ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 8, 2013

ஞானிகள் உணர்த்திய இயல், இசை, நாடகம்

உதாரணமாக, இன்று நமது பூமியில், சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பம், காந்தம், விஷம், அது நமது பூமியின் ஈர்ப்பிற்கு வரும்பொழுது, இன்று வேப்ப மரத்தின் சத்தினைக் கவர்ந்துக் கொண்டால், அந்த கசப்பின் உணர்வை ஊட்டும் அணுவாக மாறுகின்றது.

அத்தகைய அணுவாக மாறிவிட்டால், அதன் மணத்திற்கு “ஞானம்” என்று பெயரைச் சூட்டுகின்றார், அகஸ்தியர். அதன் வழியில், அதன் இயக்கமாக அந்த அணு இயங்கத் தொடங்கி விட்டால் “காயத்ரி”  என்று பெயரை வைக்கின்றார். “காயத்ரி” என்றால் அதன் வலுவாக அந்த அணு இயக்குமென்று பொருள்.

இவ்வாறு, அந்த மரத்தில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால், நிலத்தின் ஈர்ப்பின் துணை கொண்டு, அந்த வித்தில் உள்ள உணர்வுகளின் துணை கொண்டு, அந்த வேம்பின் கசப்பான உணர்வை நுகர்ந்து, அதுவும் வேம்பின் நிலைகள் கொண்டு வளர்ச்சி பெறுகின்றது.

இதைப் போன்று, ரோஜாப் பூவும் தன்னில் வளர்த்துக் கொண்ட உணர்வின் துணை கொண்டு, தனது வித்தின் ஈர்ப்பிற்கு, அதன் உணர்வின் சத்தினைக் கொடுத்து, ரோஜாப்பூ என்ற வளர்ச்சிகள் பெறுகின்றது.

இதைப் போன்று, விஷச் செடியும் வளர்ச்சி பெற்று, அதில் விளைந்த வித்தை ஊன்றினால், நிலத்தின் ஈர்ப்பின் தன்மை கொண்டு, அந்த விஷச்செடி வளர்ச்சி அடைகின்றது.

இப்பொழுது, வேம்பின் கசப்பின் சத்தைக் கவர்ந்துக் கொண்ட காந்தப் புலனறிவு, இந்த வேப்ப மரத்தைக் கடந்து செல்லும்போது, இதன் வலு கொண்டு அது இயங்கத் தொடங்கி விடுகின்றது நமது பூமியில். இதைப் போன்றே, ரோஜாப்பூவின் உணர்வுகளையும் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து தன் அலைகளாக, நம் பூமியில் பரவுகின்றது. இதைப் போன்றே, ஒரு விஷச் செடியில் விளைந்த உணர்வின் சத்தை, இதே சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து, அலைகளாக மாற்றிவிடுகின்றது.

இருப்பினும், வேம்பின் (கசப்பு) உந்து விசையின் உணர்வைக் கண்டு, ரோஜாப்பூவின் உணர்வின் (துவர்ப்பு), இதனின் ஈர்ப்பிற்கு, இதனைக் கண்டு, நகர்ந்து ஓடுகின்றது.

ஓடும் பாதையில், விஷச் செடியிலிருந்து உமிழ்த்தும் சக்தியில் மோதியபின் சுழற்சி அடைகின்றது. விஷத்தின் தாக்குதலால், அதைத் தாங்காது சுழலத் தொடங்கி விடுகின்றது.

அவ்வாறு, சுழற்சியில் சுழன்று கொண்டிருக்கும் பொழுது, வேம்பின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு, ஒன்றுடன் ஒன்று மோதுகின்றது.

இவ்வாறு மோதலில் ஏற்படும் வெப்பத்தால், இவை அனைத்தும் அதாவது, வேம்பின் உணர்வலைகள் 10 சதவீதமும், ரோஜாப்பூவின் உணர்வலைகள் 3 சதவீதமும், விஷச் செடியின் சத்து 1 சதவீதமும், மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி, இணைந்து விடுகின்றது. அதற்கு ”பரப்பிரம்மம்” என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றனர்.

ரிக், சாம, அதர்வண, யஜூர் மீண்டும் சாம என்று, வேதங்கள் கூறுகின்றன. உதாரணமாக வேம்பும் ரிக், ரோஜாப் பூவும் ரிக், விஷச் செடியும் ரிக். இதிலிருந்து வரக்கூடிய மணங்கள், வேப்பமரம் கசப்பு உந்தித் தள்ளும் தன்மை கொண்டது, ரோஜாப்பூ, நறுமணம் கொண்டது.  ஒரு விஷச் செடியின் சத்தோ, உணர்ச்சியைத் தூண்டும் அரிப்புத் தன்மை கொண்டது.

இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது, இந்த உணர்வின் தன்மையை உணர்த்துவதற்காக, இதற்கு “சாம” அதாவது “இசை”. உதாரணமாக, இப்பொழுது, வேம்பின் மணத்தை நுகர்ந்தால் நாம் எப்படிச் சொல்கின்றோம். “ஐய்யய்யய்ய” கசக்கின்றது என்று சொல்கின்றோம்.

ரோஜாப்பூவின் மணத்தை நுகர்ந்தால், “ஆகா! நறுமணம்” என்று சொல்கின்றோம். நுகர்ந்தறியும் உணர்வை, “சாம” என்றாலும் “இசை” என்று காரணப் பெயரை சூட்டுகின்றார்கள்.
இவ்வாறு மூன்றும் மோதும் பொழுது, அதனதன் குணங்களையும், அதனதன் மணங்களையும் இழக்கின்றது. ஒன்றாக இணையப்படும் பொழுது, “அதர்வண” என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

வேம்பின் சத்து இழக்கப்படுகின்றது.
ரோஜாப்பூவின் மணமும் குறைக்கப்படுகின்றது.
விஷச் செடியின் அரிப்புத் தன்மையும் குறைக்கப்படுகின்றது.
இவ்வாறு மூன்றும் இணைந்து, ஒன்றாக இணைக்கப்படும் பொழுது, இதில் எந்தெந்த அளவுகோல் கொண்டு, இந்த உணர்வுகள் கலந்துள்ளதோ, எத்தகைய மணங்கள் இதனுடன் கலந்ததோ, அதன் வழிப்படி அது நுகர்ந்து, அதன் உணர்வுக்கு ஒப்ப, மீண்டும் ஒரு புதுச் செடியாக உருவாகின்றது. அதாவது, இத்தகைய நிலை பெற்ற உணர்வுகள், “கருவேப்பிலையாக” அது உருமாறுகின்றது.

ஆகவே, இவ்வாறு உருப்பெறும் உணர்வுகள்
நாம் உணர்வதற்காகத்தான், ”இயல், இசை, நாடகம்”.
இயல்பாகவே அந்த உணர்வுகள் இசையாகப்படும்போது,
இந்த உணர்வுகள் கலந்தபின், அதன் ரூபங்கள்
எவ்வாறு மாறுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குகின்றது வேதங்கள்.

ஆக, கருவேப்பிலையை எடுத்துக் கொண்டால்,
சிறிது கசப்பும்,
சிறிது நறுமணமும்,
சிறிது அரிப்பும் இருக்கும்.
ஆகவே, இதைப்போன்றுதான் உலகில் மாற்றங்கள் ஏற்பட்டன என்பதனைத் தெளிவாக்குகின்றார், துருவனானபின் துருவமகரிஷி.