ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 17, 2017

தனக்கென்று கேட்காது பிறரை வாழ்த்தும் நிலைகள் வரும் பொழுது தியானம் தவமாகின்றது – மகா ஞானிகளுடன் நாம் ஒன்றுகின்றோம்

யாம் உபதேசித்த உணர்வின் எண்ணம் கொண்டு கண்களை மூடி ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வின் ஈர்ப்பின் அலைகள் உங்களுக்குள் வரும்.

அந்த அலைகள் வரும் போது புருவ மத்தியில் “குறு…குறு…,” அந்த உணர்ச்சிகள் தெரியும். சிலருக்கு ஒளி அலைகள் வருவதையும் பார்க்கலாம்.

தியானித்து முடிந்த பின் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்துள்ள அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று எண்ண வேண்டும், எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டும்.

இந்த உணர்வின் தன்மை ஏகோபித்த நிலைகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறி “செவிப்புலனறிவில்…” தாக்கப்படுகின்றது.

1.அந்த உணர்வின் நிலைகள் உந்தப்பட்டு
2.உணர்வின் தன்மைகள் சுவாசிக்கப்பட்டு
3.சுவாசித்த உணர்வுகள் தன் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

அந்தப் பதிந்த வலுவின் தன்மையைச் சேர்ப்பிக்கும் நிலை தான் “தியானம்” என்பது.

ஒரு நூல் அது எத்தகைய நூலாக இருந்தாலும் அது பலவும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றாகும் பொழுது வலுப்பெறுவது போல் அனைவரும் சேர்த்து உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பபடும் பொழுது ஆற்றல்மிக்க சக்தியாகின்றது.

பல (100) இசைக்கருவிகளை ஒன்றாக இணைத்து அது இசையாக வெளிப்படுத்தும் பொழுது ஒரு காந்தப் புலன் அதற்குள் கவர்ந்து அனைவரும் சேர்ந்து அந்த அனைத்து வாத்தியங்களும் வாசித்த உணர்வுகள் ஒரு அணுவிற்குள் சிக்கி அந்த அணுவின் தொடர் வரிசை செல்லும் பொழுது அந்த நாதத்தின் இனிமையை நாம் நுகர முடிகின்றது.

இதைப் போலத்தான் வலு கொண்ட உணர்வின் எண்ணத்தின் துணை கொண்டு நாம் அனைவரும் அந்த ஞானிகளின் உணர்வைத் தனக்குள் ஏற்றி அதனைப் பருக வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது அதைக் கவரும் ஆற்றல் நாம் பெற்றாலும் கவர்ந்த உணர்வுகள் நமக்குள் பங்கிட்ட நிலைகள் கொண்டு நமக்குள் வலுவாக ஏறுகின்றது.

ஆயிரக்கணக்கோர் கூடி உணர்வின் தன்மை இதைத் தூண்டச் செய்து கூட்டுத் தியானமாக அமைத்து அதனின் வலுவைச் சேர்க்கும் “அருள் ஞான வித்தாகப் பதியச் செய்கின்றோம்”.

1.அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் வாழ்க்கையில் மன பலமும் மன வளமும் பெறவேண்டும்
4.தியானமிருக்கும் குடும்பங்களில் உள்ளோர் தொழில் வளமும் செல்வமும் செல்வாக்கும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும் என்று ஒவ்வொருவருமே இதை எண்ண வேண்டும்.

ஒருவர் சொல்ல எல்லோரும் இதைச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அனைவரும் தனக்கென்று கேட்காது… “பிறரை வாழ்த்தும் நிலைகள் நாம் எண்ணும் பொழுது” அந்த மகா ஞானியின் உணர்வைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.

அதனின் துணை கொண்டு நாம் இந்தப் பூமியின் நிலையில் மனிதனின் ஈர்ப்புக்குச் சிக்காது விண் சென்ற அந்த உணர்வின் சக்தியை நமக்குள் அதைக் கவர முடியும். நமக்குள் வலுவாக ஏற்றிக் கொள்ள முடியும்.