ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 28, 2017

உங்கள் நினைவாற்றல்…” ஞானிகளின் பால் இருந்தால் ஞானிகள் கண்டுணர்ந்த மெய்ப்பொருளை எளிதில் காண முடியும்

ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
1.புலனறிவுகள் ஐந்திலும்
2.கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி
3.உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.

நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம்.

இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது.

அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெறவேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுதுதான் நீங்கள் அந்த நிலைகளைக் கேட்க முடியும். “கேட்க வேண்டும்” என்ற விருப்ப நிலைகள் வரப்படும் பொழுதுதான் இது உங்களுக்குள் பதிவாகின்றது.

ஆனால் வேறு பக்கம் எண்ண அலைகளைப் படரவிட்டு எண்ணிக் கொண்டிருந்தால் யாம் உபதேசிப்பதைக் கவராது உங்கள் ஈர்ப்பினுடைய நிலைகள் தடையாகும்.

உதாரணமாக பேசும் பொழுது மைக்கை (MIC) அந்தப் பக்கம் திருப்பி வைத்துவிட்டால் சப்தம் குறையும். அதைப் போல
1.மற்ற உணர்வின் நிலைகளை நமக்குள் நினைவுபடுத்தும் பொழுது
2.நமது உணர்வுகள் நாம் பேசும் உணர்வலைகள் ஒன்றுக்கொன்று மாறுபடப் போகும் பொழுது
3.”அரத்தங்கள்…” உங்களுக்குள் பதிவாகாது
4.இதைப் படித்திருந்தாலும் கேட்டிருந்தாலும் இதற்குப் பின் “ஞாபக சக்தியும்” வராது.

அதனால் அர்த்தமற்ற உணர்வின் நிலைகளாகிப் போய்விடும்.  நீங்கள் தியானமிருக்கும் பொழுது இதை எண்ணினாலும் அந்தச் சக்திகள் கிடைப்பதும் அரிதாகிவிடும்.

ஏனென்றால் காற்றிலிருப்பதைச் சமப்படுத்திய நிலைகள் கொண்டு, உங்களுக்குள் பதியச் செய்திருந்தால்தான் நீங்கள் இதை “இயக்க…” முடியும்.

யாம் குருநாதர் மூலம் “அதைத் தெரிந்து கொண்டோம்… இதை அறிந்து கொண்டோம்…” என்று சொல்ல வரவில்லை.

அருள் ஞானிகள் தமக்குள் வளர்த்த அந்தச் சக்தி வாய்ந்த ஆற்றல்களை அந்த ஞான வித்துக்களை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.

அந்த ஞான வித்து உங்களுக்குள் வளர்ந்தால் அந்த ஞானிகள் எதைச் செய்தார்களோ அதை நீங்களும் செய்வீர்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை ஒவ்வொருவரும் தமக்குள் பெருக்கச் செய்ய வேண்டும். அதை உடலுக்குள் அணுக்களாக விளையச் செய்ய வேண்டும்.


விளைந்தால் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உயிருடன் ஒன்றிய நிலையாக என்றுமே ஒளியின் சரீரம் பெறலாம்.