ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 18, 2013

மனிதனுக்கு ஜாதகம் உண்டா? தெளிவான விளக்கம்

 
1. மனிதனுக்கு ஜாதகம் கிடையாது, ஒன்றும் கிடையாது
ஜாதகத்தில் என்ன செய்கின்றோம்? 

இது இன்னது தான் என்று நிர்ணயித்து விடுகிறார்கள். அதை எடுத்து நல்ல நேரம், கெட்ட நேரத்தைச் சொல்கின்றார்கள். அந்த நல்ல நேரத்தில் ஒரு நிமிடம் மாறிவிட்டால், நிமிடம் மாறிவிட்டது என்ன ஆகுமோ? என்று எண்ணினால் தீர்ந்தது.

“தாலி கட்டும்போது நான் நினைத்தேன். ஒரு நிமிடம் மாறிவிட்டது” என்று அப்பொழுதே நிர்ணயம் பண்ணி, மாற்றி விட்டுவிடுகின்றார்கள். “அதனால் தான் இது ஆகிவிட்டது, போ” என்கின்றார்கள்.

ஏனென்றால் ஜாதகத்தை நமக்குள் நிர்ணயித்து விடுகிறோம். இந்தக் காலத்தில், கெட்ட காலம் வருகிறது என்று பதிவு செய்து விடுகின்றோம். அதில் தெரியாமல் இருந்துவிட்டால் பரவாயில்லை.

தெரிந்து போனால், “தீர்ந்தான் என்று எண்ணினான்”, அதனால்  தீர்ந்தான். அந்த உணர்வுதான் இதில் வரும். மற்ற உணர்வுகளுடைய நிலைகளை நாம் சமைத்தே கொடுக்கின்றோம்.

நீங்கள் தெரியாமல் செய்து பாருங்கள். ஒன்றுமே இல்லை.
செய்தபின், “என்னய்யா, இந்த நேரத்தில் செய்திருக்கிறாயே,
சரி என்னமோ”, என்று இரண்டு தரம் சொன்னால் போதும், மூன்றாவது இவர்கள் அந்த உணர்வை இழுத்து விடுவார்கள்.

இந்த மாதிரி காதிலே கேட்டால், உடனே ஆத்மசுத்தி செய்து கொள்ளுங்கள். ஆத்மசுத்தி செய்துவிட்டு, “மகரிஷிகளின் அருளால் எல்லாமே நன்றாக இருக்கும்” என்று சொல்லிப் பாருங்கள், அதை உடனே துடைத்து விடலாம்.

ஜாதகமும் மற்ற மதங்களும் கொடுத்த சட்ட நீதிகள் எப்படியென்றால், அந்த வரம்பிற்கு மேலே ஏதாவது தவறினால் போதும், “என்னப்பா, இப்படிச் செய்திருக்கிறாய்” என்று அடுத்தவர்கள் எல்லாம் கூடிவிடுவார்கள்.
விஷத்தை விதைத்துவிடுவார்கள்.
“இதுதான்” என்று வலுவூட்டுவார்கள். இதுதான் மதம்,
ஆக மெய்ஞானிகள் இதைச் சொல்லவில்லை.
மனிதனுக்கு ஜாதகம் கிடையாது. ஒன்றும் கிடையாது.
2. ஜாதகம் பூமிக்கு உண்டு, மரம் செடி கொடிகளுக்கு உண்டு
மரத்திற்கு ஜாதகம் உண்டு. பூமிக்கு ஜாதகம் உண்டு. இந்தக் கல்லுக்கு ஜாதகம் உண்டு.

ஏனென்றால், பூமி ஓடுகின்ற ஓட்டத்தில் ஓடிகொண்டே இருக்கின்றது. அந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் சக்தியும், நவக்கோள்களின் சக்தியும், எங்கெங்கே அதிகமாக உமிழ்கின்றதோ, அது போகின்ற பாதையில், அது வந்தால் ஒரு சீராக வந்துகொண்டே இருக்கும்.

அது எந்தெந்த அட்சரேகையில், எந்த அலைகள் பாய்கின்றதோ, அந்த அட்சரேகைக்குத் தக்கவாறு அங்கே மண் மாற்றம், மணங்கள் மாற்றம், குணங்கள் மாற்றம், செடி கொடிகளினுடைய நிலைகளில் மாற்றம், எல்லாமே ஏற்படுகின்றது.

மனிதன் இங்கிருந்து போகிறான், நல்லதை நினைத்துக் கொண்டு போகிறான், அடுத்து, இரண்டு பேர் கம்பைக் கொண்டு அடித்தவுடன், “ஆ…” என்று அலறினால் போதும் விஷம் இவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது. இவன் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்துக் கொண்டு சென்றாலும், என்ன பண்ண முடியும்?

நல்லதை நினைத்துக் கொண்டு ரோட்டில் போகும் போது, நான்கு அசம்பாவிதத்தைப் பார்த்தால் போதும், கண்ணுக்கு முன்னாடி கார் அக்சிடெண்ட் ஆகியதைப் பார்த்து “ஆ…” என்றால் போதும். நாக்கு உள்ளே இழுத்துக் கொள்ளும். பிரமை பிடித்துவிடும்.

அப்படியென்றால் இவனுக்கு என்ன ஜாதகம் இருக்கின்றது? ஆக இதையெல்லாம் மாற்றக்கூடிய நிலையை எண்ணுங்கள்.
ஜாதகம் மோசம் என்று சொல்லிவிட்டு
யாகத்தைச் செய்து நெருப்பை வளர்த்தால்,
ஒன்றும் பலன் இல்லை.

வளர்ச்சிகள் இப்படி இருக்கிறது என்று பூமியினுடைய காலகட்டத்தை வைத்தான். மரத்திற்குக் காற்றலைகள், அதற்குண்டான சத்தின் நிலைகளை இராசி என்றார்கள்.

அதாவது, பல நட்சத்திரங்களினுடைய உணர்வுகள் சமைத்து ஒன்றுடன் ஒன்று அமையப்படும்போது, பல நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து வரப்படும்போது, இந்த நட்சத்திரம் வேறு, மற்றொரு நட்சத்திரத்தை இராசி என்று சொல்கிறோமே.

இவையெல்லாம் ஒளிக்கூட்டங்கள். அது பலபல உணர்வுகள் சேர்த்து, அது வெளிப்படுத்தும். அந்த அலைகளுடன், இந்த அலைகள், சேர்க்கப்படும்போது அது இராசி.
மற்ற கோள்களுடன் சேர்ந்து, நேர் பார்வையில் வரப்படும்போது,
பூமியினுடைய அலைகளுடன் கலந்து,
அந்த அணுக்களினுடைய நிலைகள்
எப்பகுதியில் வருகின்றதோ,
அப்பகுதியில் உள்ள தாவர இனங்களுக்கு இராசி.
அந்தச் சத்து (உணவு) இல்லையென்றால் இங்கே தாவர இனங்கள் வாடும்.
3, மனிதன் எங்கிருந்தாலும் எடுக்க (சுவாசிக்க) முடியும்
இப்படித்தான் இராசியினுடைய தன்மைகளைச் சொன்னார்களே தவிர, இராசி நம் மனிதனுக்கு அல்ல. நாம் எங்கிருந்தாலும் எடுக்க முடியும்.

பூமி, சூரியன் இவையெல்லாம் ஓடும் பாதையிலே அதன் அருகிலே கிடைப்பதை எடுக்கும். ஆனால் மரம், தான் இருந்த இடத்திலே கவர்ந்து கொள்கிறது.

அதைப்போல, மனிதன் இங்கிருந்து போகும்போது எத்தனை கோள்களைச் (எத்தனையோ பேர்களைச்) சந்திக்கின்றான்? கோள்கள் 27 நட்சத்திரங்களைச் சந்திக்கின்றது. ஆனால் மனிதன் ஆயிரக்கணக்கான கோள்களைச் சந்திக்கின்றான்.
4. ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் இல்லை – இவைதான் ஜாதகத்தின் நிலைகள்,
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு எண்ணங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றான். உதாரணமாக, முன்னால் நடந்து கொண்டே இருப்பான். அவன், “இங்கே அங்கே” ஆடிக்கொண்டே சென்றால், நாம் “அவன் போகிற போக்கைப் பார்” என்கின்றோம்.

நம் உணர்வு, அவன் வெளியிடக்கூடிய அலையை இந்தக் கண், (கண்ணன்) கருவிழி (ருக்மணி), இந்தப் படத்தை எடுக்கின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் (சத்தியபாமா), அவனது உடலில் இருந்து வரக்கூடிய அந்த உணர்வை, கண்ணின் இரண்டாவது சக்தி இழுக்கின்றது.

அது இழுத்தவுடன், அவன் போகிற போக்கைப் பார் என்று, இந்த உணர்வு நம்மைப் பேச வைக்கின்றது அல்லது அதை நினைக்க வைக்கின்றது. அதைச் சுவாசிக்க வைக்கின்றது.

அடுத்து நாம் போய்க் கொண்டே இருப்போம், பஸ் அங்கே வந்துகொண்டு இருக்கும். இவர் ஆனந்தமாக சினிமா போர்டை பார்த்துக் கொண்டு செல்வார். இங்கே பஸ் வருவது தெரியாது.

இது இரண்டையும், பின்னால் நாம் பார்த்துக் கொண்டு செல்வோம். அவன் தப்பாக அங்கே ரசித்துக் கொண்டு செல்லுகின்றான். அந்த உணர்வின் நிலைகள் அங்கே நிறுத்துகின்றது. பஸ்ஸும் அங்கிருந்து வருகிறது. இவன் வருவது தெரிந்து, ஹாரனும் அடிக்கின்றான்.

இவன் வேறு உணர்வுடன் இருக்கும்போது, ஹாரனும் சரியாகக் கேட்கவில்லை. நாம் இரண்டையும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பார்த்துக் கொண்டிருக்கின்ற பொழுது,
“அடிபட்டுவிடுவானோ”, என்று எண்ணியவுடன்
இந்த உணர்வு “பட பட” என்று வருகின்றது.
அவன் வந்தவுடன் துடி துடி என்று துடிதுடிக்கின்றது.
இந்த உணர்வுகள் கிடு கிடு என்று ஆகிறது.
இந்த இடத்தில் இராசி என்ன செய்கிறது?

இந்த இடத்தில் இராசி அறுவடை பண்ணுகின்றது. உள்ளுக்குள் போகின்றது. ஒவ்வொரு நிமிடமும், அந்த எண்ணத்தை நாம் எடுத்துக் கொண்டால், நாம் நினைவுபடுத்தும்போது, இந்த இராசியையே சுவாசிக்கின்றோம்.

நாம் எதனுடைய நிலைகளில் எடுத்துக் கொள்கிறோமோ, அதுவாகிறோம். ஏனென்றால் இது வகுத்துக்கொண்ட நிலைகள்.

ஆனால், எல்லா வாஸ்துவும் ஜாதகமும் சரியில்லை என்று சொன்னால், அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
அதற்குத் தகுந்த சமூகத்திற்குள் வரப்படும்போது,
நான்குபேர் சேர்ந்து சொல்லும் போதுதான்
இந்த உணர்வுக்குச் சக்தி.
இல்லையென்றால் இல்லை.
அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், “இராசி” வேலை செய்யாது. இவைதான் ஜாதகத்தின் நிலைகள்.
5. இயற்கையின் இயக்க நிலைகள்
இதைப்போல,கோள் போகும் பாதையில்தான் எடுக்கின்றது. இந்தக் கோள் போகும்போது, பாதையில் அடுத்த கோள்களிலிருந்து எடுக்கின்றது.
இவன் எடுத்துக் கொண்டான். அது அறியாமை.
பஸ்ஸின் நிலைகள் வந்தவுடன் “ஆ” என்று நாம் பயப்படுகின்றோம்.
அவன் அடிப்பட்டு சாகிறான்.
அந்த உணர்வில் அவன் அடிப்பட்டு சாகும்போது
நம் கண் பார்த்து, அந்த உணர்வை, நமக்குள் உணர்த்துகிறது.
உணர்வு உமிழ்நீராகி, சத்து நமக்குள் சேர்கிறது.
நாம் தப்பே பண்ணவில்லை. ரோட்டில் போகின்றோம்.
அவற்றை உணர்வுகள் எடுத்துக் கொள்கிறது.

ஆனால், அந்த உணர்வினுடைய இயக்கம் இல்லையென்றால், இயக்கம் இல்லை. இதைப்போன்ற நிலைகள்தான் இயற்கையின் நிலைகள்.
ஆகையினாலே ஜாதகம், ஜோஸியம் எல்லாம் நம் பழக்கத்தில் வந்ததது. இருந்தாலும் ஊரை ஒத்து வாழ்வதால், அதை ஒதுக்கிவிட வேண்டாம். ஒதுக்கிவிட்டால், பக்கத்தில் இருப்பவர்கள் உடனே ஞாபகப்படுத்துவார்கள். நீங்கள் பார்க்காமல் இருந்தால்,
“என்னய்யா இந்த நேரத்தில் பண்ணுகிறீர்கள்” என்று சொல்லி,
உணர்வைத் தூண்டி
அந்த நினைவை ஊட்டி விடுவார்கள்.

அதை ஒத்து நாம் வாழ்ந்து விட்டோம். இருந்தாலும் ஊரை ஒத்து வாழுங்கள். அதே சமயம் துன்பங்கள் ஏற்பட்டால், யாகமோ, வேள்விகளோ செய்ய வேண்டாம். ஆத்மசுத்தி செய்து கொள்ளுங்கள்.
6. ஜாதகம் பார்த்து, மற்றவர்களை வைத்து பரிகாரம் செய்வதால் ஒன்றும் ஆகப் போவதில்லை
வேள்விகள், யாகம் என்பது, நம் புருவ மத்தியில் உயிரின் நிலைகளில் “ஈஸ்வரா” என்று நினைவைக் கூட்டுங்கள்.

“அந்த மெய்ஞானியின் அருளைப் பெறவேண்டும்” என்று எண்ணுங்கள்.
 “மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெற வேண்டும்”.                              

“எங்கள் சொல்லாலும், பேச்சாலும், எல்லாம் நலம் பெற வேண்டும்” என்று இந்த உணர்வை யாகத்தீயில் போடுங்கள்.

“மலரைப் போல மணம் பெற வேண்டும்”
“கனியைப் போல இனிமையான சொற்கள் வரவேண்டும்”

“சந்தனத்தைப் போல மணம் வீசவேண்டும்” என்ற நிலைகளை எடுத்து யாகத்தீயை மூட்டுங்கள்.

“ஓம் ஈஸ்வரா என்று சந்தனத்தின் நல்ல நறுமணத்துடன் பேசுங்கள்”. அந்த உணர்வைச் சுவாசியுங்கள். இதே உணர்வு கொண்டு என் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று எண்ணிச் செயல்படுங்கள். இந்த யாகத்தீயை மூட்டுங்கள்.

பொருளை மற்றவரிடம் கொடுத்து, நீங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் சொல்லி, உங்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.
7. மெய்ஞானிகள் காட்டிய உண்மையான அபிஷேகமும் வேள்வியும்
நீங்கள் இந்த உணர்வைச் சுவாசித்து, உங்களுக்குள் இருக்கக்கூடிய ஈசன், அந்த மணத்தை உடலுக்குள் செலுத்துகிறான். இந்த உணர்வின் தன்மை உமிழ்நீராக மாறி, சிவன் அதை ஏற்றுக்கொள்கிறான்.

ஆக, நாம் அபிஷேகம் செய்வது, நம் ஈசனுக்கு. நம் உடலுக்குள் வீற்றிருக்கும் நல்ல குணங்களுக்கு இந்த அலைகள் பட்டவுடன், உடலிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் கிடைக்கின்றது. இதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆகையினாலே, ஒவ்வொருத்தரும் நீங்கள் உங்களை நம்புங்கள். உங்களுக்குள் இருக்கக்கூடிய ஈசனை மதியுங்கள். அவன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம் என்று கருதுங்கள்.

துன்பத்தை ஊட்டும் உணர்ச்சிகளை யார் தூண்டினாலும்,
அதை உங்கள் உடலிலே சேர்க்காமல் தடுத்து விடுங்கள்.
அவ்வாறு தடுப்பதற்கு, ஈசனின் நிலைகள் கொண்டு “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அதனின் ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு, உங்களைச் சுத்தப்படுத்த இது உதவும். எமது அருளாசிகள்.