பெருக்குதல் வேண்டும்.
அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்றால் நம் கண்களின்
நினைவைக் கூர்மையாக விண்ணை நோக்கிச் செலுத்தி துருவ மகரிஷியின் உணர்வுகளைச் சுவாசிக்க
வேண்டும்.
அவனால் உருவான உணர்வின் தன்மை இன்றும் ஒளிச்சுடராக
வருகின்றது.
1.துருவ நட்சத்திரம் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
2.அதை நுகரப்படும்போது இளம் நீல நிறமான ஒளி வீசும்.
3.விஷத்தின் தன்மை ஒடுங்கிய பின் அதன் உணர்வின்
ஒளியாகத்தான் காட்டும்.
4.கார்த்திகை நட்சத்திரமும் இதே போன்றுதான் தெரியும்.
ஆகவே இந்த வாழ்க்கையில் வரும் எத்தகைய விஷத்தின்
தன்மையையும் ஒடுக்கி நாம் ஒளியாக மாற்றும் திறன் கொண்டவர்கள் என்று அறிதல் வேண்டும்.
துருவ மகரிஷியின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று ஏக்க
உணர்வினை நமக்குள் செலுத்துதல் வேண்டும். அதை அதிகமாக எடுத்தால் அதன் அவதாரமாக உயிர்
ஒளியாக மாறும். இதில் ஒன்றும் சிரமப்பட வேண்டியதில்லை.
எமது அருளாசிகள்.