1. சுடுகாட்டில் எரிக்கும் பொழுது, அடித்தாலும் பார்த்துக் கொண்டுதான்
இருக்கின்றோம்
இப்பொழுது இந்த உடலில் நாம் மெய்யுணர்வை அறிந்தபின், எவ்வுணர்வைச்
சேர்க்க வேண்டும்? என்று உங்கள் மனதில் நிலை நிறுத்தி, இந்த உடலில் எத்தனை காலம் இருக்கப்போகிறோம்?
என்று நினைத்துப் பாருங்கள்.
வாழ்க்கையிலே நாம் மனிதனாக இருக்கும்போது ஒருவர்
“சுருக்” என்று சொன்னால் தாங்க முடியவில்லை.
இந்த உடலைவிட்டு இந்த ஈசன் (உயிர்) வெளியிலே சென்றபின்,
தூக்கி வெளியிலே போட்டுவிடுகிறார்கள்.
சுடுகாட்டில்
எரிக்கும் பொழுது, உடலை எத்தனை தடவை பிரட்டினாலும், அடித்தாலும், நாம் கண்ணிலே தான்
பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ரோஷம், மானம் எல்லாம் இந்த உடலோடு இருக்கும் பொழுதுதான்
பார்க்கின்றோம். ஆனால் சுடுகாட்டில், நமக்கு முன்னாடி அத்தனையும் செய்யும்போது பார்த்துக்
கொண்டுதான் இருக்கின்றோம்.
ஒருவன் இறந்துவிட்டான், உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்
சென்றால், அங்கே உடலை அறுத்துத்தான் அனுப்புவார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர்
அத்தனை ரோஷப்பட்டும் என்ன பண்ணப்போகிறோம்.
2. சவமாகும் இந்த உடலுக்காக வேண்டி, ரோஷப்பட வேண்டியதில்லை
சிவம் சவமாகின்றது. ஜீவன் சவமாகும்போது என்னவாகின்றது?
ஆகவே, சவமாகும் இந்த உடலுக்காக
வேண்டி, நாம் ரோஷப்பட வேண்டிய அவசியமே இல்லை, அந்த ரோஷத்தின் நிலைகளில், நமக்குள்
எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, நம்மை அழித்துவிடுகின்றது.
எனவே, அந்த ரோஷப்படும் உணர்வைத் தவிர்த்துவிட்டு,
மெய் ஒளியின் தன்மையை நமக்குள் கூட்டும்போது,
நமக்குள் சொல்லின்
சுடரின் தன்மை
பிறிதொன்றைப்
புனிதமாக்க உதவும்.
ஒவ்வொரு நிமிடமும், இந்த நிலையை நாம் பெறவேண்டும்.
நம்மை வேறொரு ரூபத்திற்கு உருவாக்கும், இந்த ரூபத்தின்
செயல் நமக்கு வேண்டாம். மனித உணர்வை விட்டு, வேறொரு உருவை மாற்றிவிடும். வேறொரு உருபெற்றபின்,
அந்த உணர்வுக்குத் தக்கவாறுதான், அந்த உடலில் வேலை செய்யும். எந்த உணர்வைச் சேர்த்துக்
கொண்டோமோ, அந்த நினைவு கொண்டு அது வேலை செய்யும்.
3. உடலைவிட்டுச் சென்றால் ஒளியின் தன்மை பெறமுடியும்
ஆகையினாலே, இதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்து, சொர்க்கப்பூமியான,
இந்த மனித உடல் கிடைத்தபின், இதை அசுத்த பூமியாக மாற்ற வேண்டாம்.
சொர்க்கலோகம் இந்த சரீரத்தில் உண்டு. சொர்க்கலோகமாக நாம்
மாற்றலாம். அந்த சொர்க்கலோகத்தை ஒளியாக மாற்றும் பொழுது உடலைவிட்டுச் சென்று, ஒளியின் தன்மை பெறலாம்.
தியானமிருக்கும்
அனைவருக்குமே தெரியும்.
இருட்டிலே கண்ணைத்
திறந்து பார்த்தால்,
நம் உடலிலிருந்து “பளீர்” என்று வெளிப்படும் வெளிச்சத்தை, நாம் பார்க்கலாம்.
நாம் எந்த அளவுக்கு எடுக்கின்றோமோ, அந்த அளவுக்கு அந்த
உணர்வின் சக்தி நமக்குள் வளர்கின்றது. அதை ஒவ்வொருவரும் நாம் உணரலாம். ஆகவே, நாம் இதை
சுலபத்தில் கிடைக்கின்றது என்று அலட்சியப்படுத்தி விடவேண்டாம்.
ஏனென்றால், எத்தனையோ கடினத்திற்குப் பின்தான் இது வருகின்றது.
ஆக, பயன்படும் நிலைகளுக்கு நம் உணர்வின் ஆற்றலை நாம் பெறவேண்டும்.
நீங்கள் அனைவருமே, நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி,
அவரின் அருள் துணை கொண்டு,
மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெற்று,
இருள் சூழச் செய்யும் இருளை நீக்கி,
அந்த ஒளியின் நிலைகளில்
வழியறிந்து செயல்படும் ஆற்றலைப் பெற்று,
உங்கள் பேச்சும், மூச்சும்,
பார்ப்போர் அனைவருக்கும்
நன்மை பயக்கட்டும். அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது, நல்ல உணர்வாக நமக்குள் சென்று, அது ஒளியின் சுடராக
அது செல்லட்டும்.