ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 27, 2013

அப்பொழுதே ஜீரணமாகிவிட்டான் வாதாபி - அகஸ்தியன்

நட்சத்திரங்களின் கதிரியக்க மின்னல்களை
தமக்குள் அடக்கிடும் உணர்வின் தன்மை வரும்பொழுது,
எதையும் வென்றிடும் தன்மையை அகஸ்தியர் பெற்றார். அவர் எதையாவது உற்று நோக்கி உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால் அதனை கருக்கிவிடும்.
வாதாபி என்ற ஒருவன் அசுர குணம் கொண்ட ராட்சஸன், அவனுடைய சகோதரனும் ஒரு ராட்சஸன். இவர்கள் இருவரும், இருவரில் ஒருவர் ஆடாக உருமாறுவதும், பின் ஆடாக இருப்பவனை வெட்டி சமைத்து விருந்தாளிக்கு உணவாக பரிமாறுவதும், உணவாக உட்கொண்டபின், வாடா. வாதாபி …“ என்றால் சாப்பிட்டவரின் குடலைப் பிளந்து வெளியே வந்து, விருந்தாளியை உட்கொள்வதும் என்ற நிலையில் காவியத் தொகுப்புகள் உண்டு.

மலைவாழ் பகுதிகளுக்கு வந்து, பேரருள் பெறவேண்டும் என்று எண்ணி வருபவர்களை, இப்படி வேட்டையாடிக் கொன்று புசித்துள்ளார்கள். அகஸ்தியர் அப்பகுதிக்குச் செல்லப்படும்போது, வழக்கமான அதே முறையில் அகஸ்தியரை ராட்சஸர்கள், வரவேற்றுள்ளார்கள்.

அகஸ்தியர் அவர்கள் அளித்த உணவை உட்கொண்டபின், வாடா..வாதாபி.. என்றால், வன் அப்போதே ஜீரணமாகிவிட்டான் என்று கூறுகின்றார். 

ராட்சஸனுக்கு ஆத்திரம் வருகின்றது. உன்னைக் கொன்று புசிக்கப் போகிறேன் என்றான். ஆனால் அகஸ்தியரின் வேகத் துடிப்பு, பார்வை ராட்சஸனைக் கருக்கிவிடுகின்றது.

ஆக இதுபோன்று அகஸ்தியரை, அவர் கண்டறிந்த உண்மையின் நிலைகளை, காவியங்களில் ஓரிரு இடங்களில், மட்டும் காண்பித்து, அகஸ்தியர் போவார், வருவார் என்றளவில் மட்டுமே உரைத்திருப்பார்கள். அகஸ்தியர் அனைத்திலும் வல்லவர் என்று மட்டுமே, கூறி நிறுத்திவிடுவார்கள்.

இதனால்,  அகஸ்தியர் கண்டுணர்ந்த பேருண்மைகளை, நாம் அறிய முடியாமலே போய்விட்டது. இதனின் உண்மைகளை, நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

யாம் இவைகளை, உங்களுக்கு விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், குறைந்தது 10 வருடங்களாவது அமர்ந்து உங்களுக்கு உபதேசிக்க வேண்டும். நீங்களும் இது போன்று 10 வருடம் அமர்ந்து கேட்கவேண்டும். ஆனால் யாம், உங்களிடம் சுருங்கச் சொல்லிப் பதிவு செய்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மையினை, நீங்கள் உங்களிடத்தில் பதிவாக்கி, மீண்டும் நினைவு கூறப்படும்போது, உங்களில் பேரறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக, கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிலைகள் கொண்டு,
கம்ப்யூட்டர் பிற இயந்திரங்களை இயக்கவும், நிறுத்தவும்,
இயந்திரத்தில் பணிகளை மாற்றவுமான செயல்களை செய்விப்பது போன்று,
ஞானிகளின் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகும்போது,
ஒன்றை நாம் பார்க்கும்பொழுதே,
நன்மை தீமைகளை அறியச் செய்து,
தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வினை
உருவாக்கும் தன்மை உங்களிடத்தில் விளைகின்றது.