ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2017

“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று எல்லோரும் சேர்ந்து “அடிக்கடி” சொல்லச் சொல்கிறோம் ஏன்?

“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…,” என்று நாம் அடிக்கடி எல்லோரும் சேர்ந்து ஐக்கியமாகச் சொல்கிறோம்.

அப்படிச் சொல்லும் பொழுது சிலருடைய குரல் வித்தியாசப்பட்டாலும் சுருதி பேதங்கள் இருந்தாலும் ஏற்ற இறக்கம் இருந்தாலும்
1.அது மற்ற குரலுடன் இணைந்து
2.தனித்துப் பிரித்துக் காட்டாதபடி
3.சிறிது தொனியைக் குறைத்தால் இனிமையாக இருக்கும்.

ஒருவர் பாடுகிறார் என்றால் அதனுடன் இணைந்து மற்ற வாத்தியங்கள் வாசிக்கும் போது பலவிதமான நாதங்கள் வெளிப்படுகின்றது. அவை அனைத்தையும் “ஒருங்கிணைத்து” இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.

அதைப் போல பலவிதமான நிலைகளில் நாம் வந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்லும் பொழுதே
1.எல்லோருடைய எண்ணங்களும்
2.நாம் எழுப்பும் குரல் ஒன்றி இருக்க வேண்டும்.

“ஓ..ம்” என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிரைக் குறிப்பிடுகின்றோம்.

நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர். ஜீவனான பின் உடலாக இணைக்கச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓ..ம் ஈஸ்வரா.

“ஈஸ்வரா..,” என்பது இயக்கச் சக்தி.

“குருதேவா…” நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.

ஒவ்வொரு சமயமும் யாம் உபதேசிக்கும் பொழுது இதைச் சொன்னாலும் கூட அடுத்தாற்போல் “ஓ..ம்” என்ற பிரணவத்தின் தன்மை என்ன என்று திருப்பிக் கேட்பார்கள்.

“ஓ..ம்” என்றால் எங்கேயோ எண்ணி பிரணவம் என்று எதையோ எண்ணிக் கொண்டுள்ளோம். அப்படிப் பழக்கப்பட்டதால் இப்பொழுது யாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் கூட அதை மனதில் பதிய வைக்க முடியவில்லை.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.நாம் எதைப் பதிவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் இணைக்க வேண்டும்…? என்பதை அறிந்து
3.அதற்குத்தக்க சரி செய்து கொள்ள இது உதவும்.

யாம் இங்கே உபதேசிக்கின்றோம் என்றால் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் இந்த “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.

இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் எண்ணும் பொழுது (அல்லது சொல்லும்போது) நம் உயிரின் இயக்கம்
1.மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
2.அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
3.நம்முடைய எண்ண ஏக்க அலைகள்
4.உபதேசத்தின் வாயிலாக வரும் ஞானிகளின் உணர்வுகளை
5.எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.

ஏனென்றால் ஒருவர் நம்மைத் திட்டினால் அதை நாம் கூர்மையாக எண்ணினால் அந்தத் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்டவுடனே வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

இந்த வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அதன் வழிகளில் தான் நடக்கின்றோம்.

அடுத்து அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உடலில் அது மற்ற உணர்வுடன் படரச் செய்யப்படும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் அதைச் சரியாக இயக்க முடியாத நிலைகள் செயல்படுத்திவிடும்.

இதைப் போன்று “எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு.

1,அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு
2.மெய்ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான்
3.நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக
4.“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

வெறுமனே சொல்வதால் பலன் இல்லை.

விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் சொல்லும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.