ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 7, 2013

கல்வியில் சிறந்தவர்களாக நம் பிள்ளைகள் வளர நாம் தியானிக்க வேண்டிய முறை

நமது குடும்பத்தில், குழந்தைகள் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, சந்தர்ப்ப பேதத்தால் படிப்பு குறைந்து போனால், “ஐயோ, நன்றாகப் படித்துக் கொண்டிருந்த குழந்தை, இப்படி ஆகிவிட்டதேஎன்று வேதனைப்பட்டு, குழந்தைகளை எண்ணவே கூடாது.

அந்த மாதிரி சொற்கள் வந்தாலே, “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த மாதிரி, நம் உடலுக்குள் அதைச் செலுத்தி, குழந்தையை நினைத்து, அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும், துருவ மகரிஷியின் அருள் சக்தியும், சிந்தித்துச் செயல்படும் அந்த சக்தி பெற வேண்டும், நல்ல மனவலிமை பெறவேண்டும், கல்வியில் சிறந்த ஞானம் பெறக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும், என்று நமது உடலில், இதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் இதை எண்ணினாலே போதும்

கல்வியில் சிறந்த மாணவனாக, மாணவியாக வர வேண்டும் என்று நாம் குழந்தைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வோடு பார்த்து, நீ வெற்றி பெறுவாய், தேர்வில் முன்னனியில் வருவாய், என்று மனதில் எண்ணிப் பார்த்தால் போதும்.

பள்ளிக்குப் போகும் பொழுது, ஆசீர்வாதம் கேட்டால், இதே போன்று சொல்லால் சொல்லி, அந்த உணர்வைப் பாய்ச்சி அனுப்ப வேண்டும்.

அதே சமயத்தில், குழந்தைகள் மற்ற நேரங்களில், சில செயல்களில் அவர்கள் உணர்வுக்குத்தக்கச் சில குறைபாடுகள் வருகிறது என்றால், அந்த உணர்வு நமக்குள் வந்துவிடும்.

அந்த உணர்வு நமக்குள் வராதபடி, “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்

பின் பையனை எண்ணி,
சிந்தித்துச் செயல்படும் சக்தியும்,
மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும்,
மகிழச் செய்யும் உணர்வுகளும் அவனுக்குள் வளரவேண்டும்.
தெளிந்த மணமும், தெளிவான நிலை அவன் பெறவேண்டும் என்று
அவன் உணர்வை எடுத்து,
நமக்குள் மாற்றி உருவாக்கிவிட்டால்,
அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
இந்த நல்ல எண்ணங்கள் வரும்.

இல்லாவிடில், குறை வந்துவிட்டால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் கோபம் வரும். நம் உணர்வு அவன் மேல் பாயும். 

அப்பொழுது, அந்த உணர்வின் எண்ணங்கள் அவன் மீது, “இப்படியே பண்ணிக் கொண்டிருக்கிறானே”, என்ன ஆகப்போகிறானோ?” என்று எண்ணும் போது, அவன் சிந்தனை பூராவுமே குறைக்கப்பட்டு, அவன் சிந்திக்கும் தன்மையையே இழந்து விடுகிறான்.

அதனால், நாம் இந்தக் குடும்பங்களிலே அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை, நாம் ஒவ்வொரு நொடியிலேயும் நம் உடலுக்குள்ளேயும், குழந்தைக்குள்ளேயும், தொழில் செய்யும் பொழுதும், எடுத்துப் பழக வேண்டும். எமது அருளாசிகள்.