ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 1, 2013

சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் - விளக்கம்

1. கண்ணிலே பார்ப்பது சித்திரம் – சித்திரபுத்திரனாக ஆகின்றது
நமது குருநாதர், இந்த இயற்கையின் நிலையை “ஒரு உயிராத்மா அணுவிற்குள் அணு சென்று எவ்வாறு செயல்பட்டது?” என்று நேரடியாகவே எமக்கு உணர்த்தி, அதை எண் கண்ணாலேயே பார்க்கச் செய்தார்.

இதைப் போன்று கண்டறிந்த உண்மையினுடைய நிலைகள், நாம் மனித வாழ்க்கையில் எப்படி இருக்கின்றோம் என்பதைப் படம் பிடித்தது போல, நமது குருநாதர் காட்டிய அருள்வழியில், யாம் பார்த்ததை, எமக்கு உணர்த்திய அருள் வழிப்படியே உங்களுக்கு உணர்த்தி வருகின்றோம்.

மேலும், உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் தீய உணர்வுகளிலிருந்து நீங்கள் மீண்டு, அந்த மெய் ஒளியான ஞானியின் அருள் ஒளியைப் பெறுவதற்குத்தான், இதை யாம் செயல்படுத்துகின்றோம்.

அன்று மெய்ஞானிகள் காட்டிய நிலைகளில், “சித்திரபுத்திரன்” என்று உணர்த்தியுள்ளார்கள். சித்திரம் என்பது, நாம் கண்ணிலே பார்ப்பது அனைத்தும் சித்திரம்தான். ஒரு நல்ல படத்தைப் பார்த்தபின் மகிழ்கின்றோம். வெறுப்பான படத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுழிக்கின்றோம். இதைப் போன்றுதான்,
மற்றவர்களின் செய்கைகளை
நாம் கண்ணிலே பார்த்து, சுவாசித்து,
உடலான நிலைகளில் சத்தாகும் பொழுது,
சித்திரம் – புத்திரனாகின்றது.
அந்த குணம் என் உடலுக்குள் குழந்தையாக,
என்னுடன் இயங்குகின்றது.
2. உயிராத்மாவிலே சேரும் பொழுது, கணக்காகின்றது
அது விளைந்தபின், என் உயிராத்மாவிலே போய்ச் சேர்கின்றது. அந்த உயிராத்மாவிலே சேர்ந்தவுடன், சித்திரபுத்திரன் கணக்கு, அது விளைந்தவுடன் கணக்காகிப் போகின்றது.

நாம் ஒரு செடியை வயலில் வளர்த்தவுடன், அந்தச் செடி முளைத்து, பருவத்திற்குத் தக்கவாறு நன்றாக இருக்கின்றது. அது விளைந்து அந்த நெல்பயிர்கள் அதிகமாகும் பொழுது, இராசி நன்றாக இருக்கின்றது என்று சொல்வது போன்று, நாம் ஒருவர் மேல் வெறுப்போ, கோபமோ, சலிப்போ, சஞ்சலமோ, சங்கடமோ, இவையெல்லாம், பிறரைப் பார்க்கும் பொழுதெல்லாம், கோபமான உணர்வை எடுத்துக் கொள்வோம்.

பிறர் மகிழ்ச்சியான நிலைகளில் இருந்தால், நாம் வெறுப்போம். ஏனென்றால், இந்த வெறுப்பின் அலையே நம் முன்னாடி இருக்கும். ஆக, இதைப் போல சித்திரபுத்திரன் என்று, எந்த உணர்வைக் கண்ணிலே பாய்ச்சுகின்றோமோ, அந்த உணர்வுக்குத் தக்கவாறுதான், எதிரில் உள்ள நிலைகளைப் பார்க்கின்றோம்.

ஆகையினாலேதான், சித்திரபுத்திரன் கண்ணிலே பார்க்கக் கூடிய இந்த உணர்வின் சத்து, நமக்குள் சுவாசிக்கச் செய்யும் பொழுது,
உயிரிலே பட்டு இந்த உணர்வுகள் உமிழ்நீராக மாறி,
உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது,
அந்த குணத்தின் உணர்வின் சத்து
எனது குழந்தையாக மாறுகின்றது,

எந்த குணத்தின் தன்மையை எடுத்தேனோ, எப்படி நான் வெளியிலே பேசினாலும், குணத்திற்குத்தக்கவாறு, நான் கோபமோ, சண்டையைச் செயல்படுத்தச் செய்தேனோ, அந்த குணத்தின் சத்தான நிலைகள் என் உடலுக்குள் வியாதியாக மாறி, “அம்மா.., அப்பா..,” என்று வேதனைப்படச் செய்யும்.

அவர்கள் எப்படி வேதனைப்படவேண்டும் என்று பேசினோமோ, அதன் நிலைகளில் “அம்மா.., அப்பா..,” என்போம். சித்திரபுத்திரன் நாயகனாகின்றது. நம் உடலுக்குள் ஆட்சி புரிய ஆரம்பித்துவிடுகின்றது. அது விளைந்தபின், உயிராத்மாவில் போய்ச் சேர்ந்துவிடுகின்றது.

நாம் விளைய வைத்த நெல் பயிராகும் பொழுது, அதை எப்படி இராசி என்கிறோமோ, இதைத்தான் இங்கு கணக்கு என்கிறோம், அளந்து பார்ப்பது.

அதைப் போன்று, நம் உயிராத்மாவில் சேர்ந்தவுடன் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம், நீ அடுத்த உடல்  பெறப்போகின்றாய் என்பதைத்தான், சித்திரபுத்திர நாயகன்,
சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம்
எமன் தண்டனை கொடுக்கின்றான்.
3. பாசக்கயிறு
எமன் என்பது, அவனிடத்திலே இருக்கக் கூடிய பாசக்கயிறு.
நாம் எந்தெந்த குணத்தை எண்ணத்தால் எடுத்தோமோ,
அந்த எண்ணத்தாலே நாம் சுவாசித்ததுதான்,
எதைக் கண்ணிலே பார்க்கின்றோமோ,
அந்த உணர்வின் குணம், நமக்குள் எண்ணமாக மாறுகின்றது.
அந்த எண்ணத்தை நாம் அடிக்கடி எண்ணும் பொழுது, தொடர்ச்சியாக இருக்கின்றது,

அடிக்கடி “பாவிப்பயல், இப்படிச் செய்தான்,
பாவிப்பயல் இப்படிச் செய்தான்”,
எனது துன்பம் என்னைவிட்டுப் போகவில்லை,
மறுபடியும், துன்பம் என்னைவிட்டுப் போகவில்லை, என்று
ஜெபத்தைச் செய்யும் பொழுது,
இது பாசக்கயிறு, அதன் மேல் பாசம்.
ஏனென்றால், அதைப் பேசினால்தான், நமக்கு நிம்மதியாக இருக்கும். அதனால்தான் பாசக்கயிறு என்பது.

ஆக, எமனுடைய பாசக்கயிறு என்ன செய்கின்றது? நமக்குள் இது விளைந்து, அது முழுவதும் விளைந்த நிலைகள்தான். அந்த எண்ணம்தான், அந்தக் கணக்கின் பிரகாரம் நமக்குள் வளர்ந்து, அந்தப் பாசக்கயிறுதான் எமன்.

எமனுக்கு வாகனம் எது? எருமை. அது சிந்தனையற்ற நிலைகள் கொண்டு, இது பள்ளமோ, மேடோ என்று தெரியாது. முரட்டுத்தனமாகப் போகும். அடிபட்டபின்தான், அதற்கு வேதனை தெரியும். அதனால்தான், அந்த எருமையினுடைய தன்மையைப் போட்டு, எமனுக்கு வாகனம் எருமை என்று காட்டப்பட்டது.

நாம் சிந்தனையற்ற நிலைகளில் ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சிந்தனையை நாம் சிதறடையச் செயும் பொழுது, அந்த நற்குணத்தின் தன்மை மாறி, மாறிய நிலைகள் கொண்டு, நாம் உருப்பெறுகின்றோம்.
4.  நம்முடைய எண்ணம்தான் அடுத்த உடலைச் சிருஷ்டிக்கின்றது
சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம், எமன் தண்டனை கொடுக்கின்றான். “நம்முடைய எண்ணம்தான்” அடுத்த உடலைச் சிருஷ்டிக்கின்றது என்ற நிலையும், எமலோகத்தைச் சிருஷ்டிக்கின்றது என்றார்கள் ஞானிகள்.

நாம் எந்தெந்த குணத்தை எடுத்தோமோ, அதற்குதகுந்த உடலைப் பெற்றுவிடுகின்றோம். மனித உடலல்லாது, வேறொரு நிலைகளில் போகின்றோம்.

எமன் என்ன செய்கின்றான்? இன்று நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்ட வேதனையான நிலைகள் கொண்டு, நமக்குள் சேர்த்தவுடன், நெருப்பைவிட்டு எரித்தவுடன், நமக்குள் “தக தக” என்று வேதனை தாளாது எரிகின்றோம்.

இந்த எரிச்சலால், தாங்க முடியாத நிலைகளில் இருக்கின்றோம், இதைப் போல, ஒரு குடும்பத்தில் எரிச்சலான நிலைகள் கொண்டு ஒருவர் துடிக்கின்றார் என்றால், வேதனையுடன் “இப்படிச் செய்கிறார்களே, பாவிகள்”, என்று எரிந்து விழுந்து “பாவிகள் உருப்படுவார்களா” என்று ஏக்கத்தில் அடிக்கடி பேசினால் போதும்.

ஒருவருக்குத் துன்பத்தை உருவாக்குவார். அதே சமயத்தில் இந்த எரிச்சலின் நிலைகள் கொண்டு அங்கே ஏங்கப்படும் பொழுது,
இதைப் போன்று தீயை வைத்து இறந்து போன அந்த ஆத்மா
இவர் ஏக்கத்திற்குள் அங்கே செல்கின்றது.
அந்த உடலையும், நெருப்பை வைத்து கொளுத்திக் கொள்ளும்.

இந்த உணர்வின் தன்மையை மற்றவர்கள் எண்ணும் பொழுது, அந்த உடலிலும் இந்த உயிராத்மா எரிச்சலுடன் சென்றவுடன், “ஐய்யய்யோ.., எரிகிறதே. எரிகிறதே..,” என்பார்கள்.

டாக்டரிடத்தில் சென்று பரிட்சித்துப் பார்த்தால், ஒன்றும் இருக்காது. ஆனால், எனக்கு எரிகிறது, இங்கே எரிகின்றது, இங்கே எரிகின்றது என்பார்கள். இந்த உயிராத்மா அந்த லோகத்திற்குள் போனாலும், அந்த உணர்வுக்குள் உயிரணுவாக இருக்கும் பொழுது, ஒன்றும் தெரியவில்லை.

ஆனால், உயிரணுவினுடைய நிலைகள் அந்த உடலுக்குள் போனவுடன், எரிச்சலை ஊட்டி, அந்த எரிச்சலான நிலைகளை அங்கே செயல்படுத்துகின்றது. நாம் எடுத்துக் கொண்ட எண்ணம் எமனாகும் பொழுது, எமன் என்ன செய்கின்றான்?

அங்கே தீச்சட்டிக்குள் போட்டு வாட்டுகின்றான் என்று காட்டுகின்றார்கள். அதே மாதிரி, அந்த தீச்சட்டிக்குள் போட்டு, “ஐயோ., அப்பா.”, என்றால் முடிகிறதா?
5. சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம், எமன் தண்டனை கொடுக்கின்றான்
நாம் இந்த உடலில் இந்த எரிச்சலை எடுத்து, இப்படிப் பேசினார்களே என்று, “எரிந்து எடுத்துக் கொள்ளக் கூடிய எண்ணம்” எமனாக வருகின்றது.

ஆக, அந்த உணர்வுகள் எனக்குள் வந்தவுடன், சீக்கிரம் விளைந்துவிடுகின்றது. அந்தச் சித்திரபுத்திரன் என்ன செய்கின்றான்? கணக்குப் பிரகாரம் நீ முடித்துக் கொள் என்று, எமனிடம் ஒப்படைத்துவிடுகின்றான். கணக்குப் பிரகாரம்தான் நமக்குள் இது முடியும்.

இந்த உயிராத்மாவில் வளர்ந்தபின், இன்னொரு உடலுக்குள் சென்று, அங்கேயும் “ஐய்யய்யோ, எரிகிறதே” என்று எரியச் செய்து,
அந்த உடலையும் மாய்த்து,
இந்த எரிச்சல் கொண்ட உணர்வு கொண்ட
ஒரு மிருகமாகப் பிறக்கும்.
அதை யாரொருவர் தொட்டாலும் எரிச்சலாகும்.

ஆக மொத்தம், எல்லாவற்றையும் எரிக்கும் நிலையில்தான் வருகின்றது. இதுதான், சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்பது.