வெளிச்சத்தைக் காட்டும் பொழுதுதான் பொருள் தெரிகின்றது.
ஆகவே, தெரிந்து உணர்வது வெளிச்சம். அதுதான் தீபாரதனை.
அந்த மணத்தை நுகரவேண்டும் என்பது துவைதம்.
சுவாசிப்பது அத்வைதம்.
பார்ப்பது சிவம்.
நாம் அதிலிருந்து எடுப்பது சக்தி.
சுவாசிக்கும் பொழுது சக்தியின் இயக்கம்.
என் உடலுடன் சேர்க்கும் பொழுது சிவம்.
இதுதான் “ஓம்
நமசிவாய, சிவாய நம் ஓம்”.
ஓம் என்பது சக்தி
சக்தியின் உணர்வின் வேகம் எதுவோ, அந்த உணர்வின் தன்மை
எனக்குள் ஆகும் பொழுது, அந்த சக்தியின் நிலைகள் எனக்குள் உடலாக மாறுகின்றது – சிவம்,
“ஓம் நமச் சிவாய” நமதாக மாறுகின்றது.
நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ, அது உயிரிலே பட்டவுடன்
“ஓங்காரம்” இயக்கம். அந்த உணர்வின் அலைகள் நமக்குள் சேர்ந்து, அது உமிழ்நீராக மாறி,
நம் உடலுடன் சேர்க்கப்படும் பொழுது, “ஐக்கிய சிவம்” என்று இவ்வாறு பொருள்பட, அன்று
சிவ சக்தியின் தன்மையை மெய்ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
துவைதம் என்பது, பொருள் எதுவோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள்
கூட்ட வேண்டும். கோவிலிலே, அந்த மலரின் மணத்தை நாம் நுகரும் .பொழுது, அந்த மலரின் உணர்வின்
மணம் “ஈசன்”.
அந்த மலரின் உணர்வின் சத்து உடலுடன் சேர்க்கப்படும் பொழுது,
சிவனுக்கு “அமுது”. ஆக, ஈசனுக்கு மணம், இங்கே சிவனுக்கு அமுது.
கண் புலனறிவுக்கு, உடல், மற்றவைகளுக்கும் அந்த உணர்வின்
இயக்கமே, நாம் அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைகள். இதைத்தான்
ஒவ்வொரு பாகமாகப் பிரிக்கப்பட்டு,
உடலின் உறுப்பின் தன்மை செயலாக்கும் பொழுது,
அதற்கு தெய்வ வடிவைக் கொடுத்து,
ஆற்றல்மிக்க பெயரைக்
கொடுத்து வைத்தான் ஞானி.
ஒரு இயந்திரத்தை நாம் பார்க்கும் பொழுது, இது பல் சக்கரம்,
(gear, pinion, sprocket, chain) இது இன்னென்ன என்று பெயர் வைக்கிறோம். இதைப் போன்று,
நம் உடலின் உறுப்பின் தன்மையின் செயலாக்கத்திற்கு, சக்தியின் நிலையும், ஒவ்வொரு குணத்தின்
ஆற்றலினுடைய நிலைகளுக்கு அன்று மெய்ஞானிகள் பெயர் வைத்தார்கள்.
ஆனால், இதை விடுத்துவிட்டு தெய்வம் எங்கேயோ இருக்கிறது
என்ற நிலைகளில், மொட்டை போடுகின்றேன், அதைக் கொடுக்கின்றேன், இதைக் கொடுக்கின்றேன்
என்று நமக்குள் வேண்டி வருத்தி, நம்மையறியாத நிலைகளில் நம்மைத் தாழ்த்திக் கொள்கின்றோம்.
முடிகொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, முடி கொடுக்கப்
போக முடியவில்லை என்றால், ஜோசியக்காரனிடம் செல்கிறார்கள்.
“ஆண்டவனுக்கு நீ வேண்டியிருக்கின்றாய்,
காணிக்கையைச் செலுத்தவில்லை,
அதனால்தான் துன்பம்” என்பார்.
ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தாதினால், துன்பத்தை உண்டாக்கி
உன்னை வரவழைக்கின்றார் என்பார். இவைகளெல்லாம், நமக்கு வேண்டாத வேலைகள். ஆக, ஆண்டவன் என்பது யார்?
நம் உயிர்தான் நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றது. ஆனால், அவனன்றி
ஒரு அணுவும் அசையாது. இந்த உயிர் உடலில் இல்லையென்றால் எது அசையும்?
நாம் என்ன செய்கின்றோம்? அவனன்றி ஒரு அணுவும் அசையாது
என்று விண்ணைக் காட்டுகின்றோம். “அவனன்றி அணுவும் அசையாது” என்று சுருக்கமாகச் சொற்றொடர்களைச்
சொன்னால், நாம் வானத்தைக் காட்டி, “எல்லாமே அவன்தான்” என்கிறோம்.
அவன் உடலுக்குள்
இருக்கின்றான். இங்கே உடலை இயக்குகின்றான் என்ற நிலையை, அன்று ஞானிகள் உணர்த்தினார்கள்.
அன்று அண்டத்தினுடைய நிலைகள் செயலாக்கினாலும், அண்டத்தினுடைய
நிலைகள் பிண்டத்திலிருந்து உணர்வின் இயக்கமாக இயங்குகின்றது. நினைவு கொண்டு அது இயக்குகின்றது.
அந்த உணர்வு சந்தர்ப்பத்தாலே இயங்குகின்றது. அதைச் சந்தர்ப்பத்தாலேதான்
இயக்க முடியும். அதே சமயத்தில், சந்தர்ப்பத்தை ஊட்டும் தன்மை மனிதனுக்கு உண்டு. சந்தர்ப்பத்தை நாம்
ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், அது (அண்டம்) சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. அது
போகும் பாதையில் சந்தர்ப்பங்கள், சந்திக்கும் நிலையில்தான் உருமாற்றம், இனைமாற்றம்,
மற்ற மாற்றம் எல்லாமே.
நம்முடைய ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, எந்த சந்தர்ப்பத்திலும்
நமக்கு வேண்டியதை நம் உடலுக்குள் மாற்றிக் கொள்ள முடியும். ஆக, இத்தகைய ஆற்றல், இந்தப்
பிண்டத்திற்குள் (நம் உடலுக்குள்) இருக்கின்றது.
அன்று மெய்ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை, தெய்வச்
சிலையாகக் காட்டி, அந்த மணத்தை எடு என்று, அந்த குணத்தைக்
கதையாகக் காட்டி உன் உணர்வுக்குள் சேர்த்துக் கொள் என்றார்கள். இந்தத் தெய்வம் நல்லது
செய்கிறதென்றால், அந்த குணத்தை நுகர்ந்து, நல்லது செய்யக்கூடிய நிலைகளை எடு என்றார்கள்.
ஆகவே, அந்த ஞானிகள்
காட்டிய அருள் வழிப்படி, நாம் அனைவருமே அந்த தெய்வ குணத்தைப் பெறுவோம், தெய்வ சக்தியை வளர்ப்போம், எமது அருளாசிகள்.