ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2013

ஈஸ்வரலோகம், பார்வதி பஜே நமச்சிவாய...!

1. ஈஸ்வரலோகம், இந்திரலோகம், பிரம்மலோகம்
நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும், நம் உடலுக்குள் “ஊழ்வினை” என்ற வித்தாக மாறுகின்றது. உயிர் ஈசனாகின்றது. உடல் சிவமாகின்றது. உடலுக்குள் இருக்கும் நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் “வினை” ஆகின்றது, “விநாயகா”, நுகர்ந்த உணர்வின் இயக்கங்களே “வினை”.

நாம் கோபப்படுவோரை உற்றுப் பார்த்தால், அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது, அந்தக் கோப உணர்ச்சிகள் நமக்குள்ளும் தூண்டப்பட்டு, அந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலந்து, நம் உடலுடன் ஐக்கியமாகி விடுகின்றது. அது நாளடைவில் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது, கருவாகி விடுகின்றது. ஆகவே, உயிரின் பாகம் “ஈஸ்வரலோகம்”.

அவ்வாறு, சிரசின் பாகம் நமது உயிர், அணுவாக உருவாக்கும் கருவாக உருவாக்கி விட்டால், அது இரத்தங்களிலே கருத்தன்மை அடையும் பருவம் வரும் பொழுது, “இந்திரலோகம்”.
கருத்தன்மை அடைந்து அணுத்தன்மையாகி வெளிப்படும் பொழுது, “பிரம்மலோகம்”. அதாவது சூட்சுமமாய் இருந்த ஆவித்தன்மை, ஒரு அணுத்தன்மை அடையும் பொழுது “பிரம்மலோகம்”.

நாம் கோப குணத்தின் உணர்வின் தன்மை பெற்று, அணுவாக வெடித்து விட்டால், அந்த அணு
உயிரைப் போன்றே இயக்கம் “ஈசன்”,
ஏற்படும் துடிப்பு “விஷ்ணு”,
ஈர்க்கும் காந்தம் “லட்சுமி”.

எந்த குணத்தின் தன்மை கொண்டு, இயக்க குணமாக ஜீவ அணுவாக உருவாகியதோ, அந்த உணர்வின் தன்மை கொண்டு, கார உணர்ச்சியைத் தூண்டும், கார உணர்வுகளை, உணவாக உட்கொள்ளும் அத்தகைய அணுத்தன்மை. அடைகின்றது. அவ்வாறு அணுவாகி விட்டால், அது தன் இனத்தையே உருவாக்குகின்றது.

ஒரு வித்தினை ஊன்றி, செடியினை வளர்த்தால், அதில் பல வித்துக்கள் வருவது போல, இந்தக் கார உணர்வுகளை ஊட்டக்கூடிய அணுக்கள், தன் இனத்தையே பெருக்கி விடும்.

இதைத்தான் மாமகரிஷிகள், ஓர் அணுத்தன்மை அடைந்தால் “பிரம்மம்” என்றும், பிரம்மாவின் மனைவி “சரஸ்வதி”. அந்த அணு கார உணர்வு கொண்டு உடலானால், அதன் சக்தி, காரத்தின் உணர்ச்சியை வெளிப்படுத்தி, அதன் ஞானமாக விளையச் செய்யும் என்று பொருள்படும்படி உரைத்தனர்.
2. பார்வதி பஜே நமச்சிவாய
சுவையின் உணர்வு உடலாக்கப்படும் பொழுது “பார்வதி பஜே நமச்சிவாய”. அந்த உணர்வின் இயக்கமாக இயக்கி, உடலாக மாற்றுகின்றது.
தன் பார்வையில் பட்ட உணர்வுகள் பதியாக,
தன்னுடன் இணைந்து வாழ்கிறதென்றும், 
பார்வையில் பட்ட சக்தி என்ற நிலைகள்
சிவமாகின்றது, என்றும் தெளிவாக்கினர்.
3. அரங்கநாதன், ஆண்டாள், நம்மாள்வார்
நமது உயிர், “ஓ” என்று இயங்கிக்கொண்டே உள்ளது. நாம் எதைப் பார்க்கின்றோமோ, கேட்கின்றோமோ, எண்ணுகின்றோமோ, நுகர்கின்றோமோ, இவை அனைத்தையும் நமது உயிர்
“ஓ” என்று பிரணவமாக்கி
“ம்” என்று ஜீவ அணுவை உருவாக்கும் அணுக்கருவாக
விளையச் செய்கின்றது.

நாம் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, நுகரப்படும் பொழுது, நமது உயிர், நாம் நுகர்ந்த உணர்வின் தன்மைகளை நாதங்களாக இயக்கி, (அரங்கநாதன்) நுகர்ந்த உணர்வின் தன்மையை வைத்து, நம்மை ஆளுகின்றது, ஆண்டவனாக இயக்குகின்றது.

உடல் ஒரு அரங்கம், நமது உயிர், “அரங்கநாதனாக” அரங்கத்திலிருந்து, நுகரும் உணர்வுகளை நாதங்களாக அனுப்புகின்றது. நாதத்தின் இயக்கமே உணர்ச்சிகள். “ஆண்டாள்”.
உதாரணமாக, நாம் கோபத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது, அந்த உணர்ச்சிதான் நம்மை ஆளும். அதைத்தான், “ஆண்டாள்” என்று காரணப் பெயரிட்டு அழைத்தனர்.

அந்த உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணி, அணுவானால் அதே உணர்வுகள் நம்மை ஆளும். அதைத்தான், “நம்மாள்வார்” என்று காரணப் பெயரை வைத்தனர்.