நாம் ஒவ்வொரு நாளும்,
காலை துருவ தியானம் செய்வதனால், காலையிலிருந்து இரவு வரையிலும், பலருடன் பல உணர்வுடன் தொடர்பு கொள்ளும் நாம், அத்தகைய
உணர்ச்சிகள் நமக்குள் வளர்ச்சியடையாது, தடுக்க முடிகின்றது.
அவ்வாறு தியானித்தபின்,
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் எண்ணி, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ண
வேண்டும். நம் குழந்தைகளும், நம் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும், அந்த துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அடுத்து, அந்த துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர
வேண்டும் என்று எண்ண வேண்டும். பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், தியானமிருக்கும் அனைத்துக் குடும்பங்களிலும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று, அவர்கள்
வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள், சாப வினைகள், பாவ வினைகள், பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகன்று, அவர்கள் வாழ்க்கையில் உடல் நலம், மன பலம் பெற்று, தொழில் வளம்
பெருகி, செல்வம்
பெருகி, செல்வாக்கு, சொல்வாக்கு பெற்று, அனைவரும்
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும் என்று, பிறரை, இதைப்
போல எண்ணி ஏங்குதல் வேண்டும்.
அனைத்துக் குடும்பங்களிலும் வாழ்ந்து வரும் கணவன் மனைவி
இருவரும்,
வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்து,
நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர்
மதித்து நடந்து,
சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு,
கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி,
இரு உயிரும் ஒன்றென இணைந்து,
இல்லற வாழ்க்கையில் இருளை நீக்கி,
நஞ்சினை வென்று, பேரொளியாக்கி மகிழ்ந்து வாழ்ந்து,
அவர்களது பார்வையில்
அவர்கள் குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள்,
ஞானக் குழந்தைகளாக, கல்வியில் ஞானிகளாக,
உலக ஞானம் பெற்று,
உலகைக் காத்திடும் உத்தம ஞானிகளாக வளர வேண்டும் என்று
இந்த உணர்வை நாம் ஏங்கி எண்ணுதல் வேண்டும்.
இதைப் போன்று நம் நினைவினைப் பாய்ச்சும் பொழுது, இந்த உணர்வின் சக்தி வளர்ந்து,
நம்முடைய பார்வை, குழந்தைகளை
நலமாக்கவும்,
நம்முடைய பார்வை
நண்பர்களை உயர்வாக்கவும்,
நண்பர்களுடைய பார்வை
நம்மிடையே மதித்து நடக்கும் உணர்வுகளாகவும்,
நம்மை அறியாது வரும் இருளை அகற்றும் சக்தியாகவும்,
அனைவரும் பெறுகின்றோம்.
நமது குரு காட்டிய அருள் வழியில், மெய்ஞானிகளின் அருள் சக்தியை நாம் பெற்று, அருள் வழியில் இந்த வாழ்க்கையை வாழ்ந்து, நமது எல்லையான
கடைசி எல்லை என்ற பிறவா நிலை அடைதலே, இந்த தியானத்தின் நோக்கம்.
அனைவரும்
அருள் ஒளி பெறுக
அனைவரும்
அருள் ஞானம் பெறுக
அனைவரும்
இந்த வாழ்க்கையில்
இருள்
நீக்கும் சக்தி பெறுக.
ஓம்… ஈஸ்வரா
குருதேவா.